Friday, January 18, 2019

'வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை

Added : ஜன 18, 2019 03:47 |




நாக்பூர்: மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில், ஒரு தம்பதிக்கு, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் மூலம் விசாரணை நடத்தி, விவாகரத்து வழங்கப்பட்டது.

பிரச்னை:

மஹாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் குடும்ப நீதிமன்றத்தில், விவாகரத்து கோரி, ஒரு தம்பதி மனு தாக்கல் செய்திருந்தது. நாக்பூரைச் சேர்ந்த, 37 வயதான கணவன் மற்றும் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாதைச் சேர்ந்த, 35 வயதாகும் மனைவி, அமெரிக்காவின் மிச்ஸிகனில் வசித்து வந்தனர். அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர்களுக்கு, 2013ல், திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பின், நாக்பூரில் உள்ள கணவனின் வீட்டுக்கு வந்தபோது, மாமியார் உள்ளிட்டோருடன், அந்த பெண்ணுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது, கணவன், மனைவிக்கு இடையேயான பிரச்னையாக மாறியது. இதையடுத்து, விவாகரத்து கோரி, நாக்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, சமீபத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, விடுமுறையில் வந்த கணவன், நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், தற்போது, கல்வி, 'விசா'வில் சென்று உள்ளதால், மனைவியால் நேரில் ஆஜராக முடியவில்லை.

இழப்பீடு:

இதையடுத்து, வாட்ஸ்ஆப் சமூக வலைதளத்தில், வீடியோ அழைப்பு மூலம் விசாரணை நடத்தக் கோரப்பட்டது. அதை ஏற்று, வீடியோ அழைப்பு மூலம், மனைவியிடம் விசாரணை நடத்திய, நாக்பூர் நீதிமன்றம், விவாகரத்து வழங்கியது. 'கணவர், 10 லட்சம் ரூபாயை, மனைவிக்கு இழப்பீடாக அளிக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024