Tuesday, January 22, 2019

தலையங்கம்

பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரளும் எதிர்க்கட்சிகள்



வரும் ஏப்ரல்–மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல்களை காணஇருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே இப்போதே ஒரு பரபரப்பு தொடங்கிவிட்டது.

ஜனவரி 22 2019, 03:30

பா.ஜ.க.வுக்கு எதிராக ஓரணியில் நிற்க எதிர்க்கட்சிகள் தயாராகிவிட்டன. கடந்த டிசம்பர் 16–ந்தேதி சென்னையில் கருணாநிதி சிலை திறப்புவிழா நடந்தபோதே இதற்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டன. அடுத்தகட்டமாக மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை மிகப்பெரியளவில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மதசார்பற்ற ஜனதாகட்சி தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடா, தெலுங்குதேசம் கட்சித்தலைவர் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு, காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன்கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்–மந்திரியுமான அரவிந்த்கெஜ்ரிவால், சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ்யாதவ், காஷ்மீர் மாநில தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக்அப்துல்லா, பா.ஜ.க. அதிருப்தி தலைவரான சத்ருகன்சின்கா என்று இந்தியா முழுவதிலும் உள்ள 23 கட்சித்தலைவர்கள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மம்தாபானர்ஜி பேசும்போது, ‘‘நாம் இங்கே ஒன்றாக கூடியிருப்பது முக்கியமல்ல. நமது வேறுபாடுகளை மறந்துவிட்டு, பா.ஜ.க.வை தோற்கடிக்கவேண்டும் என்பதையே இலக்காக கொண்டிருக்கவேண்டும். அடுத்த பிரதமர் யார் என்பதை சிந்திக்கவேண்டிய தருணம் இது அல்ல. அந்தக்கேள்வியே இப்போது எழவில்லை. தேர்தலுக்குப்பிறகு நாம் எல்லோரும் கூடி முடிவு செய்வோம் என்று கூறி, அடுத்த பிரதமர் இவர்தான் என்று கூறுவதை தவிர்க்கவேண்டும்’’ என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார். சென்னையில் நடந்த கலைஞர் கருணாநிதி சிலை திறப்புவிழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்மொழிந்த நிலையில், இந்தக்கூட்டத்தில் யாருமே அவர்பெயரை முன்மொழியவில்லை. முதுபெரும் தலைவரான தேவேகவுடா எனக்குள்ள கசப்பான அனுபவம் என்னவென்றால், ‘‘மாநிலங்களில் தொகுதிப்பிரிவினை என்பது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் 2, 3 கட்சிகள் இருக்கும் நிலையில், தொகுதிகளை பிரிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்’’ என்பதை தெளிவாக சொல்லிவிட்டார். இந்தக்கூட்டத்தில் எல்லாத்தலைவர்களும் ஓரணியில் மேடையில் நின்றாலும், அடுத்து சந்திரபாபுநாயுடு அமராவதியில் நடத்தும் பேரணி மற்றும் கூட்டம், அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நடத்தப்போகும் கூட்டம் ஆகியவற்றில்தான் ஒரு இறுதி வடிவம் தெரியும். இந்தமேடையில் ஒன்றாக இருந்தாலும், இன்னும் பல தடைகளை மெகாகூட்டணி சந்திக்கவேண்டிய நிலையில் இருக்கிறது. கொல்கத்தாவில் நடந்த இந்தக்கூட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.

டெல்லி, அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் ஆம்ஆத்மி கட்சி, காங்கிரசுடன் கூட்டணி வைக்காது என்று அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லிவிட்டார். காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சி தனியாகத்தான் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் அமைத்துள்ள கூட்டணியில், காங்கிரசுக்கு இடமில்லை என்று கூறிவிட்டார்கள். இவ்வாறு உள்ளநிலையில், முதலில் இதயங்கள் இணையவேண்டும். பிறகு கட்சிகளுக்குள் ஒருங்கிணைப்பு, தொகுதி ஒதுக்கீடு என்ற பல கட்டங்களைத்தாண்டி ஒரு இறுதி ஒற்றுமையை காணவேண்டும். தேர்தல் அறிக்கை தயாரிக்கும்போது மாநில கட்சிகளின் வாக்குறுதிகளையெல்லாம் இணைத்து பொதுவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இப்படி இன்னும் நிறைய சவால்கள் இந்த மெகா கூட்டணிக்கு முன்பாக இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024