Friday, January 11, 2019

பெற்றோரை இழந்த மாணவிக்கு காதணி விழா நடத்திய ஆசிரியர்கள்

By கோவை | Published on : 11th January 2019 07:35 AM



கோவை, பேரூர் பகுதியில் பெற்றோரை இழந்த 4ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி ஆசிரியர்களே காதணி விழாவை நடத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம், பேரூரை அடுத்துள்ள ராமசெட்டிபாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வருபவர் வினோதினி. பெற்றோரை இழந்த இவர் தனது பாட்டி பாப்பம்மாளின் பாதுகாப்பில் இருந்து வருகிறார். பாப்பம்மாள் கூலி வேலை செய்து பேத்தியை படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில், சக மாணவிகள் காதணி அணிந்து கொண்டு பள்ளிக்கு வரும் நிலையில் தனக்கும் காது குத்தி விடும்படி தனது பாட்டியிடம் வினோதினி கேட்டுள்ளார்.


விழா நடத்தி பேத்திக்கு காது குத்த முடியாததால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பாட்டி கூறியதாகத் தெரிகிறது. குடும்ப சூழல் காரணமாக வினோதினியின் காது குத்து தள்ளிப் போவதை மாணவிகள் மூலம் அறிந்த தலைமை ஆசிரியர் கெளசல்யா உள்ளிட்ட ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களின் உதவியுடன் வினோதினிக்கு பள்ளியிலேயே காதணி விழாவை நடத்த முடிவு செய்தனர். இதற்காக ஊர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில், பள்ளி மாணவ, மாணவியர் சீர் வரிசைத் தட்டு ஏந்தி வர, ஆசிரியர்கள் குத்துவிளக்கேற்ற காதணி விழா வியாழக்கிழமை காலை தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, வட்டாரக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி மடியில் அமர வைக்கப்பட்ட வினோதினிக்கு தங்கக் காதணிகள் அணிவிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், உள்ளூர் பொதுமக்கள், மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர். சிறுமியின் தனிமை உணர்வைப் போக்கவும், அரசுப் பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024