Sunday, January 6, 2019

வேட்டி கட்டு, கொண்டாடு!

Published : 09 Jan 2015 12:19 IST

ஏ. சிவரஞ்சனி





சமீபத்தில் தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பிய பல விஷயங்களில் வேட்டியும் ஒன்று. தமிழனின் பாரம்பரிய உடையான வேட்டிக் கட்டிக்கொண்டு ஹை ஃபையான கிளப்களுக்குள் நுழையக் கூடாது என கிளப் உரிமையாளர்கள் அனுமதி மறுக்க, மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது.

அதன் பிறகு தமிழக அரசு “வேட்டி கட்டி வரக் கூடாது என்று தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து செய்யப்படும்” என்று தடாலடியாகச் சட்டம் பிறப்பித்துத் தமிழர்களின் மனதைக் குளிர வைத்தது. அதுமட்டுமின்றி அந்தச் சமயத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த சகாயம் ஐஏஎஸ் பொங்கலை ஒட்டி வேட்டி தினம் கொண்டாடுவோமே எனச் சொல்ல, அந்தக் கோரிக்கையும் அரசால் நிறைவேற்றப்பட்டுப் பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்டி கட்டிக்கொண்டு தங்களின் வேட்டி தினத்தைக் கொண்டா டினர் இளைஞர்கள்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஜனவரி 6 வேட்டி தினம் என்று அறிவிக்கவே, தானாக முன்வந்து பலர் வேட்டி தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வேட்டி தினம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்படி வேட்டி கட்டிக்கொண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டிருந்த இளைஞர்களிடம் பேசியபோது...

தன்னம்பிக்கை வருகிறது!

இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் தடவையாக வேட்டி கட்டியபோது கூச்சமாக இருந்ததால், ஜீன்ஸ் பேண்ட் போட்டு அதன் மேல் வேட்டி கட்டியவர் அன்சார். இப்போது, “எத்தனை ஆடைகள் வந்தாலும் வேட்டிக்கு நிகர் வேட்டி மட்டுமே” என வேட்டிக்கு அமோக வரவேற்பு கொடுக்கிறார். ஏனென்றால் வேட்டி கட்டிக்கொண்டு வெளியே செல்லும்போது மனதில் ஒரு விதமான தன்னம்பிக்கை உணர்வு வருகிறதாம். “குறிப்பாகப் பெண்களின் பார்வையும் என் மீது சாயும்” என வெட்கத்தொடு சொல்லும் அன்சாரை அவருடைய நண்பர் யாசின் “மச்சி வழியுதுடா” என்று கலாய்க்கிறார்.

வேட்டிக்கு மரியாதை வேண்டும்

வேட்டியைச் சரி செய்து கொண்டிருந்த யாசினிடம் வேட்டி பற்றிக் கேட்டவுடன் “வணக்கம் மக்களே” என அரசியல்வாதி தொனியில் ஆரம்பித்தார். “நான் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கிறேன். சில திருமணங்களுக்கு உணவு உபசரிப்பு பயிற்சிக்காகச் செல்கிறேன். அங்கே வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தங்களின் ஷெர்வானியைவிட வேட்டி சட்டையை விரும்பி உடுத்துவதை பார்த்திருக்கிறேன்.

ஆக இன்றைய ஆண்களிடம் வேட்டி விழிப்புணர்வு அதிக மாகவே இருக்கிறது” எனச் சொல்லும் யாசின் இன்னும் பல விஷயங்களை அடுக்கினார். “சில மாதங்களுக்கு முன்பு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிளப்பில் வெளியேற்றப்பட்ட செய்தியை கேட்டபோது பெரியவர்களைவிட இளைஞர் களான நாங்கள்தான் அதிகமாகக் கொந்தளித்தோம். ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் என எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தோம்” என்று தன்மானச் சிங்கமாகக் கர்ஜிக்கிறார்.

வேட்டியை டிரெண்டாக்குவேன்!

ஃபேஷன் டிசைனராக வேலை பார்த்துவரும் ராம் தமிழக ஆடைகளை மேலை நாட்டவருக்கு அறிமுகம் செய்து, பல விதங்களில் வேட்டி, புடவையைக் கட்ட பயிற்சி அளித்து வருகிறார். “முன்னாள் நீதிபதி வேட்டி கட்டியதால் வெளியேற்றப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் நல்லதும் இருக்கிறது. காரணம் அப்படிச் செய்ததால்தான் வேட்டியின் தாக்கம் நம் மக்களிடம் இன்னும் அதிகரித்தது. அவசர உலகில் எதையும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அதற்கான நேரம் வந்தால் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

உள்ளே கூச்சம் வெளியே கம்பீரம்

நரேன் தீவிர அஜித் ரசிகர். “வீரம் படம் ரிலீசப்ப தல ரசிகர்கள் அனைவரும் வேட்டி கட்டுனாங்க. அதுவும் என்னைப் போன்ற இளைஞர்களை வேட்டி பக்கமாக இழுத்தது எனச் சொல்லலாம்” என்கிறார். வேட்டி சட்டையோடு எடுத்த செல்ஃபி போட்டோவை ஃபேஸ் புக்கில் நண்பர்களுக்குப் பகிர்ந்துகொண்டிருந்த திருமணி பத்து வயதிலிருந்தே வேட்டி கட்டுகிறாராம். “நான் சிறு வயதில் பார்த்துப் பிரமித்த எங்க கிராமத்துப் பெரியவர்தான் எனக்கு ரோல்மாடல்” என்கிறார் நெகிழ்வுடன்.

வேட்டி தினத்துக்காக நான்கு வேட்டிகளை வாங்கிய சஞ்சீவ் “எனக்கு வேட்டி கட்டுவது கொஞ்சம் கூச்சமாக இருக்கும். காரணம் எப்படா கழன்று விழுமோன்னு பயமாகவே இருக்கும். அதனால் உள்ளே பெல்ட்டு போட்டுத்தான் வேட்டி கட்டுவேன். இருந்தாலும் வேட்டி கட்டி வெளியே செல்லும்போது நம்மையும் நாலு பேர் பாக்குறாங்களே என்று மனதுக்குள் ஒரு கம்பீரம் தானாக வரும்” என்கிறார். இவர் பொங்கல் பண்டிகைக்கும் வேட்டியை மட்டுமே கட்ட வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளாராம். சபதம் நிறைவேற வாழ்த்துகள்.

படங்கள் ப.ஆனந்த்ராம்

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...