Thursday, February 21, 2019

தலையங்கம்

இளந்தளிர்களுக்கு இடைநிற்றல் வேண்டாம்



பள்ளிக்கூடங்களில் மழலை வகுப்பில் சேரும் மாணவர்கள் பிளஸ்–2 படிப்பை முடிக்கும்வரை தொடர்ந்து படிக்கவேண்டும். இடையில் பள்ளிக்கூடத்தைவிட்டு நின்றுவிடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் எல்லோருடைய எண்ணமும் ஆகும்.

பிப்ரவரி 21 2019, 04:00

அந்த இலக்கை நோக்கி பயணிக்கும் வகையில்தான், 2009–ம்ஆண்டு, ‘கட்டாய கல்வி உரிமை சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. இதில் மிகமுக்கியமான அம்சம் என்னவென்றால், 8–ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்கலாம். ஆனால் தேர்வில் பெயிலாகி விட்டார்கள் என்ற காரணத்திற்காக எந்த மாணவரையும் பெயிலாக்கி விடக்கூடாது. அதாவது தேர்ச்சி இல்லை என்று கூறி அதே வகுப்பில் வைத்துவிடக்கூடாது. ஆனால் மாணவர்களுக்கு பாஸ் என்றும், பெயில் என்றும் இல்லாதநிலை ஏற்பட்டுள்ளதால் படிப்பில் ஆர்வம் இல்லை. கல்வித்தரம் குறைந்து விட்டது என்றெல்லாம் வந்த கருத்துகளின் அடிப்படையில், இந்த கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசாங்கம் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது. இந்த திருத்தத்தின்படி, 5–ம் வகுப்பு, 8–ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்தப்படவேண்டும். அதில் யாராவது மாணவனோ, மாணவியோ பெயில் ஆனால், அவர்களுக்கு நல்ல பயிற்சியை கொடுத்து 2 மாதங்களில் மீண்டும் தேர்வு வைத்து தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும். அதிலும் அந்த மாணவன் தோல்வி அடைந்தால் அதே வகுப்பில் படிக்க செய்ய வேண்டும். இதில் மாநில அரசுக்கு ஒரு உரிமையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 8–ம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயிலாக்காமல், அடுத்த வகுப்பிற்கு அனுப்பிவிட மாநில அரசிற்கு உரிமை இருக்கிறது.

இந்தநிலையில், தமிழகஅரசு இந்த சட்டத்திருத்தத்தின்படி இந்த ஆண்டே மாணவர்களுக்கு 5–ம் வகுப்பிலும், 8–ம் வகுப்பிலும் இறுதித்தேர்வை நடத்த திட்டமிட்டு இருக்கிறது. 3–வது பருவத்தேர்வை இந்த 2 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வாக நடத்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 20 மாணவர்கள் ஒரு வகுப்பில் இருந்தால் அந்த பள்ளிக்கூடத்திலேயே தேர்வுமையம் அமைக்கவும், அதற்கு குறைவாக இருந்தால் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தேர்வுகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், மாணவர்களுக்கு படிப்பின்மீது ஒரு அக்கறையை ஏற்படுத்தவும் பொதுத்தேர்வு நடத்துவது என்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கதாகும்.

இளந்தளிர்கள் ஒரு வகுப்பில் பெயிலாகி அதே வகுப்பில் படிக்க நேரிடும் சூழ்நிலையில் தன்னுடன் படித்த மாணவர்கள் எல்லாம் மேல்வகுப்பில் படிக்கிறார்கள். தனக்கு கீழ்வகுப்பில் படித்தவர்கள் எல்லாம் தன்னுடன் படிக்கிறார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, ‘நான் பள்ளிக்கூடத்திற்கு போகமாட்டேன்’ என்றுகூறும் நிலை ஏற்படும். இதன் காரணமாக ஏழை–எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மத்தியில் இடைநிற்றல் அதிகரிக்கும். குறிப்பாக பெண் பிள்ளைகள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடும் நிலையும் ஏற்படும். இப்போதுதான் அரசு பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த பிற்போக்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கக்கூடாது. கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை இது வெகுவாக குறைத்து விடும் என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட கல்வியாளர்கள் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசை பொறுத்தமட்டில் கல்வித்துறையில் பல முற்போக்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பொதுத்தேர்வு நடத்துவது என்பது நிச்சயமாக நல்லது. ஆனால் பெயிலாகி விட்டார்கள் என்றொரு காரணத்திற்காக அவர்களை அதேவகுப்பில் மீண்டும் படிக்க செய்யாமல், ஒரு எச்சரிக்கை கொடுத்து அவர்கள் பெற்றோரையும் அழைத்து எடுத்துச்சொல்லி அடுத்த வகுப்பிற்கு அனுப்புவதே சாலச்சிறந்ததாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024