Thursday, February 21, 2019

மாவட்ட செய்திகள்

தண்டச்சோறு என்று மருமகள் திட்டியதால்வீட்டை விட்டு வெளியேறிய முதியவர்மாணவர்கள் உதவியால் போலீசார் மகன்களிடம் ஒப்படைப்பு



தண்டச்சோறு என்று மருமகள் திட்டியதால், வருத்தத்துடன் வீட்டை விட்டு வெளியேறி, தெருவில் சுற்றித்திரிந்த 80 வயது முதியவரை மாணவர்கள் உதவியால், போலீசார் மீண்டும் அவரை மகன்களிடம் ஒப்படைத்தனர்.
பதிவு: பிப்ரவரி 21, 2019 04:30 AM
சென்னை,

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் விவசாயியான கணேசன் (வயது 80). இவரது மனைவி இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இவரது 2 மகன்களில் ஒருவர் ஆட்டோ டிரைவர். இன்னொருவர் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.

கணேசன், தனியார் கம்பெனியில் வேலை செய்யும் மகனோடு தங்கி சாப்பிட்டு வந்தார். அவரை தினமும் தண்டச்சோறு சாப்பிட்டுவிட்டு, கிழவன் ஜாலியாக இருக்கிறான், என்று மருமகள் திட்டி இருக்கிறார்.

வீட்டை விட்டு வெளியேறினார்

உழைத்து வாழ்ந்த கணேசனுக்கு மருமகள் திட்டியது நெஞ்சில் முள்ளாக குத்தி வேதனையை தந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர், சென்னைக்கு வந்தார். சென்னை வேப்பேரி பகுதியில் அனாதையாக சாப்பாட்டுக்கு வழி இன்றி தெருவில் சுற்றித்திரிந்தார். இதைப்பார்த்த அந்த பகுதி பள்ளி மாணவர்கள் இருவர், கணேசனோடு அன்பாக பழகி, அவரது சோக கதையை கேட்டார்கள்.

பின்னர் கணேசனை வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கணேசனின் சோக கதையை சொல்லி, வேப்பேரி இன்ஸ்பெக்டர் வீரக்குமாரிடம் அவரை ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் வீரக்குமார் கணேசனுக்கு உணவு வாங்கி கொடுத்து போலீஸ் நிலையத்தில் ஒரு நாள் தங்கவைத்தார்.

மகன்களிடம் ஒப்படைப்பு

கணேசனின் மகன்கள் மற்றும் மருமகள்களை வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து கண்டித்தார். கணேசனை இனிமேல் ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் முதியோர் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

தனது மருமகள் மீது வழக்கு எதுவும் போட வேண்டாம், என்று கணேசன் கேட்டுக்கொண்டார். இதனால் நெகிழ்ந்து போன மருமகள், இனிமேல் தனது மாமனார் கணேசனை திட்டாமல், நன்றாக கவனித்துக்கொள்வதாக போலீசாரிடம் உறுதிபட கூறினார். பின்னர் கணேசன் அவரது மகன்களுடன் சந்தோஷமாக புறப்பட்டு சென்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 01.10.2024