Sunday, February 17, 2019


கோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை பெரிய அளவில் தொடங்கப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி இணைய சேவையை மட்டுமே வழங்கி வருகிறது. நஷ்டத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் வருவாயை பெருக்க 4ஜி சேவையை வழங்க வேண்டும் என பிஎஸ்என்எல் தொழிலாளர்கள் தரப்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவையை பெரிய அளவில் தொடங்க பிஎஸ்என்எல் நிறுவனம் தயாராகி வருவதாக தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்தின் தலைமை பொதுமேலாளர் வி.ராஜூ தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது: பிஎஸ்என்எல் தமிழகத்தில் 4ஜி சேவையை தொடங்க தயாராகி வருகிறது. முதல்கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய 2 நகரங்களில் 4ஜி சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சிம்மிற்கு பதிலாக, இலவசமாக 4ஜி சிம் வழங்கப்பட்டு வருகிறது. கணிசமான எண்ணிக்கையில் 4ஜி சிம் வழங்கப்பட்ட உடன் 4ஜி சேவை இந்த இரண்டு இடங்களிலும் தொடங்கப்படும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு டேட்டா பதிவிறக்க வேகம் அதிகரித்து 21 எம்பி வரை கிடைக்கும். பின்னர் திருச்சி, மதுரை, வேலூர் மற்றும் நாகர்கோவிலில் 4ஜி சேவை தொடங்கப்படும்  என்றார்.மூடும் எண்ணம் இல்லைபிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவது குறித்து எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை. மாறாக இந்திய மக்களுக்கு நாடு முழுவதும் சிறந்த சேவையை அளிக்கும் வலுவான ஒரு நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம் இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என பிஎஸ்என்எல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பலத்த போட்டியின் காரணமாக ஏற்பட்ட கட்டண குறைப்பினால் உண்டான நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நிதி உதவி திட்டத்தை தயாரித்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் என்றென்றும் மிகச்சிறந்த தொலைதொடர்பு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் என  கூறியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024