Sunday, February 17, 2019

கோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிடங்கள்!


இரா. குருபிரசாத்


தி.விஜய்


அழிந்தும் வரும் காடுகள், ஆக்கிரமிக்கப்படும் யானை வழித்தடங்கள் என்று வனவிலங்குகளுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறித்து வனத்துறைக்கே நன்கு தெரியும். ஆனாலும், வனவிலங்குகள் மீதே நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன.


பரபரப்பான வாழ்க்கையில் சக மனிதர்களின் வலிகள், வேதனைகள் குறித்தே யாரும் கவலைப்படுவதில்லை. அப்படியிருக்கும் போது, வனத்தில் இருக்கும் வன விலங்குகள் பற்றியோ, அதன் வாழ்விடம் பற்றியோ யோசிக்க நமக்கு நேரமில்லை. இந்நிலையில், இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்று அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறான் சின்னத்தம்பி யானை. தன் இனத்துக்குச் சூழப்பட்டுள்ள பிரச்னையை அனைத்துத் தரப்பிலும் பேச வைத்துவிட்டான்.



கோவையில் இருந்து டாப்ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சின்னத்தம்பி யானை, ஒரு வாரத்துக்குள் மீண்டும் வெளியில் வந்தான். ஜனவரி 31-ம் தேதி முதல், பிப்ரவரி 15-ம் தேதி வரை சின்னத்தம்பி சுமார் 100 கி.மீ-க்கு மேல் நடந்துவிட்டான். நூற்றுக்கணக்கான வனத்துறை ஊழியர்கள் இரவு பகலாக இவனுடன் ஓடிக் கொண்டிருந்தனர். சின்னத்தம்பியை காண ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணாடிப்புத்தூர் பகுதிக்குப் படையெடுத்தனர். சின்னத்தம்பி எப்போது தூங்குவான், எத்தனை மணிக்கு எழுந்திருப்பான் என்பது வனத்துறைக்கு மட்டுமல்ல, மக்களும் தெரிந்து வைத்திருந்தனர். அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டான் இவன்.

அங்கலக்குறிச்சி பகுதியில் இருந்து உடுமலைப்பேட்டை நோக்கி இவன் வந்தபோது பலரும் பதற்றமடைந்தனர். குழந்தையுடன் ஒரு பெண் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென எதிரில் வந்துவிட்டான். அந்தப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, ஆரவாரம் இல்லாமல் சின்னத்தம்பி அவர்களைக் கடந்து சென்றுவிட்டான். இரண்டு வாரங்களில் இப்படி எத்தனையோ நெகிழ்ச்சி சம்பவங்கள் அரங்கேறிவிட்டன.



யானை சேதப்படுத்திய விளை நிலத்துக்குச் சொந்தமானவர்கள் கூட, "எங்களுக்கான இழப்பீட்டை அரசு உடனடியாக தரவேண்டும். அந்த யானை ரொம்ப புத்திசாலி. அதனால் எங்களுக்கு வேறு எந்த சேதமும் இல்லை. நல்ல காட்டு பகுதியில் விட்டால் போதும்" என்று கூறினர். கண்ணாடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓர் முதியவர், "சின்னத்தம்பியை நல்லா பார்த்துக்கோங்க சாமி" என்று வனத்துறை அதிகாரிகளிடம் கையெடுத்துக் கும்பிட்டார். 15 நாள்களாக உணவு, உறக்கம் எல்லாம் துறந்தாலும், சின்னத்தம்பியை தங்களது செல்லத்தம்பியாகவே பார்த்துக் கொண்டனர் வனத்துறையினர்.

சின்னத்தம்பியை பிடித்த கடைசி நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். ஐஸ் க்ரீம், பழங்கள், டீ, தின்பண்டங்கள் என்று ஊரே விழாக்கோலம் பூண்டது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சின்னத்தம்பிக்கு எந்த துன்புறுத்தலும் இல்லாமல் பிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு போட்டிருந்தது. இதனால், வனத்துறையினர் மிகுந்த கவனத்துடன் களமிறங்கினர். வனத்துறை மூத்த மருத்துவர் அசோகனின் அனுபவத்தால், யானைக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் வெற்றி கரமாக ஊசி போடப்பட்டது. கடந்த முறை பெரிய சர்ச்சையைக் கிளப்பிய ஜே.சி.பி-க்கு பதிலாக, கேரளாவில் இருந்து ஹைட்ராலிக் லாரி கொண்டு வரப்பட்டது. ஒரு பக்கம் மக்களைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு, மறுபக்கம் சின்னத்தம்பியை கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு இரண்டையும் வனத்துறை ஊழியர்கள் பக்குவமாக சமாளித்தனர்.



காட்டு யானைகளில் இந்த சின்னத்தம்பி சிறந்தவன் என்று மருத்துவர் அசோகனும் இவனுக்கு சர்டிஃபிகேட் கொடுத்தார். அனுபவசாலியான கலீம் (கும்கி) இருந்தாலும் சின்னத்தம்பியை லாரியில் ஏற்றுவதற்கான பொறுப்பு சுயம்புவிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரிய அளவுக்கு அனுபவம் இல்லாத சுயம்பு, இவனை லாரியில் ஏற்றுவதற்கான பெரிய பொறுப்பை வெற்றிகரமாக முடித்தது. கடைசியாக கண்ணாடிப்புத்தூர் பகுதியில் இருந்து லாரி கிளம்பும்போது அந்த மக்கள், "சின்னத்தம்பி"… "சின்னத்தம்பி..." என்று குரல் எழுப்ப, மயக்க நிலையில் இருந்த சின்னத்தம்பி தனது தும்பிக்கையை தூக்கிக் காட்டிவிட்டு விடைபெற்றான்.

நள்ளிரவு வரகளியாறு சென்றபோது, சின்னத்தம்பியை எப்படி கூண்டுக்குள் அடைப்பது என்று வனத்துறையினர் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். கும்கி கலீமுடன், மேலும் இரண்டு பெண் வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டன. வனத்துறை ஊழியர்களும், கும்கிகளும் கயிறு கட்டி இழுக்கத் தொடங்கினர். ஆனால், சின்னத்தம்பி யானை அவர்களுக்குக் கஷ்டம் கொடுக்காமல் தானாகவே கூண்டுக்குள் சென்றுவிட்டான்.



விளை நிலங்களைச் சேதப்படுத்துகிறான். மனிதர்கள் வாழ்விடத்தில் வாழ்ந்து பழகிவிட்டான் என்பது சின்னத்தம்பி மீது கூறப்படும் புகார்கள். அழிந்தும் வரும் காடுகள், ஆக்கிரமிக்கப்படும் யானை வழித்தடங்கள் என்று வனவிலங்குகளுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறித்து வனத்துறைக்கே நன்கு தெரியும். ஆனாலும், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வனவிலங்குகள் மீதே தொடர் நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன.

"தமிழகம் முழுவதும் 101 இடங்களில் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன" என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையே பேச வைத்தான் சின்னத்தம்பி. ஆனால், தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழ்நிலையில், சின்னத்தம்பி பிரச்னைக்கு தீர்வு கொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. ஒரு வேளை சின்னத்தம்பிக்கு வாக்களிக்கும் உரிமை இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்களோ என்னவோ?



வாழ்விடமும், வழித்தடமும் பாதிக்கப்பட்டதால் வெளியில் வந்த சின்னத்தம்பியை, பழக்க வழக்கம் மாறிவிட்டதாகக் கூறி கூண்டில் அடைத்துவிட்டோம். அதன் பழக்க வழக்கத்தை மாற்றிய மனிதர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறோம்?

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024