சி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன?
vikatan
எம்.குமரேசன்
இந்திய ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை, கடற்படை உள்ளன. இவை ராணுவ அமைச்சகத்துக்குக் கீழ் செயல்படுபவை. குடியரசுத் தலைவர் முப்படைக்கும் தலைவர். ராணுவத்தில் இருந்து சி.ஆர்.பி.எஃப் என்று அழைக்கப்படும் துணை ராணுவத்தினர் வேறுபடுகிறார்கள். சி.ஆர்.பி.எஃப். 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும். கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் இதில் பணி புரிகின்றனர். உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதுதான் இதன் முக்கிய பணி.
நக்ஸல்கள், தீவிரவாதிகளை வேட்டையாடுவதும் இவர்கள்தான். 1965-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் எல்லையையும் இவர்கள்தான் பாதுகாத்தனர். எல்லை பாதுகாப்புப் படை தனியாக உருவாக்கப்பட்ட பிறகு, அந்த அமைப்பின் வசம் பாகிஸ்தான் எல்லை ஒப்படைக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் 5 தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தியதும் இவர்கள்தான். ஐ.நா அமைதிப்படைக்கும் இந்தியா சார்பில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்தான் பெரும்பாலும் அனுப்பப்படுவார்கள். சி.ஆர்.பி.எஃப் போன்று நம் நாட்டில் பல பாதுகாப்பு அமைப்புகள் உள்துறை அமைச்சகத்தில் கீழ் இயங்கி வருகின்றன. அவற்றைப் பார்ப்போம்.
அஸாம் ரைஃபில்ஸ் (AR)
இந்த அமைப்பு இந்தோ-திபெத், இந்தோ- மியான்மர் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1835-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பராமிலிட்டரி அமைப்பு இது.
எல்லை பாதுகாப்பு படை (BSF)
1965-ம் ஆண்டு பாகிஸ்தான் போருக்குப் பிறகு எல்லையைப் பாதுகாக்க தனி அமைப்பு உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்தது. இதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 2.4 லட்சம் பேர் பணி புரிகிறார்கள்.
மத்திய தொழிற்நிறுவனங்கள் பாதுகாப்புப் படை (CISF)
மத்திய அரசுக்குச் சொந்தமான தொழிற் நிறுவனங்களின் பாதுகாப்பை இந்த அமைப்பு மேற்கொள்கிறது. தற்போது, 300-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை இந்த அமைப்புதான் பாதுகாத்து வருகிறது. நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலையும் இந்த அமைப்பின் வசம்தான் உள்ளது. இதில், 1,65,000 பேர் பணி புரிகிறார்கள்.
இந்தோ - திபெத்தியன் எல்லை பாதுகாப்புப் படை (ITBP)
1962-ம் ஆண்டு இந்திய - சீன போருக்குப் பிறகு, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. எல்லையைக் காப்பது மட்டுமல்லாமல் போதை மருந்து கடத்தலைத் தடுப்பதும் இந்த அமைப்பின் முக்கிய பணி.
தேசியப் பாதுகாப்பு முகமை (NSG)
ஆபரேஷன் ப்ளு ஸ்டார் காரணமாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, 1984-ம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள் போன்றவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கறுப்புப் பூனை படையினர் இந்த அமைப்புக்குக் கீழ்தான் வருகிறார்கள். இதில் 8,000 பேர் பணி புரிகிறார்கள்.
சாஷத்ரா சீமா பால் (SSB)
இந்தோ - நேபாள, இந்தோ - பூடான் எல்லையில் இந்த அமைப்பு பாதுகாப்பில் ஈடுபடுகிறது. 2014-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் பெண்களும் தேர்வு செய்யப்பட்டு எல்லை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பு 1963-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்திய கடலோரக் காவல்படை (ICG)
எல்லையைப் பாதுகாப்பதுபோல கடல் எல்லையைப் பாதுகாப்பது இந்த அமைப்பின் பணி. இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. Director General Indian Coast Guard இந்த அமைப்பின் தலைவர்.
No comments:
Post a Comment