மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான நீட் தேர்வு தஞ்சை மாணவர் 7ம் இடம் பிடித்து சாதனை
Added : பிப் 08, 2019 05:19
தஞ்சாவூர்:மருத்துவ பட்ட மேற்படிப்புக்காக நடந்த, 'நீட்' தேர்வில், தஞ்சாவூர் மாணவர், அகில இந்திய அளவில், ஏழாம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., போன்ற மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, ஜன., 6ல் நடந்தது. இதில், 1.43 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேசிய தேர்வு வாரியம், ஜன., 31ல் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. நேற்று, 'ஸ்கோர் கார்டு' எனப்படும், மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், தஞ்சாவூரைச் சேர்ந்தவரும், சென்னை மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்து வருபவருமான, செரின்பாலாஜி, 22, அகில இந்திய அளவில், ஏழாம் இடத்தை பிடித்து, சாதனை படைத்துள்ளார்.முதல் ஆறு இடங்களை பிடித்தவர்கள், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து, செரின்பாலாஜி கூறியதாவது:தற்போது சென்னை மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறேன். இந்த படிப்பு, மார்ச், 26ம் தேதியோடு நிறைவு பெறவுள்ளதால், எம்.டி., படிக்க, நீட் தேர்வை எழுதினேன். இதில், அகில இந்திய அளவில், ஏழாம் இடம் கிடைத்துள்ளது.தமிழக அரசு, ரேங்க் பட்டியலை மார்ச் மாதம் தான் வெளியிடும். அப்போது தான், தமிழக அளவில் நான் முதலிடம் என்பதை அறிவிப்பார்கள். என் பெற்றோர், தஞ்சாவூர் சாஸ்த்ரா கல்லுாரியில் பேராசிரியர்களாக உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment