சுடவில்லையே தீ, ஏன்?
By ஆசிரியர் | Published on : 19th February 2019 01:41 AM
சென்ற வாரம் தலைநகர் தில்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் இயங்கும் அர்பித் பேலஸ் உணவு விடுதியில் நடந்த கொடூரமான தீ விபத்தை வெறும் விபத்து என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அந்த ஐந்து மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 1997-இல் இதே தலைநகர் தில்லியில் உப்கார் திரையரங்கத் தீ விபத்தில் 59 பேர் இறந்தது எந்தவிதப் படிப்பினையையும் கொடுக்கவில்லை என்பதைத்தான் இப்போதைய தீ விபத்து தெரிவிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்ற தீ விபத்துகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அர்பித் பேலஸ் விடுதியைப் பொருத்தவரை அடிப்படைப் பாதுகாப்பு அம்சங்கள் எல்லாமே மீறப்பட்டிருந்தன. வேடிக்கை என்னவென்றால், தீயணைப்புத் துறையிடமிருந்து அர்பித் பேலஸ் தகுதிச் சான்றிதழ் பெற்றிருந்தது என்பதுதான்.
கடந்த டிசம்பர் மாதம் மும்பையில் உள்ள 17 மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து மூத்த குடிமக்கள் சிக்கிக்கொண்டு உயிரிழந்தனர். மும்பை கமலா நூற்பாலை பகுதியில் இரண்டு உணவு விடுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் மூச்சுத் திணறி இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் நூலிழையில் உயிர் பிழைத்தனர். 2016-இல் ஒடிஸா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை தீ விபத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 19 நோயாளிகள் தீக்கிரையானார்கள் என்றால், 2010-இல் பெங்களூருவில் உள்ள பல அடுக்கு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழக்க நேர்ந்தது.
இதுபோல இந்தியா முழுவதும் எத்தனை எத்தனையோ தீ விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், ஒவ்வொரு விபத்து நேரும்போதும் அந்தக் கட்டடத்தின் உரிமையாளரோ அல்லது அந்தக் கட்டடத்தில் செயல்படும் நிறுவனத்தின் நிர்வாகமோ குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டிக்கப்படுவதுதான் வழக்கமாகியிருக்கிறது. எந்தவொரு நிகழ்விலும் அந்தக் கட்டடத்தில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதற்கு உடந்தையான மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளோ அல்லது அந்தக் கட்டடத்தின் பாதுகாப்பைக் கண்காணிக்காமல் பொறுப்புடன் செயல்படாத தீயணைப்புத் துறையினரோ குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டிக்கப்படுவதில்லை.
அநேகமாக எல்லா விபத்துகளிலும் விதிமுறைகள் மீறப்படுவதற்கும், முறையாகக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கும் காரணம், அரசு நிர்வாகத்தினர் கையூட்டுப் பெற்று, விதிமுறை மீறல்களுக்குத் துணை போவதுதான். இதுவரை எந்தவொரு நகராட்சி அல்லது மாநகராட்சி ஆணையரோ, அதிகாரியோ தண்டனை பெற்றதில்லை என்பது மட்டுமல்ல, அவர்களது தவறுக்கான துறை ரீதியான நடவடிக்கைகள்கூட எடுக்கப்படாமல் தப்பித்துக் கொள்கிறார்கள்.
அர்பித் பேலஸ் விடுதியில் அனுமதி இல்லாமல் ஒரு மாடி கட்டப்பட்டிருக்கிறது என்ற உண்மை இப்போது வெளியாகியிருக்கிறது. அந்தக் கட்டடத்தின் மொட்டை மாடி, அனுமதி இல்லாமல் உணவு விடுதியாக மாற்றப்பட்டதும் தெரிய வந்திருக்கிறது. தில்லி பெருநகர் மாநகராட்சி அவ்வப்போது முறையான சோதனைக்குக் கட்டடத்தை உட்படுத்தியிருந்தால், தீயணைப்பு விதிமுறைப்படி கண்காணித்திருந்தால் இப்படியொரு விபத்து நேர்ந்திருப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.
80 பக்கத்துக்கும் அதிகமுள்ள தேசிய கட்டட விதிமுறைகளின் பகுதி நான்கில், தீ விபத்துகளை எப்படித் தடுக்க வேண்டும் என்பது குறித்த விவரமான வழிமுறைகள் காணப்படுகின்றன. தில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தீயணைப்புப் பாதுகாப்பு விதிகள் இருக்கின்றன. ஆனால், இந்தியா முழுவதுமே தீயணைப்பு ஒத்திகை என்பது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சம்பிரதாயச் சடங்காகத்தான் இருக்கிறது.
கட்டடம் கட்டுவதற்கும், தீயணைப்புப் பாதுகாப்புக்கும் தேவையான உரிமம் பெற்ற பிறகு கட்டட உரிமையாளர்களும், வணிக வளாகம், உணவு விடுதிகள் நடத்துபவர்களும் அனுமதி இல்லாமல் பல மாற்றங்களைச் செய்து கொள்கிறார்கள். தீ விபத்தை எதிர்கொள்ளத் தேவையான அம்சங்கள் பெரும்பாலும் கைவிடப்படுகின்றன. எல்லா தீ விபத்துகளுக்கும் அதுதான் காரணம்.
இந்திய இடர் ஆய்வு 2018 என்கிற மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய தீயணைப்புப் பாதுகாப்பு குறித்த ஆய்வறிக்கை திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் குறைந்தது 8,550 தீயணைப்பு நிலையங்கள் அவசியம். ஆனால், சுமார் 2,000 தீயணைப்பு நிலையங்கள்தான் செயல்படுகின்றன. இந்தியாவின் நகர்ப்புறங்களில் மட்டும் தீ விபத்துகளைக் காலதாமதம் இல்லாமல் எதிர்கொள்ளக் குறைந்தது 4,200 தீயணைப்பு நிலையங்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றன. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 6 மாதத்துக்கு மேலாகியும் தீயணைப்பு நிலையங்கள் அமைப்பதற்கான எந்தவித முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அர்பித் பேலஸ் தீ விபத்து இப்போது பரபரப்பாகப் பேசப்படுவதுபோல, 2004-இல் கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நேர்ந்ததும் 94 குழந்தைகள் தீயில் கருகி மாண்டதும் ஒட்டுமொத்த இந்தியாவே சோகத்தில் ஆழ்ந்ததும் நினைவிலிருந்து அகன்றிருக்க முடியாது. அதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருமே தண்டனையில் இருந்து தப்பிவிட்டனர். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு உரித்தான இழப்பீடு சென்றடையவில்லை என்றும், இடைத்தரகராகச் செயல்பட்ட வழக்குரைஞர், வழங்கப்பட்ட இழப்பீட்டை தனது கட்டணமாக எடுத்துக்கொண்டு விட்டார். இதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்?
கும்பகோணம் போல, கரோல் பாக் போல இன்னும் எத்தனை எத்தனை தீ விபத்துகள் நடக்கப் போகின்றனவோ தெரியவில்லை. நெருப்பே சுட்டும்கூட இந்தியாவின் நிர்வாக இயந்திரத்துக்கு உறைக்கவில்லையே... ஏன்?
No comments:
Post a Comment