Wednesday, February 13, 2019

குட்டு!

கோர்ட்டை அவமதித்த சி.பி.ஐ., அதிகாரிக்கு..
நீதிமன்ற அறையின் மூலையில் அமர உத்தரவு

புதுடில்லி: விசாரணை அதிகாரியை இடமாற்றம் செய்ததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இழைத்ததாக கூறி, சி.பி.ஐ.,யின் முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு, உச்ச நீதிமன்றம், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், ஒரு நாள் முழுவதும், நீதிமன்ற அறையின் மூலையில் அமரும்படியும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பீஹார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களை விசாரித்த அதிகாரி, ஏ.கே.சர்மாவை, சி.பி.ஐ., இடைக்கால இயக்குன ராக நியமிக்கப்பட்டிருந்த, நாகேஸ்வர ராவ், இடமாற்றம் செய்தார்.

நடவடிக்கை:

'அவரை இடமாற்றம் செய்யக்கூடாது' என, உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை மீறி, இந்த நடவடிக்கையை, ராவ் எடுத்தார். அவரது நடவடிக்கைக்கு ஆதரவாக, சி.பி.ஐ., சட்ட ஆலோசகர், பாஸுரன் கருத்து தெரிவித்திருந்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

சி.பி.ஐ., இயக்குனர் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், ''இந்த வழக்கில், நாகேஸ்வர ராவ், பாஸுரன் ஆகியோர், நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளனர்; அதை ஏற்க வேண்டும்,'' என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் மூலையில் உள்ள இருக்கையில், ஒரு நாள் முழுவதும் அமரும்படி, நாகேஸ்வர ராவுக்கும், பாஸுரனுக்கும் உத்தரவிட்டனர். மேலும், 'நாகேஸ்வர ராவ், பாஸுரன் ஆகியோர், தலா, 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என்றும், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

பின், நீதிபதிகள் கூறியதாவது: நாகேஸ்வர ராவ் செய்தது, அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு செயல். ஏ.கே.சர்மாவை மாற்றுவதற்கான உத்தரவை, ஒரு நாள் கழித்து பிறப்பித்திருந்தால், வானம் இடிந்து, தரையில் விழுந்து விடுமா...

தண்டனை:

இந்த நீதிமன்றத்துக்கு என, கண்ணியம் உள்ளது; அது, காக்கப்பட வேண்டும். நாகேஸ்வர ராவ் செய்த குற்றத்துக்காக, அவரை, 30 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்க முடியும். ஆனால், நாங்கள் அதை விரும்பவில்லை. தவறை உணர வேண்டும் என்பதற்காக, இந்த தண்டனை தரப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

நீதிபதிகளின் உத்தரவை அடுத்து, நீதிமன்ற அறையின் மூலையில் இருந்த இருக்கைகளில், நாகேஸ்வர ராவும், பாஸுரனும் அமர்ந்தனர். ஒரு நாள் முழுவதும் அந்த அறையில்,

பல்வேறு வழக்குகளின் விசாரணைகள் நடந்தன. மாலையில் விசாரணைகள் முடியும் வரை, அங்கேயே அமர்ந்திருந்த அவர்கள், தண்டனை நேரம் முடிந்த பின், சோர்ந்த முகத்துடன் அங்கிருந்து வெளியேறினர்.

பொது நலன் மனு; ஐகோர்ட்டில் தள்ளுபடி:

சி.பி.ஐ., இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா இடையே, கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட மோதலை அடுத்து, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, இடைக்கால இயக்குனராக, நாகேஸ்வர ராவை நியமித்தது. பணியில் சேர்ந்ததும், சி.பி.ஐ., அதிகாரிகள் பலரை, நாகேஸ்வர ராவ் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். தற்போது, சி.பி.ஐ.,க்கு, முழு நேர இயக்குனராக, ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குனராக இருந்தபோது பிறப்பித்த இடமாற்ற உத்தரவுகளின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை தெரிவிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், உசேன் முயீன் பரூக் என்பவர், பொது நலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், 'இந்த மனுவில் பொது நலன் எதுவும் கிடையாது. இடமாற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகலாம்' எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024