அண்ணா பல்கலை ஆராய்ச்சி நிதியில் மோசடி? : விசாரணை நடத்த துணைவேந்தர் சுரப்பா உத்தரவு
Added : பிப் 13, 2019 00:43
சென்னை, அண்ணா பல்கலை கழக துணைவேந்தராக, சுரப்பா பதவி ஏற்றது முதல், பல அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பல முறைகேடுகளை கண்டுபிடித்து, பல்கலை கழக ஊழியர்கள் பலர் மீது, அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியிலும், மோசடி நடந்ததாக வந்த புகார்களை தொடர்ந்து, அது குறித்து விசாரிக்கவும், சுரப்பா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக கவர்னராக, பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்றதும், தமிழக பல்கலை கழகங்களை சீர்திருத்த முடிவு செய்தார். தகுதியான நபர்களை, பல்கலை கழக துணை வேந்தர்களாக தேர்வு செய்ய துவங்கினார்.
ஒரு காலத்தில், புகழ் பெற்று விளங்கிய, சென்னை அண்ணா பல்கலை கழகம், 15 ஆண்டுகளாக, மிக மோசமான நிலைக்கு சென்றது. காரணம், பல்கலை கழக துணை வேந்தர்கள் பலர், அரசியல், பண பல செல்வாக்குடன் நியமிக்கப்பட்டனர். அவர்களால் ஏற்பட்ட அவப்பெயரை போக்கவும், பல்கலை கழகத்தின் தரத்தை உயர்த்தவும், துணை வேந்தராக சுரப்பா நியமிக்கப்பட்டார்.
அவர் பதவி ஏற்றது முதல், பல அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பணம் வாங்கி, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியது உட்பட, பல முறைகேடுகள், ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. பல பேராசிரியர்கள் மீது, நடவடிக்கை பாய்ந்துள்ளது. அந்த வகையில், ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில், முறைகேடு நடந்த மோசடியும் அம்பலமாகியுள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது:
'அண்ணா பல்கலை கழகத்தில், ஆளில்லா வான்வெளி வாகனம் வடிவமைக்கும் திட்டத்திற்காக, 20 கோடி ரூபாய் வழங்கப்படும்' என, 2015ல், சட்டசபையில், 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வர், ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, நிதியும் ஒதுக்கப்பட்டது.
அந்த நிதியில், அண்ணா பல்கலை வான்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில், பல வகையான, ஆளில்லா விமானங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து இடையூறுகளை கண்காணிக்கவும், காவல் துறையால் பயன்-படுத்தப்படுகின்றன. வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக, வருவாய் துறையாலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக வாங்கப்பட்ட பல உபகரணங்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தாங்களாகவே கண்டுபிடித்ததாக கூறியுள்ளது குறித்து, துணை வேந்தருக்கு அடுக்கடுக்கான புகார்கள் சென்றன. 'வேர்ல்ட் ரிக்கார்ட் நோவோ ஜெனரேட்டர்' என்ற ஆளில்லா விமானத்தை, அண்ணா பல்கலையின், எம்.ஐ.டி., மாணவர்கள் கண்டு பிடித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அந்த ஆளில்லா விமானம், சீனாவில் தயாரானது. ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. இது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்கலை கழகத்திற்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக காவல்துறைக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், பெரும் கூட்டம் கூடும் இடங்களில் மக்களை கண்காணிக்கவும், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா குட்டி விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ட்ரோன்களையும் பொருத்த, 3 லட்சம் ரூபாய் தான் செலவாகும் என, கூறப்படுகிறது. ஆனால், 30 லட்சம் ரூபாய் அளவிற்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த உபகரணங்கள் பற்றிய விலை உட்பட, முழு விபரங்கள் இணையதளங்களில் உள்ளன.
இணைய தளங்களில் புகுந்து, இந்த உபகரணங்கள் பற்றிய விபரங்களை எடுத்து, ஆதாரத்துடன், புகார்களை கவர்னர் அலுவலகத்திற்கும், துணை வேந்தருக்கும், எம்.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்கள் அனுப்பினர். மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் படித்து பெருமை சேர்த்த அண்ணா பல்கலை கழகத்தின், எம்.ஐ.டி., வளாகத்திற்கு களங்கம் ஏற்படாமல் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, அவர்கள் புகார்களில் கூறியிருந்தனர்.
இது குறித்து, முழு விசாரணை நடத்த துணைவேந்தர், சுரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையின் முடிவில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, தெரிகிறது.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment