Thursday, February 14, 2019


காதல் கொண்டாட்டம் தேவையா?


By எஸ்ஏ. முத்துபாரதி | Published on : 14th February 2019 01:37 AM


இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் (பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது. காதல் எது என உண்மையாக அறிந்தவர்கள், அதை தங்கள் வாழ்வில் பின்பற்றுபவர்களுக்குத்தான் அதன் பரிமாணம் விளங்கும். தான் விரும்பிய ஆண் அல்லது பெண் கிடைப்பதற்காக கடுமையான முயற்சிகளை, பல்வேறு சவால்களைச் சந்தித்து, அதில் வெற்றி அடைந்து தங்கள் வாழ்க்கைத் துணையை அடைந்த எத்தனையோ வரலாற்றுச் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இந்திய கலாசாரத்தில் குறிப்பிட்ட வயது அடைந்து, சுயமாக பொருளீட்டும் நிலை வந்துவிட்ட அனைத்து ஆண்களும் தாங்கள் விரும்பிய வகையில் வாழ்க்கைத் துணை அமைய தேடல்களில் ஈடுபடுகின்றனர். பல்வேறு காரணங்களால் விரும்பிய வகையில் பெண் அமைவதில்லை; அல்லது பல ஆண்டுகளுக்குப் பிறகே வாழ்க்கைத் துணை அமைகிறது; அல்லது அமைத்துக் கொள்கின்றனர். 

இதற்கிடையே குறிப்பிட்ட வயது வந்த ஆணோ, பெண்ணோ தங்களது உடலில் ஏற்படும் பாலுணர்வு எண்ணங்களினால் எதிர் பாலினத்தவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அதை நிறைவேற்றும் வழிகளில் ஈடுபட வாய்ப்பு உண்டாகிறது. அல்லது வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், பெற்றோரின் முறையான வளர்ப்பில், சரியான வழிகாட்டுதலில் உள்ளவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் விளக்கம் காரணமாக உடற்கூறு பற்றி அறிந்த மாணவ, மாணவியர் குறிப்பிட்ட வயதில் ஏற்படும் பாலுணர்வு குறித்த உணர்வுகளைப் பற்றி ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, அதை உதாசீனம் செய்து தங்களின் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொண்டு அதன் மீது கவனத்தைச் செலுத்துகின்றனர். 
 
புரிதலுடன் இணைந்து வாழும் எல்லா ஆண்-பெண் உறவுகளையும் நாம் ஏற்றுக் கொள்வதில் எவ்விதத் தயக்கமும் இல்லை. தான் படிக்கும் பள்ளி, கல்லூரியில் உடன் படிக்கும் மாணவன் அல்லது மாணவி மீது ஏற்படும் ஈர்ப்பு என்பதை நிச்சயமாக உண்மையான காதல் என்கிற ரீதியில் எடுத்துக்கொள்ள முடியாது. காரணம், அவர்களுக்கு அந்த வயதில் ஏற்படுவது உடலில் பாலுணர்வு காரணமாக எழுந்த மோகம்தான். அந்த வயதுக்கு உண்டான செயல் அப்படி. எனவே, சுற்றி இருப்பவர்கள்தான் அவர்களுக்கு விளக்கி வயதின் காரணமாக ஏற்படும் விருப்பமே இது; இதற்குப் பெயர் காதல் அல்ல எனப் புரிய வைக்க வேண்டும்.
இப்படிப் புரிய வைக்காமல் விடுவதால்தான் அவர்கள் தாங்கள் மேற்கொண்டுள்ள செயலை உண்மையான காதல் எனத் தவறாகப் புரிந்து வீட்டை எதிர்த்து எதாவது ஒரு செயலுக்கு உள்ளாகின்றனர். பின்னர், காலம் உணர்த்தும் பாடத்தில் தங்கள் நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்குள் ஓரளவு உணர்ந்து கொள்ளும் நிலைக்கு வருகின்றனர். அதற்குள் தாங்கள் செய்த தவறுகளால் இருதரப்பு வீட்டிலும், சமூகத்திலும் பல்வேறு சங்கடமான நிகழ்வுகள் அரங்கேறியிருக்கும். 
 
இப்படியான புரிதலை இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்படுத்தி நாகரிகமான சமுதாயத்தை உருவாக்கிவிட்டால், ரயில் நிலையத்தில் வெட்டுவது, ஆசிட் வீசுதல் போன்ற சம்பவங்கள் நிகழாது. ஒருவேளை சூழல் காரணமாக தாங்கள் விரும்பிய நபர் தனக்கு வாழ்க்கைத் துணையாக கிடைக்காத நிலை உருவானால், எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என நினைத்து வாழ்பவர்களும் உண்டு. இவர்களால் இந்த சமூகத்துக்கு எவ்விதக் கெடுதலும் இல்லை. 
 
பள்ளிக்கூட நட்பை எப்படி காதல் என்று ஏற்றுக் கொள்ள முடியாதோ, அப்படித்தான் கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்ட நட்பையும் காதலாக ஏற்க முடியாது. ஏனெனில், ஒவ்வொரு ஆணும் பெண்ணும் 18 வயது கடந்தவுடன் பக்குவமடைந்து சுயமாக முடிவெடுக்கும் திறன் பெற்று, தங்கள் வாழ்க்கையைத் தாங்களே அமைக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள் என எப்படி ஒரு சட்டம் சொல்ல முடியும்?

ஒவ்வொரு மனிதனின் பக்குவம் என்பது வயதைப் பொருத்ததல்ல. அவர்கள் வாழும் சூழலைப் பொருத்தது. பல ஆண்களும், பெண்களும் 21 வயதுக்கு மேல் ஆன பிறகும் தங்கள் வாழ்க்கை குறித்தும், வாழ்க்கைத் துணை குறித்தும் போதுமான பக்குவத்தைப் பெறாமல் இருக்கிறார்கள். இதற்காக இந்த குறிப்பிட்ட வயதில்தான் காதல் வரவேண்டுமா எனக் கேட்பவர்
களும் உண்டு. காதல் என்று நாம் பெயர் கொடுத்துள்ளோமே தவிர, அன்புதான் அடிப்படையானது. பள்ளிச் சிறுமியை மாணவர் காதலிப்பது உள்பட பல்வேறு வகையான பொருந்தாக் காதலை நாம் அனுமதிக்கக் கூடாது. இவற்றுக்கெல்லாம் உடலில் ஏற்பட்ட பாலுணர்வினால் உண்டான காமம்தான் காரணம்; இத்தகையோருக்கு அதை உணர முடியாத வயதும் காரணம்.

இந்த உலகில் வாழ்வதற்கு ஒவ்வொரு உயிரினத்துக்கும் உரிமை உள்ளது. அதனதன் வாழ்வில் ஏற்படும் தொடர்புகளில் தனக்கான இணையை ( வாழ்க்கைத் துணையை) தேர்வு செய்து கொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. குறிப்பாக, இந்தியா போன்ற பண்பாடு, கலாசார பின்னணி கொண்ட நாடுகளில், குறிப்பிட்ட வயதுக்கு வந்த ஒரு ஆண் அல்லது பெண் தங்கள் வாழ்க்கைத் துணைக்கான தேடுதலை தங்களை வளர்த்துவரும் பெற்றோர்களின் வழிகாட்டுதலில் மேற்கொள்கின்றனர். 
 
வயது வித்தியாசம் பாராமல் மனித சமூகத்தில் எழும் இந்தப் பாலுணர்வு காரணமாக, ஆங்காங்கே குற்றங்கள் பெருகி வருகின்றன. நாகரிக வார்த்தைகளில் சொல்வதென்றால் காதல் என்ற பேரில் காமத்துக்கு நாம் அடிமையாகிவிடக் கூடாது. உண்மையான காதல் வெளியே தெரியாது. அது தன் வாழ்க்கைத் துணையோடு எப்போதும் உண்மையாக இருக்க வைக்கும். காதல் என்றும் காதல்தான்; அது காமம் ஆகிவிடாது. அது உணர்ந்தவர்களுக்குத் தெரியும். எனவே, உலகம் முழுவதும் கொண்டாடி உறுதிப்படுத்த வேண்டிய செயல் அல்ல காதல். வாழ்க்கை துணைக்காக வழங்கும் உண்மையான அன்புதான் காதல்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024