Tuesday, April 16, 2019

ஓட்டுப்பதிவு நாளில் உல்லாச சுற்றுலா; பொறுப்பற்ற வாக்காளர்களால் சிக்கல்

Added : ஏப் 16, 2019 02:56

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, 18ம் தேதி, நடக்கிறது. அதற்கு முதல் நாள், 17ம் தேதி மகாவீர் ஜெயந்தி. மறுநாளான, 19ல் புனித வெள்ளி, 20, 21 சனி, ஞாயிறு என்பதால், தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை வருகிறது.

ஓட்டுப்பதிவு நாளன்று, அந்தந்த தொகுதியை சார்ந்தவர்களை தவிர, அன்னியர்கள் இருக்கக் கூடாது என்பது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. பிரசாரத்துக்கு வந்த, வெளி மாவட்டம் மற்றும் வேறு தொகுதிகளைச் சேர்ந்த, அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள், தொகுதியில் இருந்து வெளியேற்றப்படுவர். கண்காணிப்பை மீறி, அவர்கள் தங்கியது கண்டறியப்பட்டால், சிறைத் தண்டனைக்கும் வழியுண்டு. 100 சதவீத ஓட்டுப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக, இந்த முறை, தேர்தல் ஆணையம், பல புதுமையான அணுகுமுறைகளை பின்பற்றி வருகிறது.

அதைப் பொருட்படுத்தாமல், ஐந்து நாள் விடுமுறையை பயன்படுத்தி, சுற்றுலா செல்வதற்கு ஆயத்தமாகும் வாக்காளர்களும் உள்ளனர். வெயில் போட்டு தாக்குவதால், ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, ஏற்காடு, பச்சமலை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு, இவர்கள் தயாராகின்றனர். சிலர், ஆன்மிக தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

'சுற்றுலா வாகனங்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உள்ளாகி வருகின்றன. ஆனால், அதை மீறி, தங்கள் சொந்த வாகனங்களில் வாக்காளர்கள் சென்றால், அதை தடுப்பது கடினம். 'இருப்பினும், சுற்றுலா தலங்களில் இருந்து, வெளித்தொகுதி வாக்காளர்கள் என்ற முறையில், அவர்களை வெளியேற்ற முடியும்' என்கின்றனர் அதிகாரிகள்.

'ஓட்டுப்பதிவு நாளன்று, உல்லாச சுற்றுலா செல்வது அபத்தமானது. ஒவ்வொரு ஓட்டும் விலைமதிப்பற்றது என்பதை, வாக்காளர்கள் அனைவரும் உணர வேண்டும். 'ஐந்து ஆண்டுகளுக்கான தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆட்சியை முடிவு செய்வதற்கு, உல்லாச சுற்றுலாவை தவிர்க்கக் கூடாதா...' என்று கேள்வி எழுப்புகின்றனர், தேசத்தை நேசிக்கும் வாக்காளர்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024