Friday, May 24, 2019


ஏழும் 'வாஷ் - அவுட்': அன்புமணிக்கும் கை நழுவியது

Added : மே 24, 2019 00:45

ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட, பா.ம.க., அனைத்திலும், தோல்வி அடைந்துள்ளது. அந்த கட்சியின், நம்பிக்கை நட்சத்திரம் அன்புமணி, தர்மபுரி தொகுதியில் போராடி தோல்வியடைந்தார்.கடந்த, 1989 முதல், 2019 வரை, நடந்த தேர்தல்களில், பா.ம.க., பலமுறை கூட்டணி மாறி போட்டியிட்டது. 1996ல், சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட, பா.ம.க., நான்கு சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1998 லோக்சபா தேர்தலில், முதல்முறையாக, பா.ஜ., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே கூட்டணி, 1999 லோக்சபா தேர்தலிலும், இரண்டாம் முறையாக தொடர்ந்தது.ஆனால், 2001 சட்டசபை தேர்தலில், பா.ம.க., - அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றது. 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, முதல் முறையாக, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் வெற்றி பெற்றது. 2006 சட்டசபை தேர்தலில், அதே கூட்டணியில் தொடர்ந்த, பா.ம.க., 30ல் போட்டியிட்டு, 18ல் மட்டும் வெற்றி பெற்றது. 2009 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு தாவிய, பா.ம.க., ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியை சந்தித்தது.பின், 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்றில் மட்டும் வெற்றி பெற்றது. இத்தோல்விக்கு பின், 'தமிழகத்தில், திராவிட கட்சிகளுடன், இனி கூட்டணி இல்லை. பா.ம.க., தனித்தே போட்டியிடும்' என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.இதை மீறி, 2014ல், அன்புமணி நிர்பந்தத்தால், லோக்சபா தேர்தலில், பா.ம.க., - பா.ஜ., - கம்யூ., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., இடம்பெற்ற கூட்டணியில், ஏழு தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், தர்மபுரியில், தலித்துக்களுக்கு எதிராக பிற ஜாதிகள் கைகோர்த்ததால், அன்புமணி மட்டும் வெற்றி பெற்றார். பிற தொகுதிகளில், பா.ம.க., வேட்பாளர்கள் மண்ணை கவ்வினர். தொடர்ந்து, 2016ல் நடந்த, சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட்ட நிலையிலும், பா.ம.க., ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.கடந்த சில ஆண்டுகளாக ஆளும்கட்சியான, அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சனம் செய்தது பா.ம.க., தொடர்ந்து, அக்கட்சி அமைச்சர்கள் மீது, கவர்னரிடம் ஊழல் புகார் செய்தது. தொடர்ந்து அக்கட்சி தலைைமையை, 'டயர் நக்கிகள்' என, பா.ம.க., தலைமை விமர்ச்சனம் செய்தது. அமைச்சர் அன்பழகனை ஆண்மையற்றவர் என, அன்புமணி கடுமையாக விமர்ச்சித்தார். அதே போல், தே.மு.தி.க., தலைமையையும், பா.ம.க., தலைவர்கள் கடுமையான வார்த்தைகளால் விமர்ச்சனம் செய்தனர். தொடர்ந்து, லோக்சபா தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க., கூட்டணியில் ஐக்கியமாகினர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், மத்திய சென்னை, ஸ்ரீபெரம்புதுார், அரக்கோணம், தர்மபுரி, விழுப்புரம், திண்டுக்கல், கடலுார் ஆகிய ஏழு தொகுதிகளில், பா.ம.க., போட்டியிட்டது. ஆனால், இந்த கூட்டணியை, அ.தி.மு.க.,- பா.ம.க., தொண்டரகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது, பிரச்சாத்தின் போது பல இடங்களில் எதரொலித்தது.நேற்று, ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில், ஆரம்பம் முதலே, தர்மபுரியை தவிர்த்து, மற்ற தொகுதிகளில், பா.ம.க., வேட்பாளர்கள் பின்னடைவையே சந்தித்தனர்.தர்மபுரியில் போட்டியிட்ட, அக்கட்சியின், 'தல' அன்புமணி, முதல் ஐந்து சுற்றுகள் முன்னணி பெற்ற நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் பின் தங்கி, கடைசியில் போராடி தோல்வி அடைந்தார்.இதுகுறித்து, பா.ம.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:பா.ம.க., துவங்கிய காலத்தில் இருந்த பல தலைவர்கள், தற்போது, வேறு கட்சிகளில் இணைந்துவிட்டனர். மேலும், தனித்து போட்டியிடுவோம் என அறிவித்து, கூட்டணி அமைத்ததை மக்களும், பா.ம.க., அடிமட்ட தொண்டர்களும் ஏற்கவில்லை என்பதை, இத்தேர்தல் முடிவு, தலைமைக்கு தெளிவுபடுத்தியுள்ளது.இதற்கு பின்னராவது, கட்சியை வழி நடந்துவது எப்படி என்பதை, பா.ம.க., தலைமை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். -நமது சிறப்பு நிருபர்-

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025