Monday, August 12, 2019

முடக்கம்!  பெரும்பாக்கம் இணைப்பு சாலை திட்டம்...12 கி.மீ., சுற்றி செல்லும் 6 லட்சம் மக்கள்... முதல்வர் தலையிட பொதுமக்கள் கோரிக்கை

Added : ஆக 12, 2019 04:59



-நமது நிருபர் --பெரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதியை, மற்ற பகுதிகளுடன் இணைக்கும், முக்கிய இணைப்பு சாலை திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால், தினமும், ஆறு லட்சம் பேர், 12 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.

குடிசை மாற்று வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்க, பெரும்பாக்கத்தில், 200 ஏக்கர் இடம் அரசு ஒதுக்கியது. அதில், 1,200 கோடி ரூபாயில், 2009ல், எட்டு மாடி கொண்ட, 20 ஆயிரத்து, 376 வீடுகள் கட்டும் பணிகள் துவங்கின; தற்போது, 17 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. அபார வளர்ச்சிஇதில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 14 ஆயிரம் பேர், மறு குடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர். மருத்துவமனை, பேருந்து நிலையம், பள்ளி, அரசு கல்லுாரி என, பெரும்பாக்கம் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த குடியிருப்பை சுற்றி, பொலினினி, ஆர்மி, டி.எல்.எப்., உள்ளிட்ட பிரமாண்டமான தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சிறிய அளவில், 40க்கும் மேற்பட்ட, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் என, பெரும்பாக்கத்தைச் சுற்றி, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர்கள், மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு, ஓ.எம்.ஆர்., வழியாக, 12 கி.மீ., சுற்றி செல்ல வேண்டி உள்ளது.ஓ.எம்.ஆரில், குமரன் நகர், ஆவின் மற்றும் சோழிங்கநல்லுார் சிக்னல்களில், நெரிசல் அதிகமாக இருப்பதால், சோழிங்கநல்லுார் வழியாக தாம்பரம் செல்ல, இரண்டு மணி நேரம் வரை ஆகிறது. துரித பயணத்திற்கு, பெரும்பாக்கத்தில் இருந்து, மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் சாலையுடன் இணைக்கும் வகையில், 3.5 கி.மீ., துாரத்தில், இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு முன், குடிசை மாற்று வாரியம் சார்பில், 6 கோடி ரூபாயில், 1.5 கி.மீ., நீளத்தில், 100 அடி அகலத்தில், இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.நெரிசல் குறையும்மீதமுள்ள, 2 கி.மீ., துாரத்தில், சதுப்பு நிலமாக உள்ளது. அதில், நீரோட்டம் பாதிக்காத வகையில், பாலம் அமைத்து, சாலையை இணைக்க வேண்டும். இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், 12 கி.மீ., சுற்றி செல்வது தடுக்கப்பட்டு, 5 கி.மீ., துார பயணத்தில், மேடவாக்கத்தை அடைய முடியும். இதன் மூலம், ஓ.எம்.ஆரில் நெரிசல் கணிசமாக குறையும்.குடிசை மாற்று வாரியம் போட்ட, 100 அடி சாலை, பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மீதமுள்ள, 2 கி.மீ., துாரத்தை இணைக்க, ஊராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டவில்லை. வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அனுமதியுடன் தான், சாலையை இணைக்க முடியும்.இந்த சாலையை, நெடுஞ்சாலைத் துறை தான், முறையாக பராமரிக்கும். பாதியில் நிற்கும் சாலையை இணைக்க, முனைப்பு காட்ட வேண்டியது, நெடுஞ்சாலைத் துறை தான்.ஆனால், 100 அடி அகல சாலை, ஊராட்சி நிர்வாகத்தில் இருப்பதால், நெடுஞ்சாலைத் துறை, தானாக முன்வந்து, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழலில் உள்ளது. 

இங்குள்ள பிரச்னையே, சாலையை இணைக்க, முதலில் எந்த துறை முயற்சி எடுக்க வேண்டும் என்பது தான். துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாத இந்த இழுபறி, இரண்டு ஆண்டுகளாக நீடிக்கிறது. பெரும்பாக்கம் அபார வளர்ச்சி அடைந்து வருவதால், போக்குவரத்து நெரிசல், மக்கள் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முதல்வர் தலையிட்டு, துறைகளை ஒருங்கிணைய செய்து, சாலையை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெரும்பாக்கம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இணைப்பு சாலை இல்லாததால், அவசர தேவைக்கு, பொலினினி குடியிருப்புக்குள் புகுந்து செல்கிறோம். நுாறடி சாலையை, சோழிங்கநல்லுார் -- மேடவாக்கம் பிரதான சாலையுடன் இணைத்தால், ஓ.எம்.ஆர்., சுற்றி செல்லும் அலைச்சல் தவிர்க்கப்படும். எங்களை, அவசரமாக மறுகுடியமர்வு செய்த அரசு, அடிப்படை கட்டமைப்புகளை செய்து தருவதில், முனைப்பு காட்டுவதில்லை. முதல்வர் தலையிட்டு, சாலையை இணைக்க வேண்டும்.குடிசை மாற்று வாரிய மக்கள்பெரும்பாக்கம்எங்கள் எல்லைக்கு உட்பட்ட இடத்தில், 100 அடி அகலத்தில் சாலை அமைத்துள்ளோம். வேறு துறை இடத்தில், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அனுமதி இல்லாமல், சாலையை இணைக்கவும் முடியாது. உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்
-நமது நிருபர் --

No comments:

Post a Comment

Granting of Minimum remuneration to the Practical External Examiner even if none of the registered candidates have reported for the Practical/Viva-voce examinations

KERALA UNIVERSITY OF HEALTH SCIENCES  ABSTRACT KUHS –  Exam General A – Granting of Minimum remuneration to the Practical External Examiner ...