Monday, August 12, 2019

மனிதனை புனிதனாக்கும் பயணம்

Added : ஆக 12, 2019 02:17

இஸ்லாமிய மார்க்கத்தில், ஐந்து கடமைகள் முக்கியமானவை.கலிமா எனும் இறை நம்பிக்கை. தினமும் ஐந்து வேளை தொழுகைகள், வருடத்தில் ஒரு மாதம் ரம்ஸான் மாதத்தில், நோன்பு வைப்பது. அந்த ரம்ஸான் மாதத்தில், வசதி படைத்தவர்கள், இல்லாதவர்களுக்கு தரும், ஜகாத் உதவி. ஐந்தாவது கடமை, ஹஜ் எனும் மெக்காவிற்கு செல்லும், புனித பயணம்.இந்த புனித பயணத்தை, வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும், தன் வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும்.'ஜில்ஹஜ்' மாதத்தில் மெக்காவிற்கு செல்வதே, 'ஹஜ்' எனும் புனிதப் பயணம்.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், முதல் இறை இல்லத்தை இப்ராஹிம் நபி கட்டினார்.இஸ்லாமிய மார்க்கத்தின் கடைசி இறைத்துாதரான முஹம்மத் நபி (ஸல்) இந்த இறை இல்லத்தை சீரமைத்தார். மக்களுக்கு, தொழுகைக்கு இங்கு இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.'ஜில்ஹஜ்' மாதத்தில் மெக்காவிற்கு புனிதப் பயணம் சென்றால், ஹஜ் என்று அழைக்கப்படும்.மற்ற மாதங்களில் சென்றால், அதை 'உம்ரா' என்று சொல்வர்.தன்னுடைய சுக போகங்களை துறந்து, உற்றார் உறவினரை பிரிந்து, வியாபாரம், வேலை போன்றவற்றை விட்டுச் செல்வதால் ஏற்படும் நஷ்டங்களையும், கஷ்டங்களையும் ஏற்று, மனமுவந்து பொருள் செலவு செய்து, இறைவனுடைய நாட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன், மேற்கொள்ளப்படும் தியாகப் பயணமே 'ஹஜ்' எனும் பனிதப் பயணம் ஆகும்.

இந்த ஹஜ் பயணத்தை நிறைவேற்றும் மனிதன் புனிதம் அடைகிறான். கோபம், எரிச்சல், பேராசை, ஏமாற்றுதல், புறம் பேசுதல், வஞ்சகம் போன்ற தீய குணங்களை கடைப்பிடிக்காமல், அமைதி, அன்பு, நட்பு, உதவும் மனப்பான்மை போன்ற நல்ல விஷயங்களில் ஈடுபடுகிறான்.பாவங்கள் நீங்கப்பெற்று, அன்று பிறந்த பச்சை பிள்ளையைப்போல மாறுகிறான். 'ஹஜ்' பயணம் முடிந்து திரும்புகையில், புனிதனாகவும், துாயவனாகவும் திரும்புகிறான்.மக்கா நகரத்திற்குள் நுழையம் முன், 'இஹ்ராம்' எனும் வெண்ணிற ஆடையை அணிந்து கொள்கின்றனர். எல்லாருக்கும் ஒரேவிதமான ஆடை தான். எவ்வளவ பெரிய பணக்காரர்கள் என்றாலும், இந்த ஆடையை தான் அணிய வேண்டும். இது, அவர்களை பணிவுள்ளவர்களாக மாற்றுகிறது.ஜாதி, மொழி, தேசம், நிறம் பாகுபாடின்றி, எல்லாரும் கூடும் ஒரு மாநாடாக 'ஹஜ்' பயணம் திகழ்கிறது.நபிகள் நாயகம் இறுதி சொற்பொழிவு நிகழ்த்திய அரபா மைதானத்தில், தங்கி தொழுகையை நிறைவேற்றுவர்.

ஹாஜிரா அம்மையார் தன் குழந்தை இஸ்மாயிலின் தாகத்தை தீர்க்க, ஸபா, மருவா எனும் இரு குன்றுகளுக்கிடையே ஓடியதை நினைவுகூரும் வகையில் ஓடுவது, பிராணிகளை குர்பானி கொடுப்பது, நம்மை திசை திருப்பி, தீய வழியில் செலுத்தும் ஷைத்தானை, மினா எனுமிடத்தில் கல் எறிவது, ஹஜ் பயணியர் செய்கிற நற்காரியங்களாகும்.'இதோ வந்துவிட்டோம் இறைவா! உன் அழைப்பை ஏற்று, உன் இடத்திற்கு... இதோ வந்துவிட்டோம் இறைவா... உன் அருட் கொடைகளுக்கு நன்றி கூற...' என்று கூறிக்கொண்டே, ஹாஜிகள் மெக்காவை வலம் வருவர்.இந்த குறுகிய உலக வாழ்வில், நாம் இந்த கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு காரணம் உள்ளது. ஏனென்றால், நாம் இறந்த பிறகு, மறுமை எனும், நீண்ட முடிவே அற்ற வாழ்க்கை உள்ளது. அங்கே நமக்கு இறைவன் சொர்க்கத்தை அளிக்க வேண்டும் என்ற தவிப்பு தான்.இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம்...ஒரு நாட்டில் வினோதமான வழக்கம் இருந்தது. அந்த நாட்டு அரசனை, மக்களே தேர்வு செய்வர். அவனுக்கு வயது ஆகி, ஆளத் தகுதியில்லாத நிலை வரும்.அந்த சமயத்தில் அந்த அரசனை காட்டில் விட்டுவிடுவர். அந்த காடு, புதர்களும், விஷச் செடிகளும், பாம்புகளும், புலி, சிங்கங்களும் வாழும் இடம்.சாப்பிட எதுவும் இல்லை. குடிக்க எதுவுமில்லை.அப்படித்தான் அந்த அரசனையும், மக்கள் காட்டில் விடுகின்றனர். மக்களின் கண்ணுக்கு, ஒரு பிச்சைக்காரன் தென்படுகிறான். அவனையே புதிய அரசனாக முடிவு செய்து, அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.அந்தப் பிச்சைக்காரனுக்கு அதிர்ச்சி. 'நானா இந்த நாட்டின் அரசன்?' பழைய அரசனுக்கு ஏற்பட்ட கதி அவனுக்கு தெரியும். அவனுடைய முதல் உத்தரவு, அந்த காட்டை சுத்தப்படுத்துவதாக இருந்தது.காய், கனி தரும் மரங்களை நடுவது, நீரோடைகளை அமைப்பது, விஷச் செடிகளை அகற்றுவது, ஆபத்தான மிருகங்களை வேட்டையாடுவது என்று, புதிய அரசாணைகளை பிச்சைக்காரன் செயல்படுத்தினான்.நாம் இறுதியில் செல்லப்போகும் இடம் எங்கே? அதை எப்படி வைத்துக்கொள்வது என்று, சரியாக புரிந்து கொண்டான், அந்த புதிய அரசன். இதில் அறிந்து கொள்ள நமக்கும் ஏராளமான பாடங்கள் உள்ளன.இறைவன் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தருவானாக...ஆமின்!
- மொட்பில்லைசுஹைல் அஹ்மத்பக்ரீத்

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...