Thursday, October 17, 2019

நெருங்கும் தீபாவளி: 5% அக விலைப்படியை உடனே வழங்கிடுக- ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்



சென்னை

தீபாவளி நெருங்குவதால், மத்திய அரசைப் போல் தமிழக அரசும் 5% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவில் அரசு வேலைகளில் இருக்கும் அனைவருக்கும் பொருளாதார விலைவாசி ஏற்ற, இறக்க அடிப்படையில், புள்ளியியல் கணக்கீட்டின்படி ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி வழங்கி வருவது நடைமுறையில் உள்ளது.

அதன் அடிப்படையில் மத்திய அரசு, ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்தவுடன் மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உடனடியாக வழங்குவது வழக்கம். கடந்த வாரம் மத்திய அரசில் பணிபுரிபவர்களுக்கு 5% அகவிலைப்படியை உயர்த்தி, அறிவிப்பு வெளியானது.
தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கும் ஐந்து சதவீத அகவிலைப்படியினை உயர்த்தி வழங்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.

மேலும், அகவிலைப்படி நிலுவைத்தொகையை 01.07.2019 முதல் உயர்த்தி, ரொக்கமாக வழங்குவதன் மூலம் ஆசிரியர்- அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட 18 லட்சம் பேரின் சுமார் ஒன்றரைக் கோடி குடும்பங்கள் மகிழ்ச்சியோடு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவர்.

பண்டிகை நெருங்குவதால் ஐந்து சதவீதம் அகவிலைப்படியினை உடனே வழங்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் முதல்வரை வேண்டுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024