Sunday, October 6, 2019


காஸ் சிலிண்டர் மானியம் எவ்வளவு? ரசீதில் தெரிவிக்காததால் குழப்பம்

Added : அக் 06, 2019 00:01

வங்கி கணக்கில் செலுத்தப்படும், வீட்டு சமையல் காஸ் சிலிண்டருக்கான மானிய தொகை விபரத்தை, 'டெலிவரி' ரசீதில் தெரிவிக்காததால், வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை, மானிய விலையில் சப்ளை செய்தன.

'ஆதார்' எண்

இதனால், ஒரே நபர், பல முகவரிகளில், காஸ் சிலிண்டர் வாங்கி, கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்றனர். இதை தடுக்க, மத்திய அரசு, 2015ல், நேரடி மானிய திட்டத்தை துவக்கியது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள், சந்தை விலையில் சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானிய தொகை, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதற்காக, வாடிக்கையாளர் களின், வங்கிக் கணக்கு எண், 'ஆதார்' எண் போன்றவை வாங்கப்பட்டன.

கோரிக்கை

மாதந்தோறும், சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சிலிண்டர் டெலிவரி செய்யும் போது, காஸ் ஏஜன்சி சார்பில் வழங்கப்படும் ரசீதில், சிலிண்டர் விலை, மானிய தொகை விபரங்கள் இடம் பெற்றன. இந்நிலையில், தற்போது வழங்கப்படும் ரசீதில், மானிய தொகை விபரம் தெரிவிக்கப்படுவதில்லை. இதனால், மானிய விபரம் தெரியாததுடன், அது, வங்கியில் ஒழுங்காக செலுத்தப்படுகிறதா என, வாடிக்கையாளர்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர்.

இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமையல் காஸ் சிலிண்டருக்கான மானிய தொகையை, டெலிவரி ரசீதில் பதிவு செய்வது நிறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், மானிய தொகை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் தொடர்ந்து செலுத்தப்படுகிறது.

ஏற்கனவே இருந்தது போல, ரசீதில் மானிய தொகையை தெரிவிக்குமாறு, பலரிடம் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இவை, தலைமை அலுவலகங்களில் உள்ள, உயரதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024