Monday, October 7, 2019

கொசு கடிப்பது உள்ளாட்சித் துறையைச் சேர்ந்தது; கடித்த பிறகுதான் சுகாதாரத் துறைக்குள் வருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்


நிகழ்ச்சியில் பேசும் அமைச்சர் விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை

கொசு கடிப்பது சுகாதாரத் துறையைச் சேர்ந்தது அல்ல என்று அத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று (அக்.5) நடைபெற்ற புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

"அரசும் நீதித்துறையும் ஒருங்கிணைந்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றன. குளிர்சாதன வசதிகளுடன் புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கக் கட்டிடம் மேம்படுத்தப்படும்.

பல வருடங்களாக வலியுறுத்தப்பட்டு வரும் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வாய்க்கால் அமைக்க ரூ.6 ஆயிரம் கோடி தேவை என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிதியை ஒதுக்கி, திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார். புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் கொசுக்கடி தாங்க முடியவில்லை என இங்கு பேசியவர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக கொசு கடிப்பது உள்ளாட்சித் துறையைச் சேர்ந்தது. கொசு கடித்த பிறகுதான் அது சுகாதாரத் துறைக்கு வருகிறது. இருந்தாலும், உள்ளாட்சித் துறை மற்றும் சுகாதாரத் துறையும் இணைந்து கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

சிங்கப்பூரில் காய்ச்சலால் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் அதன் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில்தான் உள்ளன.

ஆறு, குளங்களைத் தூர்வாருதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு என நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசு முறையாகச் செயல்படுத்தி வருவதால் மக்கள் பயனடைகின்றனர்".

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.

சுரேஷ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024