Monday, October 7, 2019

ஜெயங்கொண்டம் அருகே நாடுகள், தலைநகரங்களின் பெயர்களை ஒப்பித்து யுகேஜி மாணவர் சாதனை


சாய்கிருத்திக்

ஜெயங்கொண்டம் அருகே தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவர் உலக நாடுகளின் வரைபடத்தை பார்த்து, நாடுகளின் பெயர்களையும் அவற்றின் தலைநகரங்களையும் 5.19 நிமிடத்தில் ஒப்பித்து நேற்று சாதனை படைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகன் சாய்கிருத்திக்(5). இவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். இவருக்கு உலக நாடுகள் குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகம் இருப்பதைக் கண்ட அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், தினமும் நாடுகளின் வரைபடங்களை காண்பித்து, நாட்டின் பெயர்களையும், அவற்றின் தலைநகரங்களையும் சொல்லிக் கொடுத்து, பயிற்சி அளித்து வந்தனர்.

இந்நிலையில், சாதனை முயற்சியாக குளோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற குழுவினர், மாணவர் சாய்கிருத்திக்கிடம் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெரிய திரையில் நாடுகளை தனித்தனியாக காண்பிக்க, அவற்றின் பெயர்களையும், தலைநகரங்களையும் சாய்கிருத்திக் சரியாக கூறினார். இவ்வாறு உலக நாடுகள் அனைத்தையும், அவற்றின் தலைநகரங்களுடன் 5.19 நிமிடங்களில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவர் சாய்கிருத்திக்கை பாராட்டி, சாதனைச் சான்றிதழை அந்தக் குழுவினர் வழங்கினர். மேலும், விரைவில் கின்னஸ் சாதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோரும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024