Tuesday, October 8, 2019

செவிலியர் பணிக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை நியமிக்க தடை: சென்னை உயர்நீதிமன்றம்

By DIN | Published on : 07th October 2019 11:31 PM

சென்னை: தமிழகத்தில் செவிலியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 64.50 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 64 மதிப்பெண்களும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு 54 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டதாகவும், 2 ஆயிரத்து 345 பதவிகளுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தற்காலிக தேர்வு என்ற பெயரில் பணியிடங்களின் எண்ணிக்கையை 2 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளதாகவும், தகுதி மதிப்பெண்ணை விட குறைந்த மதிப்பெண் பெற்ற 56 பேரை தற்காலிகமாக தேர்வு செய்ததுடன், அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுத்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகவும், அந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்கவும் கோரி சென்னையைச் சேர்ந்த செவிலியர் பட்டதாரி திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடந்த வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செவிலியர் தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால், சட்டவிதிகளை பின்பற்றி மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுத்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கு தடைவித்ததுடன், தகுதி மதிப்பெண்களுக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவும் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இது தொடர்பாக அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் மருத்துவ பணிகள் வாரியம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024