Sunday, October 6, 2019

கவலை வேண்டாம்! ஞாயிற்று கிழமையும் சமையல் கேஸ் சப்ளை

Updated : அக் 06, 2019 00:54 | Added : அக் 05, 2019 23:14



சென்னை : சமையல் காஸ் பற்றிய கவலை, பெண்களுக்கு இனி வேண்டாம். ஞாயிற்றுக்கிழமைகளிலும், 'காஸ் சிலிண்டர் டெலிவரி' உண்டு. இது பண்டிகை காலம் என்பதால், வாடிக்கையாளர்கள் வசதிக்காக, எண்ணெய் நிறுவனங்கள், இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளன.

தமிழகத்தில், 'இந்தியன் ஆயில்' நிறுவனத்திற்கு, 1.34 கோடி, 'பாரத் பெட்ரோலியம்' நிறுவனத்திற்கு, 60 லட்சம், 'ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' நிறுவனத்திற்கு, 40 லட்சம் என, வீட்டு காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேற்கண்ட நிறுவனங்கள் சார்பில், சிலிண்டர்களை, வீடுகளுக்கு டெலிவரி செய்ய, 1,600 காஸ் ஏஜென்சிகள் உள்ளன. எண்ணெய் நிறுவனங்களின் இணையதளம், கட்டணமில்லா தொலைபேசி எண், மொபைல் போன் செயலி, குறுந்தகவல் வாயிலாக, சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.

பின், ஏஜென்சி ஊழியர்கள், வீடுகளுக்கு வந்து, சிலிண்டர்களை டெலிவரி செய்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், காஸ் ஏஜென்சிகள் செயல்படுவதில்லை. இதனால், ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டும் பெற்றுள்ளவர்களின் வீடுகளில், ஞாயிற்றுக் கிழமை சிலிண்டர் தீர்ந்து விட்டால், சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பிற மாவட்டங்களைச் சேர்ந்த பலர், பணி காரண மாக, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வசிக்கின்றனர். அவர்களின் வீடுகளில், கணவன், மனைவி என, இருவரும் வேலைக்கு செல்கின்றனர்.

இதனால், சிலிண்டர் எடுத்து வரும் போது, அலுவலக நாட்களில், அவர்களால் வாங்க முடிவதில்லை. ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில், அவர்கள் வீட்டில் இருந்தாலும், சிலிண்டர் டெலிவரி கிடையாது. தற்போது, பண்டிகை காலம் என்பதால், பலரும் வீடுகளில், சமையல் மட்டுமின்றி, இனிப்பு, கார வகைகளும் செய்கின்றனர். இதனால், சமையல் காஸ் சிலிண்டருக்கு, வழக்கத்தை விட தேவை அதிகரித்துள்ளது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை உள்ளிட்ட நாட்களிலும், வாடிக்கையாளர்களுக்கு, காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்யுமாறு, ஏஜென்சிகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. இதனால், சிலிண்டர் பதிவு செய்த, மறுநாளே டெலிவரி செய்யப்படுகிறது. இதற்காக, காஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலைகளில், தொடர்ந்து காஸ் நிரப்பப்பட்டு, அவை உடனுக்குடன், ஏஜென்சிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

வியாபாரத்திற்கு வீட்டு சிலிண்டர்

தமிழகத்தில், தற்போது வீட்டு சிலிண்டர் விலை, 620 ரூபாயாக உள்ளது. இந்த விலைக்கு, சிலிண்டர் வாங்கியதும், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில், மத்திய அரசின் மானிய தொகை செலுத்தப்படும். ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும், வணிக சிலிண்டர் விலை, 1,199 ரூபாயாக உள்ளது. பண்டிகை காலம் என்பதால், உணவு தொழில் உள்ளிட்ட வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. இதனால் சிலர், வீட்டு சிலிண்டரை, முறைகேடாக வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருவதாக, புகார் எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...