Friday, January 24, 2020


பிடிவாதம்! கடைசி ஆசையை கூற 'நிர்பயா' குற்றவாளிகள் மறுப்பு; தண்டனையை இழுத்தடிக்க திட்டம்?

Updated : ஜன 24, 2020 02:50 | Added : ஜன 23, 2020 21:28 

புதுடில்லி : மருத்துவ மாணவி, 'நிர்பயா' வழக்கில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள குற்றவாளிகள் நான்கு பேரும், தங்களின் கடைசி ஆசை, கடைசியாக சந்திக்க விரும்பும் நபர்கள் பற்றிய விபரங்களை தெரிவிக்க மறுப்பதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்டனை நிறைவேற்றுவதை மேலும் இழுத்தடிக்க, அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என, சிறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவன், 'மைனர்' என்பதால், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டான். மற்றொரு குற்றவாளியான ராம் சிங், டில்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள, வினய் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, முகேஷ் குமார், 32, பவன் குப்தா, 26, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

'வாரன்ட்'

மறு சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நான்கு பேருக்கும், இம்மாதம், 22ம் தேதி, துாக்கு தண்டனை விதிக்க, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பின், நான்கு பேரும், ஒருவர் பின் ஒருவராக, கருணை மனு, துாக்கு தண்டனை, 'வாரன்ட்'டை எதிர்த்து மனு என, ஒவ்வொன்றாக தாக்கல் செய்து, தண்டனை நிறைவேற்றப்படுவதை தடுக்க, இழுத்தடித்து வந்தனர். இதனால், இவர்களுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.தற்போது, எல்லா பிரச்னையும் முடிந்து விட்ட நிலையில், பிப்., 1ல், நான்கு பேருக்கும் துாக்கு தண்டனை விதிக்க, மீண்டும் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்

தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள், திகார் சிறையில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், சிறை அதிகாரிகள் கூறியதாவது:

துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன், குற்றவாளிகள் நான்கு பேரது கடைசி ஆசை, கடைசியாக அவர்கள் சந்திக்க விரும்பும் நபர், அவர்களது சொத்துக்களை யாருக்காவது கொடுக்க விரும்பினால், அவர்களை பற்றிய தகவல் ஆகிய விபரங்கள், சிறை அதிகாரிகள் தரப்பில் கேட்கப்படுவது வழக்கம். அதேபோல், நிர்பயா வழக்கின் குற்றவாளிகளிடமும் கேட்கப்பட்டது. ஆனால், அவர்கள் இது குறித்து எந்த விபரத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

தண்டனையை மேலும் சில நாட்களுக்கு இழுத்தடிக்க, அவர்கள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


நீதிபதி மாற்றம்

இதற்கிடையே, நிர்பயா குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனைக்கான வாரன்ட் பிறப்பித்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் அரோரா, கூடுதல் பதிவாளர் ஜெனரலாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவர், இந்த பணியில் ஒரு ஆண்டு நீடிப்பார்.

கங்கணாவுக்கு ஆதரவு

பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் சமீபத்தில் கூறுகையில், 'ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளிகளை சோனியா மன்னித்தது போல், நிர்பயா வழக்கின் குற்றவாளிகளையும், நிர்பயாவின் தாய் மன்னிக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.

இதற்கு, பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் கூறுகையில், ''நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில், இந்திரா ஜெய்சிங்கையும் நான்கு நாட்கள் அடைக்க வேண்டும். இவரைப் போன்றவர்களால் தான், குற்றவாளிகள் உருவாகின்றனர்,'' என்றார். கங்கணாவின் இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறியதாவது: கங்கணா கூறியது முற்றிலும் சரி; அவரது கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அதேபோல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை, பொது இடத்தில் துாக்கிலிட வேண்டும் என கங்கணா பேசியுள்ளதையும் வரவேற்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

முடிவற்ற போராட்டம்?

துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், தண்டனையை நிறைவேற்றாமல் இருக்க, சட்ட ரீதியாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு, கடும் விமர்சனம் எழுந்து உள்ளது. இந்நிலையில், 'துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு, தண்டனையை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில், நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், ''ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு முடிவில்லாமல் போராட முடியாது,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.03.2024