நிவாரணத் தொகை 1,000 ரூபாய் வீடு தேடி வரும்!’ - வழிகாட்டும் திருவண்ணாமலை கலெக்டர்
கொரோனா விழிப்புணர்வில் கலெக்டர் கந்தசாமி
கொரோனா நிவாரணத் தொகை, சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே நேரில் சென்று வழங்கப்படும் எனத் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நிலையை உணர்ந்து, தமிழக அரசு அனைத்துக் குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் நிவாரணமும், அதோடு ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய பொருள்களை விலையின்றி வழங்கப்படும் என அறிவித்தது. இந்தநிலையில், நிவாரணத்தொகை 1,000 ரூபாயைக் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்படும் எனத் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி அறிவித்திருக்கிறார்.
கலெக்டர் கந்தசாமி
இதுகுறித்து அவர் கூறுகையில், ``கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அரசு வழங்கும் நிவாரணத்தைப் பெறுவதற்காகக் கிராமத்தில் உள்ள மக்கள் ஒன்று கூடிவிடுவார்கள். அந்தச் சமயத்தில் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாட்டைச் செய்யவுள்ளோம். ஒவ்வொரு நியாய விலைக் கடைகளின் கீழ் 300 முதல் 1,000 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே இருப்பார்கள்.
அதனால், அந்தந்த நியாயவிலைக்கடை பணியாளர்களை வைத்து மிக விரைவாக நிவாரணத் தொகையைக் கொடுத்துவிடலாம்.
கலெக்டர் கந்தசாமி
அதேபோன்று, ரேஷன் பொருள்களை வாங்குவதற்குத் தேதியிட்ட டோக்கன் கொடுக்கப்படும். அவர்கள் அப்போது வந்து வாங்கிக்கொள்ள வேண்டும். இதனால், மக்கள் ஒன்று கூட மாட்டார்கள். பொதுமக்கள் வெளியே வருவதும் தடுக்க முடியும்’’ என்றார்.
No comments:
Post a Comment