Wednesday, March 4, 2020

அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமானம்

Added : மார் 03, 2020 23:44

சென்னை : அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், கள்ளக்குறிச்சி மற்றும் அரியலுாரில், புதிய மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டும் பணி தாமதமாகி உள்ளது.

திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைப்பதற்கு, மத்திய அரசு, 2019 இறுதியில், அனுமதி வழங்கியது. மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுமான பணிகள், தலா, 325 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், மத்திய அரசின் பங்களிப்பாக, ஒவ்வொரு பணிக்கும், 195 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

மாநில அரசு, ஒவ்வொரு பணிக்கும் முதற்கட்டமாக, 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, இந்த மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுமானத்திற்கான, அடிக்கல் நாட்டு விழா துவங்கியுள்ளது. இதேபோல, வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய, கள்ளக்குறிச்சி மற்றும் அரியலுார் மாவட்டங்களுக்கும், அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு, ஜன., மாத இறுதியில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் நிதி பங்களிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு, நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை. நிலம் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகளை துவங்க முடியாமல், பொதுப்பணித் துறையினர் தவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024