Sunday, March 1, 2020

எந்த கடையிலும் ரேஷன்: ஏப்ரல் முதல் முழு அமல்

Updated : மார் 01, 2020 07:19 | Added : பிப் 29, 2020 23:04 

எந்தக் கடையிலும், ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் திட்டம், ஏப்ரல் முதல், அனைத்து மாவட்டங்களிலும் அமலாக உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில், உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவை, ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு அருகில் உள்ள கடையில் மட்டும் வழங்கப்படும். முகவரி மாறி சென்றால், அந்த விபரத்தை, உணவு வழங்கல் துறை அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும். கார்டில், முகவரி மாற்றி தரப்படும்.

முன்னோட்டம்

நாடு முழுவதும், ஜூன் மாதம், எந்த மாநிலத்தின் ரேஷன் கடைகளிலும், ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்கி கொள்ளும் திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.இதற்கு முன்னோட்டமாக, தமிழகத்திற்குள், எந்த ரேஷன் கடையிலும், பொருட்கள் வாங்கிக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் சோதனை ரீதியாக, துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், இம்மாத துவக்கத்தில் அமல்படுத்தப்பட்டது.இதை, அனைத்து மாவட்டங்களிலும், ஏப்ரல் முதல் விரிவு படுத்த, உணவுத்துறை முடிவு செய்துஉள்ளது.

இதற்கிடையில், ரேஷன் கடைகளில், கோதுமை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதலாக ஒதுக்கீடு செய்யுமாறு, தமிழக உணவுத்துறைக்கு, மாநில உணவு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, வீட்டில் நான்கு உறுப்பினர்கள் இருந்தால், மாதம், 20 கிலோவும்; அதற்கு மேல் உள்ள ஒவ்வோர் உறுப்பினருக்கும், கூடுதலாக, 5 கிலோவும் அரிசி வழங்கப்படுகிறது.

சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கார்டுதாரர்கள், விருப்பத்தின்படி, தங்களுக்கு ஒதுக்கிய அரிசியில், 10 கிலோ வரையும்; மற்ற பகுதிகளில், 5 கிலோ வரையும் இலவசமாக கோதுமை வாங்கலாம். மத்திய அரசு, மாதம்தோறும் தமிழகத்திற்கு, 13 ஆயிரத்து, 500 டன் கோதுமை ஒதுக்கீடு செய்கிறது. தமிழகத்தில், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள், அரிசிக்கு மாற்றாக, கோதுமையை சாப்பிடுகின்றனர். இதனால், பல வீடுகளில், இரவில் சப்பாத்தி பயன்பாடு அதிகம் உள்ளது.

மக்கள் ஆர்வம்

வெளிச்சந்தையில், கிலோ கோதுமை விலை, 30 ரூபாய்க்கு மேல் உள்ளது. இதனால், ஏழை மக்கள், ரேஷனில் கோதுமையை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.பயனாளிகளுக்கு, ரேஷன் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை, சென்னை, சேப்பாக்கத்தில், மாநில ஆணையம் கண்காணிக்கிறது.இந்நிலையில், ரேஷனில் தலா, ஒரு கார்டுக்கு, 5 கிலோ கூட கோதுமை வழங்குவதில்லை என, உணவு ஆணையத்திற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, ரேஷன் கடைகளுக்கு, தற்போது வழங்குவதை விட, கூடுதல் கோதுமையை ஒதுக்கீடு செய்யுமாறு, உணவு துறைக்கு, மாநில உணவு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024