வீட்டில் தனிமைப்படுத்தப்படும் கரோனா நோயாளிகளுக்காக அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டம் : முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
amma-covid-project
கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.2,500 மதிப்புள்ள ‘அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு சேவை’ திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
15.08.2020
சுகாதாரத் துறை சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.24 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுநீரக சிறப்பு சிகிச்சை மையம், கரோனா சிறப்புசிகிச்சை ஒப்புயர்வு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார். இந்த ஒப்புயர்வு மையத்தில் உள்ள 350 படுக்கைகளில் 35 படுக்கைகள் அதிதீவிர சிகிச்சைக்காகவும், 165 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதிகளுடனும், 15 தனி அறை வசதிகளும், 3 அதிநவீன சிகிச்சை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ.4.68 கோடி கட்டிடங்கள்
மேலும், ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பில் அரியலூர், கடலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.80 கோடியே 98 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள கல்வியியல் கட்டிடம், நிர்வாகக் கட்டிடம்,நூலகம், ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
மருத்துவத் துறையில் காலியாக உள்ள 363 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
14 நாட்களுக்கான தொகுப்பு
இதுதவிர, கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டவர்கள் மற்றும் கரோனா அறிகுறி உள்ளவர்கள் பயன்பெறும் வகையில், ‘அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு சேவை’ திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார். அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ், 2,500 ரூபாயில் 14 நாட்களுக்கான தொகுப்பாக, ஒரு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவி, ஒரு டிஜிட்டல் தெர்மா மீட்டர், 14 முகக்கவசங்கள், ஒரு கைகழுவும் சோப்பு, அதிமதுரம் மற்றும் கபசுரக் குடிநீர் பவுடர் பாக்கெட்கள், 60 அமுக்ரா சூரண மாத்திரைகள், 14 வைட்டமின்-சி மாத்திரைகள், 14 ஜிங்க் மாத்திரைகள், 14 மல்டி விட்டமின் மாத்திரைகள், கோவிட் கையேடு ஆகியவை அடங்கிய பெட்டகம் வழங்கப்படும். பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒருங்கிணைப்பு அலுவலருக்கு பெட்டகத்தை வழங்கி, திட்டத்தை முதல்வர் பழனிசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வருவதுடன், தீவிர நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற ஏதுவாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment