கர்நாடகாவில் 'இ - பாஸ்' ரத்து: தமிழக எல்லை மக்கள் நிம்மதி
Added : ஆக 25, 2020 23:30
ஓசூர்; கர்நாடக மாநிலத்தில், 'இ - பாஸ்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், தனிமையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலிருந்து எந்த தடையுமின்றி வாகனங்கள் செல்ல துவங்கின.
கர்நாடக மாநிலத்துக்குள் வாகனங்கள் நுழைய, அதிகாரப்பூர்வ சேவா சிந்து இ - பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. அங்கு, கடந்த ஜூலை, 14 இரவு முதல், 22 அதிகாலை வரை, தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நடைமுறையில் இருந்தது.
சோதனைச்சாவடி
அதன்பின்னும், 'கொரோனா தாக்கம் குறையவில்லை' எனக்கூறி, ஊரடங்கை முழுதுமாக, அம்மாநில முதல்வர் எடியூரப்பா, கடந்த மாதம் ரத்து செய்தார். ஆனால், இ - பாஸ் நடைமுறை மட்டும், தொடர்ந்து அமலில் இருந்தது.இந்நிலையில், 'மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையே, இ - பாஸ் தேவையில்லை' என, மத்திய அரசு அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணி முதல், கர்நாடக மாநில அரசு, இ - பாஸ் முறையை ரத்து செய்தது.
இதனால், அனைத்து வாகனங்களும் எந்த தடையுமின்றி, அம்மாநிலத்துக்குள் சென்று வர துவங்கின. அம்மாநில எல்லையில், கையில் தனிமைப்படுத்தும் முத்திரை குத்துவது மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டு உள்ளது.கர்நாடகா மாநில எல்லையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், தங்களது வழக்கமான பணிகளுக்கு திரும்பியதால், நேற்று அங்குள்ள சோதனைச்சாவடிகள் வெறிச்சோடின.
அதே நேரம், தமிழகத்தில், இ - பாஸ் அமலில் உள்ளதால், தமிழக எல்லையான, ஓசூர் - ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், இ - பாஸ் வாகனங்கள் மட்டும் சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றன.கர்நாடக மாநிலத்துக்கு எளிதாக சென்று வரலாம் என்பதால், ஐந்து மாதங்களாக வேலைவாய்ப்பு, மருத்துவம் என, பல்வேறு தேவைகளுக்கு செல்ல சிரமப்பட்ட, ஓசூர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
இதேபோல், நீலகிரி மாவட்டம், முதுமலை அருகே உள்ள, தமிழக - கர்நாடக எல்லையான கக்கனல்லா வழியாக, தமிழகம், கேரள வாகனங்கள் அதிகளவில் செல்ல துவங்கி உள்ளன.அனுமதிதமிழகத்தில் இ - பாஸ் நடைமுறை தொடர்வதால், கர்நாடகாவில் இருந்து வருபவர்கள், இ -- பாஸ் இருந்தால் மட்டும் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.அரசு அதிகாரிகள் கூறு கையில், 'தமிழகத்தில் இ - -பாஸ் முறை ரத்து செய்யப்படவில்லை. அங்கிருந்து வாகனங்களில் வருபவர்கள், இ - -பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே நீலகிரிக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும்' என்றனர்.
No comments:
Post a Comment