அரசு பஸ்களை வாடகைக்கு எடுக்க ஆளில்லை
Added : ஆக 25, 2020 23:55 |
விருதுநகர்; கொரோனா ஊரடங்கால் முடக்கப்பட்ட அரசு பஸ்களை வாடகைக்கு விட தயாராக இருந்தும் யாரும் முன் வராததால் நிதியின்றி போக்குவரத்துக்கழகங்கள் திணறி வருகின்றன.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள், 21 ஆயிரம் பஸ்களுடன் சென்னை, மதுரை, கோவை, விழுப்புரம், சேலம், கும்பகோணம், நெல்லை மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் என எட்டு மண்டலங்களை கொண்டது அரசு போக்குவரத்து கழகம். மாதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சம்பளம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஏற்கனவே கடும் நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் தடுமாறி வருகிறது.
ஊரடங்கால் போக்குவரத்து முடங்கி மேலும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியத்தை அரசு வழங்குகிறது. ஆனால் 2019 மே முதல் ஓய்வு பெற்றோருக்கு பணப் பலன்கள் வழங்கவில்லை. சம்பளம் தவிர இதர செலவுகளை போக்குவரத்து கழக மண்டல நிர்வாகங்கள் ஈடுகட்ட முடிவு செய்தது.
இதன்படி முதற்கட்டமாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் அரசு விரைவு பஸ்களை வாடகைக்கு விட அறிவிப்பு வெளியானது.ஊரடங்கால் தொழில்கள் முடங்கிய நிலையில் பஸ்களை வாடகைக்கு எடுக்க யாரும் முன் வரவில்லை. சமூக இடைவெளியை பின்பற்றி பஸ்களை இயக்கினால் கட்டுபடியாகாது என பலரும் ஒதுங்கி கொண்டனர்.
இதனால் போக்குவரத்துக்கழகங்கள் செய்வதறியாது திகைத்துள்ளன.அரசு பஸ்களை விரைவில் இயக்கி போக்குவரத்துக்கழக வருவாய்க்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment