23 அரியரில் பாஸ்: முதல்வருக்கும், கொரோனாவுக்கும் திருச்சி மாணவர் நன்றி
Updated : ஆக 29, 2020 04:16 | Added : ஆக 29, 2020 04:13 |
திருச்சி;முதல்-அமைச்சரின் உத்தரவால் திருச்சியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் 23 அரியர் பாடங்களிலும் பாஸ் ஆகி உள்ளார். அதனால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேர்வு நேரத்தில் பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் தடைபட்டது. பள்ளி மாணவர்களின் நலன்கருதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதாமலேயே அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
அடுத்ததாக கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தவிர, இதர ஆண்டுகளில் பாடங்களில் அரியர்ஸ் வைத்திருந்த அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இது கல்லூரிகளில் சரிவர படிப்பு வராமல் இருந்த மாணவ-மாணவிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம் அடித்தாற்போல மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கினர்.
திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் சஞ்சய்நேரு , 23 பாடங்கள் அரியர் வைத்திருந்தார். தமிழக அரசு அரியர் வைத்துள்ள அனைத்து பாடங்களும் 'பாஸ்' என அறிவித்ததும் மகிழ்ச்சியில் பெருமையுடன் கூறினார்.
இது குறித்து மாணவர் சஞ்சய்நேரு கூறியது:நான் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 427 மதிப்பெண்களும், பிளஸ்-2 வில் 905 மதிப்பெண்களும் எடுத்திருந்தேன். என்ஜினீயரிங் படிக்க எனக்கு ஆர்வம் இன்றி இருந்தேன். ஆனால், கட்டாயத்தின்பேரில் திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு எலக்ட்ரானிக் அன்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் (இ.சி.இ.) பாடப்பிரிவை எடுத்து படித்தேன். பள்ளியில் மனப்பாடமாக படித்ததுபோல கல்லூரியில் படிக்க முடியவில்லை. கல்லூரியில் இருந்து இடையில் நின்று விடலாமா? என யோசித்து கொண்டிருந்தேன்.
முதலாம் ஆண்டில் முதல் செமஸ்டரில் ஒரு அரியர் பேப்பரும், 2-வது செமஸ்டரில் 5 அரியர் பேப்பரும் இருந்தது. 2-ம் ஆண்டில் 3-வது செமஸ்டரில்-5, 4-வது செமஸ்டரில்-6, 3-ம் ஆண்டில் 5-வது செமஸ்டரில்-6 என மொத்தம் 23 அரியர் இருந்தது. மேலும் அத்தனை அரியர் பாடங்களை மீண்டும் எழுதும் நோக்கில் கட்டணமும் செலுத்தினேன்.
இந்த நிலையில்தான் முதல்வர் பழனிசாமி, கல்லூரி மாணவ-மாணவிகளின் அரியர் பாடங்கள் அனைத்தும் பாஸ் என அறிவித்தார். இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போது நான் எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளேன். இதற்கு காரணமான கொரோனாவுக்கும் நன்றி. இனி இறுதியாண்டில் எப்படியாவது எஞ்சிய செமஸ்டர் பாடங்களை நன்றாக படித்து தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்வேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment