அடுத்த தளர்வில் உள்ளூர் ரயில்கள் இயக்கம் உண்டு! பள்ளிகள் தற்போதைக்கு இல்லை
Updated : ஆக 26, 2020 01:12
புதுடில்லி: பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வின்போது, மெட்ரோ ரயில் சேவை மற்றும் உள்ளூர் புறநகர் ரயில் சேவைகளை இயக்க அனுமதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கல்லுாரி, பள்ளிகள் தற்போதைக்கு திறக்கப்படாது; அதே நேரத்தில், தனி கட்டட தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த சில நாட்களில் வெளியாக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, நாடு முழுதும், மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மே, 31 வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து, ஜூன், 1ம் தேதி முதல், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கட்டுப்பாடு:
இதுவரை மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு, வரும், 31ம் தேதியுடன் முடிகிறது.அதையடுத்து, நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள், செப்., 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. ஏற்கனவே பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நான்காம் கட்ட தளர்வின்போது, மெட்ரோ ரயில் சேவை மற்றும் உள்ளூர் புறநகர் ரயில் சேவைகளை அனுமதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. நாடு முழுதும், 31 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 58 ஆயிரத்துக்கும் அதிக மானோர் உயிரிழந்து உள்ளனர். மஹாராஷ்டிரா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில், வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்நிலையில், மாநிலங்களில் உள்ள நிலைமைக்கு ஏற்ப, ஊரடங்கு தளர்வு குறித்து, மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், நாடு முழுதும், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகளை துவக்க அனுமதி அளிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல், தனி கட்டடத்தில் இயங்கும் தியேட்டர்கள் அனுமதிக்கப்படலாம் என, தெரிகிறது. மால்கள் மற்றும் பல திரைகள் கொண்ட தியேட்டர்களுக்கு அனுமதி கிடையாது. தனி கட்டடத்தில் இயங்கும் தியேட்டர்களிலும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படலாம் என, தெரிகிறது.
ஆனால், அவ்வாறு திறப்பது, பொருளாதார ரீதியில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு சாதகமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. மிகப் பெரிய அரங்கங்களும், பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்படலாம் என, தெரிகிறது. தற்போதைய நிலையில், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், அதிகபட்சம், 50 பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'வந்தே பாரத்'
பள்ளி, கல்லுாரிகள் தற்போதைக்கு திறக்க அனுமதி வழங்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக, பெற்றோரின் கருத்துக்களை பல மாநிலங்கள் கேட்டு வருகின்றன. அதே நேரத்தில், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையங்கள், ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய நிர்வாகவியல் மையங்கள் மற்றும் பல்கலைகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
வழிபாட்டு தலங்கள், மத நிகழ்ச்சிகள், அரசியல், சமூக நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான தடை தொடரும். வெளிநாட்டு விமான சேவைக்கான தடையும் தொடரும். அதே நேரத்தில், 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட சில மார்க்கங்களில் மட்டும், சர்வதேச விமான சேவை இருக்கும். பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் போன்றவற்றுக்கான தடை தொடரும்.
அதே நேரத்தில், 'பார்'களில், மதுபானங்களை வாங்கி செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படலாம் என, தெரிகிறது. பல்வேறு அமைச்சகங்களுடனான ஆலோசனைக்குப் பின், அடுத்த சில நாட்களில், முறைப்படியான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'இ - பாஸ்' தேவையில்லை'
மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து மற்றும் மக்கள் பயணத்துக்கு எந்தத் தடையும் இல்லை' என, மூன்றாம் கட்ட தளர்வின்போது அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களில் இது கடைப்பிடிக்கப்படவில்லை. அதையடுத்து, 'மாவட்டங்கள் இடையே மற்றும் மாநிலங்கள் இடையேயான போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது; 'இ - பாஸ்' முறையை கைவிட வேண்டும்' என, மத்திய அரசு சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தது.
இயக்க தயார்
தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் சண்முகராஜ், விழுப்புரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா தொற்று, தமிழகத்தில் அதிகமாக உள்ளதால், தற்போது ரயில்களை இயக்க முடியாத சூழல் உள்ளது. தமிழக அரசு வலியுறுத்தினால், ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே தயாராக உள்ளது. கேரளாவில், மாநில அரசு கேட்டுக் கொண்டதால், அங்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment