26.08.2020
சென்னை: இணையவழி அனுமதிச் சீட்டுடன் பயணிப்போரிடம் நெடுஞ்சாலைகளில் சோதனைகள் நடத்தப்படுவது முற்றிலும் குறைந்துள்ளது. இதனால், எந்தத் தடையுமின்றி பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் பயணித்து வருகின்றனா்.
மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களில் எந்தத் தடையும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, புதுச்சேரி, கா்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இணைய வழி அனுமதிச் சீட்டு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீடிப்பு: இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் அந்த முறை தொடா்ந்து நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் எழுந்த சிக்கல்கள் களையப்பட்டு கடந்த 17-ஆம் தேதி முதல் ஒரே நாளில் பரிசீலிக்கப்பட்டு, அனைத்துத் தரப்பினருக்கும் விரைவாக வழங்கப்பட்டு வருகிறது.
சுமாா் 20 லட்சம் போ: பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை இணையவழி அனுமதிச் சீட்டுகளை 20 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்து பெற்றுள்ளனா். கடந்த 17-ஆம் தேதி முதல் சென்னை நகருக்கு மட்டும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோா் அனுமதி பெற்று வந்துள்ளனா்.
மேலும், சென்னையில் இருந்து தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்து வெளி மாவட்டங்களுக்குச் செல்கின்றனா். பயணத்தின்போது, நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகளில் கடந்த சில நாள்களாக பயணிகளிடையே எந்த சோதனையும் மேற்கொள்ளப்படுவதில்லை.
இதுகுறித்து, தமிழக அரசுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது எந்தத் தடையும் இல்லாமல் மக்கள் செல்கின்றனா். அவா்கள் தங்களது பயணத்தை முடித்த பிறகு, பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பிலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகங்கள் தரப்பிலோ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
பயணம் முடிந்ததும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருக்கிா என விசாரிக்கப்பட்டு, சில நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறாா்கள். இணையவழி அனுமதிச் சீட்டு பெற்ற அடுத்த 12 மணி நேரத்துக்குள் இதற்கான அழைப்புகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு செல்லிடப்பேசிக்கு வருகின்றன.
அதே சமயத்தில், கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலைகளிலும், இதர மாநில நெடுஞ்சாலைகளிலும் இணையவழி அனுமதிச் சீட்டுக்காக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகள் இப்போது மேற்கொள்ளப்படுவதில்லை. கடந்த சில நாள்களாக பயணிகள் தங்களது பயணத்தை சிரமமின்றி எளிதாக மேற்கொண்டு வருகின்றனா்' என்று தெரிவித்தனா்.
Dailyhunt
No comments:
Post a Comment