மன்னிப்பு கேட்க பூஷண் மீண்டும் மறுப்பு: தண்டனை விவரம் ஒத்திவைப்பு
26.08.2020
புது தில்லி: தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாகக் கூறிவிட்ட நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை தொடர்பான விவரங்களை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நீதித் துறையை விமர்சித்து சமூக ஆர்வலரும், வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் 2 பதிவுகள் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவுகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இது தொடர்பாக, பிரசாந்த் பூஷண் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதி உத்தரவிட்டது. அவர் மன்னிப்புக் கேட்க மறுத்ததை அடுத்து, இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரை மணி நேரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மீண்டும் விசாரணை தொடங்கியபோது, தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், நீங்கள் ஏற்படுத்திய காயத்தை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும். மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் போன்றோர் நீதித் துறைக்கு எதிராக பதிவிடும் சிறிய கருத்தும் பெரிதாகப் பார்க்கப்படும். நீதித் துறையைச் சேர்ந்தோர் கூறும் கருத்துகள் மக்களிடையே நீதித் துறை மீதான நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்யும். மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அது என்ன அவ்வளவு மோசமான வார்த்தையா? என்று கூறினர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா பேசுகையில், எத்தனை நாளுக்குத்தான் நீதிபதிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது. தங்களை தற்காத்துக் கொள்ள நீதிபதிகளிடம் எந்த ஆயுதமும் இல்லை. நீதிபதிகளையும், நீதித்துறையின் மாண்புகளையும் காக்க வழக்குரைஞர்கள்தான் உதவ வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை தொடர்பான விவரங்களை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக மன்னிப்புக் கேட்க முடியாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் திங்கள்கிழமை தாக்கல் செய்த பதில் மனுவில், நீதித் துறையில் தவறுகள் நடைபெறும்போது அதனை சுட்டிக் காட்டுவது எனது கடமை. அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவித்தேனே தவிர, உச்சநீதிமன்றத்துக்கு எதிராகவோ, குறிப்பிட்ட தலைமை நீதிபதிக்கு எதிராகவோ கருத்து தெரிவிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கும் பணியில் இருந்து தடம் மாறுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதற்காகவே ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்திருந்தேன்.
சுட்டுரையில் நான் தெரிவித்த கருத்துகளில் உறுதியாக இருக்கிறேன். குடிமகனாகவும், வழக்குரைஞராகவும் பொது வெளியில் கருத்துகளைத் தெரிவிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
எனவே எனது கருத்துக்கு நிபந்தனையுடன் அல்லது நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பது என்பது எனது மனசாட்சிக்கு எதிரானதும், போலியானதும் ஆகிவிடும்.
மக்களின் அடிப்படை உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றமே விளங்குகிறது.
குழப்பம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் சட்டத்தின் ஆட்சியையும், அரசியலமைப்பு சட்டத்தையும் உச்சநீதிமன்றமே காக்கும் என மக்கள் நம்புகின்றனர். இந்த நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மதிப்பு வைத்துள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. மன்னிப்பு கேட்கும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டும், அதனை பிரசாந்த் பூஷண் நிராகரித்துவிட்டார். எனவே, அவருக்கு 6 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது.
Dailyhunt
No comments:
Post a Comment