ஆப்பக்கூடலில் நிலுவைத் தொகை வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
20.08.2020
பவானி: பவானி அடுத்த ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையில் 6 மாத கால கரும்பு நிலுவைத் தொகை ரூ.70 கோடியை உடனடியாக வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலையின் பிரதான நுழைவாயில் முன்பாக நடைபோன்ற இப்போராட்டத்துக்கு சக்தி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் டி.பி.கோபிநாத் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வி.பி.கார்த்திகேயன், ஆர்.கணேசமூர்த்தி, பி.வெங்கடசாமி, கே.எம்.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கையை விளக்கி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் பேசினர்.
சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் அரவை செய்த கரும்புக்கு 6 மாத காலமாக பணம் வழங்கவில்லை. ஆலைக்கு பதிவு செய்து கரும்பு அனுப்பும் விவசாயிகளுக்கு கரும்பு கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் 14 நாள்களில் பணம் தர வேண்டும். ஆனால், விவசாயிகளுக்கு பணம் தராமல் இதுவரையில் ரூ.70 கோடி நிலுவைத் தொகை உள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும்.
வங்கிகளில் பெற்ற கரும்பு பயிர்க்கடன் தொகையை விவசாயிகளிடம் 5 ஆண்டுகளாக ஆலை நிர்வாகம் பிடித்தம் செய்து கொண்டு, வங்கிக்கு பணத்தை செலுத்தாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் நகைக்கடன் கூட வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே, வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.
9.5 பிழி திறன் உள்ள கரும்புக்கு டன் ரூ.4,500 என விலை வழங்க வேண்டும். கரும்புக்கு மாநில அரசு ஊக்கத் தொகை ரூ.400-ஆக உயர்த்தி வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
Dailyhunt
No comments:
Post a Comment