Friday, August 28, 2020

சான்றிதழ்களை மறுபதிவு செய்யச் சொல்வது எதற்கு? டாக்டர்கள் கொந்தளிப்பு


சான்றிதழ்களை மறுபதிவு செய்யச் சொல்வது எதற்கு? டாக்டர்கள் கொந்தளிப்பு

Updated : ஆக 28, 2020 01:32 | Added : ஆக 28, 2020 01:16 


தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபாரை சேர்ந்த டாக்டர்கள், ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், மீண்டும் வரும், 31ம் தேதிக்குள் சான்றிதழ்களை மறுபதிவு செய்ய வேண்டும் என, தமிழக மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்காக, மீண்டும் கட்டணம் வசூலிக்கும் அடாவடியில் கவுன்சில் ஈடுபட்டுள்ளதால், மாநிலம் முழுதும் டாக்டர்கள் கொந்தளித்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் மருத்துவ படிப்பை முடிந்தோர், முறைப்படி தமிழ்நாடு மருந்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே, மருத்துவ சேவை செய்ய முடியும். இந்த மருத்துவ கவுன்சில், 1914 முதல் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 1.25 லட்சம் பேர், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மருத்துவ சேவையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவ சேவையை அங்கீகரிப்பதோடு, விதிகளை மீறி செயல்படும் டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், மருத்துவ கவுன்சிலிடம் உள்ளது.அதிரடி சுற்றறிக்கை கடந்த மே மாதம், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் இந்தாண்டு ஜன., 5 வரை பதிவு செய்து, மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் அனைவரும், தங்கள் எம்.பி.பி.எஸ்., சான்றிதழ், ஆதார் எண், மேற்படிப்புச் சான்றிதழ்கள், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை, ஆன்லைனில் சமர்ப்பித்து, மின்னணு சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். மின்னணு சான்றிதழ், மின்னணு அடையாள அட்டை, மின்னணு பெயர் பலகை பெற, 500 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.

மின்னணு சான்றிதழ் வழங்கும் நடைமுறை, படிப்படியாக மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக, பதிவு எண், 15 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை உள்ளவர்கள், ஆகஸ்ட் 31, 2020க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது சரிதானா?

இந்தச் சுற்றறிக்கை, டாக்டர்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, மூத்த டாக்டர்கள் கூறியதாவது: மறு பதிவு என்பது அவசியம் இல்லாதது. கவுன்சில் குறிப்பிட்டுள்ள பதிவு எண்களைப் பெற்றவர்கள், பெரும்பாலும் மூத்த மருத்துவர்கள். அரசுத் துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்றிருப்பர். இவர்கள், படித்து முடித்த காலத்திலேயே, நிரந்தரப் பதிவு எண் பெற்றவர்கள். அவர்களை மீண்டும் பதிவு செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம்?

மருத்துவ கவுன்சிலில் உள்ள டாக்டர்களின் பதிவேட்டை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம் என்றால் தவறில்லை. இதற்கு, டாக்டர்கள் சமீபத்தில் உயர்கல்வி பெற்றிருந்தால் அதற்கான சான்றிதழ், இதர அங்கீகாரங்களுக்கான சான்றிதழ்களின் விவரங்கள்; தொடர்ந்து மருத்துவ சேவையில் உள்ளனரா என்பதை தெரிவித்து, ஒரு மின்னஞ்சல் கொடுத்தாலே போதும்; அதை வைத்தே, அவர்களுடைய பதிவேட்டை மேம்படுத்த முடியும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

அதோடு, தற்போதைய மறுபதிவு நடைமுறையும் மிகவும் சிக்கலாக இருக்கிறது. சான்றிதழ்களை எல்லாவற்றையும், 'ஸ்கேன்' செய்து, அதற்கு உரிய இடத்தில், 'அப்லோடு' செய்ய வேண்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தச் சான்றிதழ்கள் ஏற்கெனவே, மருத்துவக் கவுன்சிலிடம் உள்ளது என்பதுதான். எதற்கு அவற்றை மறுமுறை அப்லோடு செய்ய வேண்டும்? பதிவு செய்த டாக்டர்கள் உயிரோடு உள்ளனரா, இல்லையா என்பதைத் தவிர, இந்தப் பதிவு நடைமுறையால் வேறொரு பயனும் இல்லை.

போலி டாக்டர்கள், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப் போவதில்லை; செய்யவும் முடியாது. மேலும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத பட்ட மேற்படிப்பைப் படித்துள்ளனரா என்று கண்டுபிடிக்க, இது சரியான வழி அல்ல. பதிவு செய்யும் போது கட்டணம் செலுத்தச் சொல்வதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், மறுபதிவுக்கு கட்டணம் கோரப்படுவது, அடாவடித்தனம் போல உள்ளது.

ஐந்தாண்டுதான்!

மருத்துவ கவுன்சிலின் கோரிக்கையை ஏற்று, ஒருசில மூத்த டாக்டர்கள், தங்கள் விவரங்களைக் கொடுத்து, மறுமுறை பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு மின்னணு சான்றிதழ் கிடைத்தபோது ஆச்சரியப்பட்டனர். நிரந்தர பதிவு எண்ணை ஏற்கெனவே பெற்ற டாக்டர்களுக்கு, தற்போது வழங்கப்படும் மின்னணு சான்றிதழ், ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே, மருத்துவ சேவை செய்ய அனுமதி அளிக்கிறது. இத்தகைய நடவடிக்கையின் நோக்கம் என்ன?

'டாக்டர்களை ஏதோ ஒருவகையில் கட்டுப்படுத்த வேண்டும்; தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை அண்டியிருக்க வைக்க வேண்டும்' என்பதுதான் நோக்கமா என்று தெரியவில்லை. மக்களுக்கு சேவை என்ற நோக்குடன், பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் மூத்த டாக்டர்களுக்கு, மருத்துவக் கவுன்சிலின் இந்த நடவடிக்கை, அவமானம் அளிக்கும் வகையில் உள்ளது. இதுபோன்ற செயலை மருத்துவ கவுன்சில், மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'அப்டேட் தான்!'

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர், டாக்டர் செந்தில் கூறியதாவது: தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில், 1.25 லட்சம் டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். தற்போது, டாக்டர்கள் தங்களின் தற்போதைய முகவரி; சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை, கிளினிக் முகவரி; புதிதாக படித்த பட்ட மேற்படிப்பு போன்ற விபரங்களை சேர்த்து, 'அப்டேட்' செய்து கொள்ளலாம்.

இதன் வாயிலாக, டாக்டர்களும், பொதுமக்களும் பயன்பெறுவர். இது போன்று, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவ கவுன்சிலில், டாக்டர்கள் புதுப்பித்தல் பணி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர்-

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024