எஸ்.பி.பி.,க்கு சர்வதேச நிபுணர்கள் சிகிச்சை:உடல்நிலையில் முன்னேற்றம்
Updated : ஆக 16, 2020 06:40 | Added : ஆக 16, 2020 06:23
'பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச முன்னணி மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என, எம்.ஜி.எம்., மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 74, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த, 5ம் தேதி, சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.'அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்றோ, நாளையோ, வேறு ஒரு பிரத்யேக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படுவார்' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.அவருக்கான சிகிச்சையை கவனிக்க, பொதுமருத்துவம், இருதய நோய், அவசர சிகிச்சை, நுரையீரல், சிறுநீரக துறை, தொற்றுநோயியல், 'இன்டர்னல் மெடிசின்' நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்தில் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும், அமெரிக்காவின், மினியாபொலிஸ் பகுதியிலுள்ள, 'மாயோ கிளினிக்' மற்றும் யுனிவர்சிட்டி ஆப் டெக்சாஸ் மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள்; மும்பை, டில்லியைச் சேர்ந்த தலா இரு மருத்துவ நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவினர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, எம்.ஜி.எம்., மருத்துவக் குழுவினருடன் தொடர்பில் உள்ளனர்.தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையை, குறிப்பாக இருதயத் துடிப்பு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் உபணரங்களின் இயக்கத்தை, இந்த நிபுணர்கள் நேரடியாக பார்வையிட்டு, தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இதன்படி, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை சிறப்பாக இருப்பதாகவும், அவரது உடல், சிகிச்சையை ஏற்று, முன்னேற்றத்துக்கான முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும், அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.அவர் இதற்கு முன், தன் உடல் பருமனைக் குறைக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளார். தவிர, தைராய்டு மற்றும் லேசான ஆஸ்துமா பாதிப்பும் இவருக்கு உண்டு; வேறு எந்த வியாதியும் இல்லை.டாக்டர்கள் கூறுகையில், 'ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு நன்கு உயர்ந்துள்ளது. அனைத்து வித சிகிச்சைக்கும், உடல் ஒத்துழைக்கிறது; மருந்துகளையும் ஏற்றுக் கொள்கிறது.'கொரோனா பாதிப்பு ஏற்பட்டே, எட்டு மாதம் தான் ஆகிறது. குறுகிய காலத்தில், அமெரிக்காவிலுள்ள மாயோ கிளினிக் மற்றும் யுனிவர்சிட்டி ஆப் டெக்சாஸ் மெடிக்கல் சென்டர் ஆகியவை, கொரோனா நோயாளிகளின் பாதிப்புகளை ஆராய்ந்து வைத்துள்ளனர்.'அந்த நிபுணர்களின் அனுபவம், பாலசுப்ரமணியத்துக்கு சிகிச்சை அளிக்க பெரும் உதவியாக உள்ளது.
சென்னை, எம்.எம்.சி., டீன் மற்றும் டாக்டர்களின் அனுபவமும் குறைந்ததல்ல; ஏறத்தாழ, ஒரு லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவம் பெற்றவர்கள்.'கோவிட்-19 வைரஸ், நுரையீரலைச் சேதப்படுத்துகிறது. இதனால், உடலில் 'செல்'களுக்கான ஆக்ஸிஜன் சப்ளை பாதிக்கிறது. எனவே, போதுமான ஆக்ஸிஜனை, உபகரணங்கள் வாயிலாக நோயாளிக்கு தொடர்ந்து செலுத்துவதன் மூலம், நுரையீரல் பாதிப்பிலிருந்து விடுவிக்க இயலும்.'கடந்த, இரண்டு நாட்களில், இப்படியான முன்னேற்றத்தை, பாலசுப்ரமணியத்திடம் கண்டிருக்கிறோம்' என்றனர்.எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, முதல்வர் பழனிசாமி ஆகியோர், எம்.ஜி.எம்., மருத்துவமனை நிர்வாகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று விசாரித்தனர்.
உலகம் முழுவதும் உள்ள பல லட்சம் ரசிகர்களின் வேண்டுதலால், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்; அதுவே, அனைவரின் பிரார்த்தனையும் கூட!மனைவிக்கும் சிகிச்சைஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்திரி, கொரோனா தொற்றுக்காக, இதே எம்.ஜி.எம்., மருத்துவமனையில், வேறு ஒரு வார்டில் சிகிச்சை பெறுகிறார். மகன் சரண், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.- நமது நிருபர் -
No comments:
Post a Comment