Tuesday, December 1, 2020

புது மருத்துவ கல்லுாரி 2021ல் சேர்க்கை


புது மருத்துவ கல்லுாரி 2021ல் சேர்க்கை

Added : நவ 30, 2020 23:20

மதுரை : 'புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை துவங்கும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசு தெரிவித்தது.

மதுரை, வாசுதேவா தாக்கல் செய்த மனு:'நீட்' தேர்வில், 720க்கு, 521 மதிப்பெண் பெற்றுள்ளேன். 'திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல் உட்பட, 11 புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகள், 2020 - 21ல் துவக்கப்படும்; கலந்தாய்வு பட்டியலில் இடம்பெறும்' என, தமிழக அரசு செப்., 7ல் அறிவித்தது.ஆனால், நடப்பு கலந்தாய்வு பட்டியலில், இப்புதிய கல்லுாரிகள் இடம் பெறவில்லை. காரணத்தை அரசு தெளிவுபடுத்தவில்லை. நடப்பாண்டு மருத்துப் படிப்பு கலந்தாய்வு பட்டியலில், 11 புதிய மருத்துவக் கல்லுாரிகள் இடம் பெற வேண்டும். அவற்றில் மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்புகள் துவக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு, 'புதிய, 11 மருத்துவக் கல்லுாரிகளுக்கு, மருத்துவக் கவுன்சிலிடம் இணைவிப்பு பெற வேண்டியுள்ளது. அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை துவங்கும்' என தெரிவித்தது.நீதிபதிகள், 'சென்னை அருகே உள்ள சில மாவட்டங்களில், புது மருத்துவக் கல்லுாரிகள் துவங்க அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். பொறியியல் கல்லுாரிகள் போல், மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விடும்' என, அறிவுறுத்தி ஒத்தி வைத்தனர்.

 11 மருத்துவ கல்லுாரிகளுக்கான அனுமதி சான்றிதழ் எப்போது?

Added : நவ 30, 2020 23:38

சென்னை : தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட, 11 அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கான அடிப்படை சான்றிதழை, தேசிய மருத்துவ ஆணையத்திடம், மருத்துவக் கல்வி இயக்ககம் சமர்பித்துள்ளது.

தமிழகத்தில், 26 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. மேலும், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை, அரியலுார், கள்ளக்குறிச்சி ஆகிய, 11 மாவட்டங்களில், புதிதாக மருத்துவக் கல்லுாரி துவங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்த மாவட்டங்களுக்கு, தலா, ௪௦௦ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, மருத்துவ கல்லுாரிக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கல்லுாரிகளை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர, மருத்துவ கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது: தமிழகத்தில், 11 மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க, 2019 -- 20ம் கல்வியாண்டில் அனுமதி கிடைத்தது. மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன், கல்லுாரிக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்துள்ளன.மேலும், அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், முதல்வர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது.

மருத்துவப் உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து வித அடிப்படை மற்றும் முக்கிய சான்றிதழ்கள், தேசிய மருத்துவ ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.தேசிய மருத்துவ ஆணையக் குழுவினர், நேரில் ஆய்வு செய்த பின், அனுமதி சான்றிதழ் வழங்கப்படும். அனுமதி சான்றிதழ் கிடைத்த பின், அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

எம்.பி.பி.எஸ்., படிப்பு 381 இடங்கள் நிரம்பின

Added : டிச 01, 2020 01:23

சென்னை : மருத்துவ படிப்பில், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், 381 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, நேரு விளையாட்டரங்கில், நவ.,18ல் துவங்கியது. அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீடு, சிறப்பு பிரிவு மாணவர்கள் ஒதுக்கீடு முடிந்து, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்கிய நிலையில், 'நிவர்' புயலால் ஒத்தி வைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, நேற்று துவங்கிய, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கிற்கு, 390 மாணவர்கள் அழைக்கப் பட்டிருந்தனர். அவர்களில், 382 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்;

381 பேர் விரும்பிய அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற்றனர். தற்போது, அரசு கல்லுாரிகளில், 2,059 எம்.பி.பி.எஸ்., - - 151 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. அதேபோல, சுயநிதி கல்லுாரிகளில், 1,060 எம்.பி.பி.எஸ்., - - 985 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இன்றைய கவுன்சிலிங்கிற்கு, 451 பேர் அழைக்கப் பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024