சுரப்பா மீது விசாரணை கமிஷன் அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி
Added : நவ 30, 2020 23:18
மதுரை : சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணை கமிஷனுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி, அதிருப்தியை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெளியிட்டது.
வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழியைச் சேர்ந்த, மணி தணிக்கை குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:சென்னை அண்ணா பல்கலையில், 280 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, துணைவேந்தர் சுரப்பாவிற்கு எதிராக, முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் அனுப்பப்பட்டது. இதை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், விசாரணைக் கமிஷன் அமைத்து, தமிழக உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டார்.புகாரில் முகாந்திரம் இல்லை. நேர்மையான சுரப்பா, பல்கலையின் தொழிற்கல்வியை மேம்படுத்த, சீர்திருத்த நடவடிக்கை எடுத்தார். அவருக்கு எதிரான விசாரணையில் உள்நோக்கம் உள்ளது.
துணைவேந்தரை விசாரிக்கும் அதிகாரம், வேந்தரான கவர்னருக்கு மட்டும் உள்ளது. சுரப்பா மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். விசாரணை கமிஷன் அமைத்து, உயர்கல்வி செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பு, 'அலுவலர் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், இதை பொதுநல மனுவாக விசாரிக்க முகாந்திரம் இல்லை. தீவிரமான குற்றச்சாட்டு என்பதால், பல்கலை விதிகள் அடிப்படையில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது' என தெரிவித்தது.
நீதிபதிகள்: இதுபோல் முதல்வரின் தனிப்பிரிவிற்கு வந்த புகார்கள் மீதெல்லாம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளீர்களா. இதுபோல் புகாருக்குள்ளான துணைவேந்தர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?இவ்விவகாரத்தில், அரசு அவசரப்பட்டு முடிவெடுத்துள்ளதாகத் தோன்றுகிறது. விசாரணையில், சுரப்பா மீதான புகார் உண்மை யில்லை என தெரியவந்தால் என்ன செய்வது, துவக்க கட்ட விசாரணைகூட நடத்தாமல் விசாரணைக் கமிஷன் அமைத்தது ஏன்?
இதுபோன்ற புகாருக்கு உள்ளான துணைவேந்தர்கள் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட நேரிடும். சுரப்பா மீதான விசாரணை கமிஷனுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது.இவ்வாறு கேள்வி எழுப்பி, அதிருப்தியை வெளியிட்டனர்.பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'துணைவேந்தர் சுரப்பாவிற்கு எதிராக, எதன் அடிப்படையில் விசாரணைக் கமிஷன் அமைக்க முடிவெடுக்கப்பட்டது, விசாரணைக் கமிஷன் அமைக்க பிறப்பித்த அரசாணை அசல் ஆவணங்களை, நாளை தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்'என்றனர்.
No comments:
Post a Comment