பொங்கல் பரிசு ரூ.2,500 வங்கி கணக்கில் செலுத்தப்படுமா?
Added : டிச 21, 2020 04:48
சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழக அரசு, பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ள, 2,500 ரூபாய் ரொக்கத்தை, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு, ஆண்டு தோறும், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்தாண்டு பொங்கல் பரிசு தொகையாக, 2,500 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.அவரது அறிவிப்பில், 'பொங்கலை முன்னிட்டு, 2.06 கோடி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய்; தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலக்காய், முழு கரும்பு வழங்கப்படும்.'ஜன., 4 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கு முன், எந்த தேதிக்கு கடைக்கு வர வேண்டும் என்ற விபரம்அடங்கிய டோக்கன், கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனைவருக்கும் ரொக்கப்பணம் வழங்கப்பட உள்ளதால், பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்லும் அவசரத்துடன், 'முதலில் வாங்க வேண்டும்' என்ற எண்ணத்துடனும், பலரும்,கடைகள் முன் கூட்டம்சேருவர். இதனால், கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.தங்கள் முன்னிலையில் தான், பணத்தை வழங்க வேண்டும் என, ஆளுங்கட்சியினரும், கடைகள் முன் கூடுவர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினரும் வர வாய்ப்புள்ளது. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம்.இதை தவிர்க்க, 2,500 ரூபாய் ரொக்கத்தை, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கடைகளில், ஒவ்வொரு கார்டுதாரருக்கும், பொங்கல் பொருட்களுடன், 2,500 ரூபாயை வழங்க, அதிக நேரமாகும். பலரும், பணம் வாங்கவே முன்னுரிமை தருவர். மத்திய அரசின், 'ஆதார்' எண் அடிப்படையில், ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.பிரதமரின், 'ஜன்தன் யோஜனா' திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும், பெரும்பாலான ஏழை மக்கள், வங்கி கணக்குகளை துவக்கியுள்ளனர். வங்கி கணக்கும், 'ஆதார்' எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களிடம் இருந்து, அவர்களின் ரேஷன் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலை பெறலாம். பொது வினியோக திட்ட இணையதளம் வாயிலாகவும், வங்கி கணக்கு விபரங்களை பெறும் வசதி உள்ளது. இந்த பணியை, ஐந்து நாட்களுக்குள் முடிக்கலாம். பின், கார்டுதாரரின் வங்கி கணக்கிற்கு, பொங்கல் பரிசு தொகையான, 2,500 ரூபாயை நேரடியாக வரவு வைக்கலாம். இந்த முறையால், கடைகளில் கூட்டம் சேருவது தடுக்கப்படும். பணம் வழங்குவதிலும் முறைகேடும் நடக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment