ஊழலுக்காக புதுப்புது திட்டங்கள்: ஸ்டாலின் சாடல்
Updated : டிச 24, 2020 01:03
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே, குன்னம் ஊராட்சியில், தி.மு.க., கிராம சபை கூட்டத்தை, அதன் தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின், '' முதல்வர் பழனிசாமி அரசின் ஊழல் குறித்த பட்டியல், 'பார்ட் - 2'வை விரைவில் வெளியிடுவோம்,'' என்றார்.
தி.மு.க.,வின் பிரசார கிராம சபை கூட்டத்தின் துவக்க விழா, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குன்னம் ஊராட்சியில், நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்து, 'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என்ற தலைப்பில், பேச்சை துவக்கினார்.இதில், பெண்கள் உள்ளிட்ட குன்னம் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க.,வினர், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசுவதற்காக, முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்ட, எட்டு நபர்களை, ஒவ்வொருவராக, ஸ்டாலின் அழைத்தார்.இவர்கள், 'குன்னம் கிராமத்தில் ஏரியை தூர்வார வேண்டும்; விவசாயிகளுக்கு மானியங்கள் கிடைக்கவில்லை; தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசடைகிறது' உள்ளிட்ட குறைகளை சுட்டிக் காட்டினர்.
பின், ஸ்டாலின் பேசியதாவது-: பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும், மக்கள் பணியை, தி.மு.க., செய்து வருகிறது. 'நானும் ரவுடிதான்' என, ரவுடிகள் கூறுவதைபோல், பச்சை துண்டை போட்டபடி, தானும் விவசாயி என, முதல்வர் கூறுகிறார். பச்சை துண்டை போட்டு, பச்சை துரோகம் செய்கிறார்.இ.பி.எஸ்., அரசின் ஊழல் குறித்த ஆதாரம் திரட்டி, கவர்னரிடம் கொடுத்துள்ளோம். விரைவில், 'பார்ட்- - 2' ஆதாரத்தையும், கவர்னரிடம் கொடுப்போம்.
கொரோனா தொற்றால், மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், அந்த நோயை பயன்படுத்தி, அதற்கு வந்த நிதியைகூட கொள்ளையடித்த ஆட்சி தான், தற்போதைய ஆட்சி. இதற்கெல்லாம் விசாரணை வேண்டும் என, கவர்னரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியுள்ளார்.
அவர் தயங்கினால், நிச்சயமாக நீதிமன்றத்தை நாடுவோம்.தமிழகத்தில், லஞ்சம் கொடுத்தால்தான் தொழிற்சாலை துவங்க முடியும் என்ற நிலை உள்ளதால், தொழில் நிறுவனங்கள், அடுத்த மாநிலத்திற்கு சென்று விடுகின்றன.சில மாதங்களில் ஆட்சி போய்விடும் என்பதால், இருப்பதை கொள்ளையடித்து செல்ல, 'மினி கிளினிக்' போன்ற, புதுப்புது திட்டங்கள் துவங்கப்படுகின்றன.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
கூட்டம் நடந்த இடத்தின் அருகே, 'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என்ற கையெழுத்து பலகை வைக்கப்பட்டிருந்தது. இதில், ஸ்டாலின் மற்றும் கூட்டத்தில் பங்கேற்றோர் கையெழுத்திட்டனர்.
No comments:
Post a Comment