புதுடில்லி : 'கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை, முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கான வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறைகேடுகளை தடுப்பதற்காக, இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை வினியோகிக்கும் பணி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் துவங்கியுள்ளது. நம் நாட்டில், மூன்று விதமான மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசிகள் கிடைத்ததும், அவற்றை மக்களுக்கு எப்படி வழங்குவது என்பது தொடர்பான ஆலோசனைகளை, மத்திய அரசு ஏற்கனவே துவக்கிவிட்டது.தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க, குளிர்சாதன வசதிகள் உடைய கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல, குளிர்சாதன வசதி உடைய வாகனங்களுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.இந்நிலையில், எந்தெந்த பிரிவினருக்கு முதல்கட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படும் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள் என, இந்த வைரசுக்கு எதிரான முன்களப் பணியாளர்களுக்கு முதலில் வழங்கப்பட உள்ளது. பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முதல் கட்டத்தில் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.இதையடுத்து, 'இந்த தடுப்பூசியை எவ்வாறு அளிக்க வேண்டும்' என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு சமீபத்தில் வகுத்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் இது அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
'தடுப்பூசி செயல்பாட்டு வழிமுறைகள்' என்ற பெயரில், என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, மத்திய அரசு விரிவாக விளக்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், ஒரு நாளில் அதிகபட்சம், 100 - 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்க வேண்டும். இதற்காக அமைக்கப்படும் மையங்களில், ஐந்து ஊழியர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அங்குள்ள வசதிகளுக்கு ஏற்ப, கூடுதலாக ஒரு பணியாளர் இருக்கலாம்.தடுப்பூசி பெற்றவர்களை, 30 நிமிடங்களுக்கு கண்காணிக்க வேண்டும். அவர்களது உடலில் ஏதாவது எதிர்வினை ஏற்படு கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி போடப்படும் இடத்தில், ஒரு நேரத்தில், ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
தடுப்பூசி பெற விரும்புவோர், மத்திய அரசு உருவாக்கியுள்ள, 'கோ வின்' எனப்படும், மென்பொருள் மூலமான, இணையதளம், 'மொபைல் போன் ஆப்' வாயிலாக, 'டிஜிட்டல்' முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்க வேண்டும்.மையங்களில் நேரடியாக வந்து, யாரும் முன்பதிவு செய்ய முடியாது. முன்பதிவு செய்வதற்கு, ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை உட்பட, 12 ஆவணங்களை பயன்படுத்தலாம்.முதல் கட்டத்தில், மக்கள் தொகையில், 30 சதவீதம் பேருக்கு தடுப்பூசி கிடைக்கும். குழப்பங்களை தவிர்க்க, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து பெறும் தடுப்பூசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய பாதிப்பு குறைகிறது!
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், 27 ஆயிரத்து, 71 பேரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதன் வாயிலாக, இதுவரை வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, 98 லட்சத்து, 84 ஆயிரத்து, 100 ஆக உயர்ந்துள்ளது.இவர்களில், 3.52 லட்சம் பேர், தற்போது சிகிச்சை பெறுகின்றனர்; இது, ஒட்டுமொத்த பாதிப்பில், 3.57 சதவீதம். மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகளால், 93 லட்சத்து, 88 ஆயிரத்து, 159 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்; மீட்பு விகிதம், 94.98 சதவீதமாக உயர்ந்துஉள்ளது.
வைரஸ் பாதிப்பால் கடந்த, 24 மணி நேரத்தில், 336 பேர் இறந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக, 70 பேர் பலியாயினர். மேற்கு வங்கத்தில், 47; டில்லியில், 33; கேரளாவில், 29; பஞ்சாபில், 20 இறப்புகள் பதிவாகி உள்ளன. இவர்களுடன், வைரஸ் பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 355 ஆக அதிகரித்துள்ளது; இறப்பு விகிதம், 1.45 சதவீதமாக உள்ளது.பலி எண்ணிக்கை மஹாராஷ்டிராவில், 48 ஆயிரத்து, 209 ஆக உள்ளது. அடுத்ததாக கர்நாடகாவில், 11 ஆயிரத்து, 944 பேரும்; தமிழகத்தில், 11 ஆயிரத்து, 895 பேரும் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment