அரசு அதிகாரிகளுக்கு அவகாசம் அளிக்க அறிவுரை
Added : ஜூலை 11, 2021 00:29
மதுரை-'அரசுத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்து, அவர்களுக்கு கால அவகாசம் அளிக்காமல் உடனடியாக நீதிமன்றத்தில் மனு செய்தால், அபராதத்துடன், மனு தள்ளுபடி செய்யப்படும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் மாரனேரியைச் சேர்ந்த பிரபுதாஸ் தாக்கல் செய்த மனுவில், 'மாரனேரியில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள விவசாய நிலத்திற்கு, என் பெயரில் பட்டா வழங்கக் கோரி பூதலுார் தாசில்தாருக்கு ஜூன் 7ல் விண்ணப்பித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு:அரசுத் துறைகளில் மனு அளித்த ஒரு வாரத்தில், அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி இந்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கலாகின்றன.
இது மிக துரதிர்ஷ்டவசமானது. மனுவை பரிசீலிக்குமாறு பல்வேறு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் தினமும் பிறப்பிக்கிறது. இதனால் நீதிமன்றத்தின் மதிப்புமிக்க நேரம் வீணாகிறது.இதனால் 10 ஆண்டுகளுக்கு முன் தாக்கலான வழக்குகளை விசாரணைக்கு எடுக்க முடியவில்லை. அவற்றுக்கு தீர்வு காண முடியாமல் நிலுவையில் உள்ளதை கவனத்தில் கொள்ளும்போது வேதனையாக உள்ளது.அரசுத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்து, அவர்களுக்கு கால அவகாசம் அளிக்காமல் உடனடியாக நீதிமன்றத்தில் எவ்வித ஆவணமும் இன்றி, வரும் காலங்களில் மனு செய்தால் அபராதத்துடன் இந்நீதிமன்றம் தள்ளுபடி செய்யும். இவ்வழக்கு தகுதியானது அல்ல. போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment