தலையாட்டி பொம்மைகள்!
அலுவலகங்களில் சிலர், தமது வேலையினை திருத்தமாகச் செய்வர். தானுண்டு - தம் வேலையுண்டு என்றிருப்பர். பிறர் பற்றி பேசாது - குறை கூறாது இருப்பர். குறிப்பாக, அவர்களது மேலாளருக்கு கூழைக் கும்பிடு போடமாட்டார். அதனால், அவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்காது.
வேறு சிலர், வேலை செய்வது இல்லையெனினும், தங்களது மேலதிகாரியின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பார்கள். அவர்கள் தேவையை அறிந்து பூர்த்தி செய்வர். குறிப்பாக, அவர்களை புகழ்ந்து பேசுவதை ஒரு கலையாகப் பயின்று, அவர்களை மயக்கிவைத்திருப்பார்கள்.
இன்னும் சிலர், மேலதிகாரிகள் சொல்வதற்கெல்லாம் சரி என்று தலை ஆட்டுவார்கள்.. ஆமாம் போடுவார்கள்..
இப்படிப்பட்டவர்களுக்கும், சில மேலதிகாரியிடம் நல்ல பெயர் கிடைக்கும். அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, நல்லெண்ணத்தை சம்பாதிப்பார்கள். பதவி உயர்வு, சலுகைகள், ஊதிய உயர்வு, சுலபமான வேலை என இன்னும் பலவித சலுகைகளை பெறுவர்.
இவர்கள் சுயநலமிகள், முகஸ்துதி செய்யும் துதிபாடிகள், "ஆமாம்சாமி'கள் எனப்படுவர். சில இடங்களில், இந்தத் துதிபாடல் விஸ்வரூபம் எடுக்கும். ஓர் அடிவருடி பலன் பெறுவதைப் பார்த்து, இன்னொருவர் அதனைப் பார்த்து இன்னொருவர் என, பொய் புகழுரை கூறுவோர் கூட்டமும் அதிகரிக்கும். துதிபாடுவோர் கூட்டம் பெருகி, திறமைசாலிகள் வலுவிழக்கும் சூழல் ஏற்படும்.
அதன் விளைவு, ஒருவரை ஒருவர் விஞ்ச எத்தனிப்பர். இத்தகைய முகஸ்துதி செய்யும் ஆமாம்சாமிக் கூட்டம், விளைச்சல் நிலத்தில், நல்ல பயிருக்குள் இருக்கும் களையைப் போன்றது.
ஒரு நிறுவனத்தில் மலிந்து கிடக்கும் துதிபாடிகள், ஆமாம்சாமிகள் ஏற்படுத்தும் அடிவருடித்தனம் என்பது நிர்வாகத்துக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு சிலர் பலன் பெறுவர் - பலர் பாரபட்சமாக நடத்தப்படுவர்.
வேலைக்கும் திறமைக்கும் பலன் இன்றி, தெரிந்தவர் - மேலதிகாரியைச் சுற்றியிருக்கும் கூட்டம் பலன்பெறும். பல ஊழியர்களுக்கு பெரும் வெறுப்பு, மனத்தளர்ச்சி தோன்றவும் காரணமாக அமையும். திறமைசாலிகள் பிற நிறுவனங்களில் வேலை தேடும் நிலையை ஏற்படுத்தும்.
சிறிய அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமன்றி, பெரிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள்கூட இத்தகைய பிரச்னைகளை சந்திப்பதுண்டு. ஆனால், அவர்கள் இந்த பிரச்னைகளே, தலையெடுக்காத வண்ணம் சரியான முறையில் அணுகுவார்கள் அல்லது இத்தகைய களைகளைக் களைந்து விடுவர்.
அந்நிறுவனங்கள், பொறுப்பான பதவிகளுக்கான நபர்களை தேர்வு செய்யும்போதே துதிபாடுதலும், ஆமாம்சாமி போடுதலும் தங்கள் நிறுவனத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதனை தெளிவுபடுத்தி விடுவார்கள்.
உதாரணமாக, புதிதாக வேலைக்கு நேர்முகம் மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடத்தும்போது, அந்த விண்ணப்பதாரர்களின் மனப்பாங்கு மற்றும் அணுகுமுறை ஆகியவற்றைக் கண்டுபிடித்து வடிகட்டிவிடுவார்கள்.
மேலும், நிறுவனத்தில் தவறுகள் நிகழும்போது, அவற்றை செய்தவர்கள் தங்கள் மேல் அதிகாரியாக இருந்தால்கூட, சுட்டிக்காட்டத் தயங்காதவர்களா என்று தேர்வின்போது சோதிப்பதும் வழக்கம்.
இதன்மூலம், நிறுவனத்தில் திறமைக்கு மட்டுமே மதிப்பு என்பதனை தெளிவுபடுத்திவிடுவார்கள். ஒரு பிரபல இந்திய நிறுவனம், தனது விளம்பரத்தில் தங்கள் உயர் அதிகாரியிடம் முடியாது என்று சொல்லக்கூடிய துணிவு மிக்கவர்கள் மட்டுமே எங்கள் நிறுவனத்துக்கு தேவை (we need people who can say NO to their boss)என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
சில பன்னாட்டு நிறுவனங்களில், பலரும் பங்கு பெரும் கூட்டங்களிலும் - கருத்து பரிமாற்றங்களிலும், விளக்கம் கேட்பது, எதிர்கேள்விகள் அல்லது மாற்றுக் கருத்துகளை தெரிவிப்பது என்பவை ஊக்குவிக்கப்படும். அது அந்த நிறுவனத்தின் கலாசாரமாக இருப்பது தெரியவரும்.
அதனால், வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவர்கள்கூட தமது மாற்றுக் கருத்துகளை துணிந்து வெளியிடுவர், கேள்விகள் கேட்பர். மூத்த நிர்வாகிகள் அந்த எதிர் கேள்விகளில் நியாயம் இருந்தால், அதனை ஏற்றுக் கொள்ளுவர். இல்லாதுபோனால், அதற்குரிய விளக்கம் கொடுத்து மறுத்து விடுவர்.
இதன்மூலம் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்துக்கான சூழலை ஏற்படுத்துவார்கள் (ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் பொதுகுழுவில் இப்படி ஒரு உறுப்பினர் கேள்வி கேட்பதையோ அல்லது அதற்கு தலைவர்கள் பதில் கூறுவதையோ நினைத்துப் பார்க்க முடியுமா?).
ஆக, சிறந்த தொழில்முறை நிறுவனங்கள், இத்தகைய அடிவருடித்தனத்தை கட்டுபடுத்த, துதிபாடிகளையும் ஆமாம்சாமிகளையும் தொலைதூரத்தில் வைக்க, தங்களது செயல்முறை அமைப்புகளில் போதுமான தடை மற்றும் கட்டுப்பாடுகளை (Checks and balances)ஏற்படுத்திக் கொள்ளுகின்றன.
இத்தகைய முகஸ்துதி செய்வோரையும், ஆமாம்சாமிகளையும் அவர்களது அடிவருடித்தனத்தையும் ஊக்கப் படுத்துவது என்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
உதாரணமாக, ஒரு செயல் எப்படி செய்யப்படுகிறது என்பதற்கு மாறாக, யார் செய்தார் என்று கவனிக்கப்பட்டு அந்த அடிப்படையில் முடிவெடுக்கப்படும். அதேபோல, ஒரு ஆலோசனை எப்படிப்பட்டது என்பதற்கு மாறாக அதனை யார் வழங்கினார்கள் என்பது முன்னிறுத்தப்படும்.
நிர்வாகத் தலைவரை சுற்றி ஒரு திரை உருவாகும். அதனை தாண்டி நுழைவது என்பது எளிதாக இருக்காது. அங்கு குறைந்தபட்ச தகுதியே துதிபாடுதல் என்ற அவல நிலை ஏற்படும். தவிரவும் அந்த தலைவர்களுக்கு சரியான, மெய்யான செய்திகள்கூட சென்று சேராது.
அதற்கு மாறாக, அவர் விரும்பும் அல்லது மகிழும் செய்திகள் மட்டுமே சென்று சேரும் நிலை தோன்றும். அத்தகைய நிலை அவர்களை தவறான முடிவுகள் எடுக்க வைக்கும் (நெருக்கடி நிலையின்போது அன்றைய பிரதமரை, அவரை மகிழச் செய்யும் செய்திகள் மட்டுமே சென்றடைந்தன. ஏனைய செய்திகள் தவிர்க்கப்பட்டன என சொல்லப்பட்டது).
இந்தத் தலைவர்களது போக்கில் நமது காரியங்கள் எதுவும் தவறாக அமையாது. நாம் சொல்லுவது செய்வது எல்லாமே சரியானவை என்ற ஒரு எண்ணம் கட்டிப் போட்டுவிடும். மேலும், இவர்களது நிறுவனத்தில் திறமையைவிட, அடிவருடித்தனம் முக்கியத் தகுதியாக கருதப்படும். முடிவில் இது நிறுவனத்தை சரிவுக்கு இட்டுச் செல்லும்.
இத்தகைய முகஸ்துதி செய்வோர், ஆமாம்சாமிகள், மத ஸ்தாபனங்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், ஏன் நம்மை சுற்றியுள்ள குடும்பங்களில்கூட இருப்பதைக் காணலாம்.
பெரு நிறுவனங்கள், ஆமாம்சாமிகள் மற்றும் முகஸ்துதி செய்வோர் ஏற்படுத்தும் பிரச்னைகளை தவிர்க்கவும் - ஒருவேளை அத்தகைய களை வளர்ந்தால், களையெடுக்கவும் வழி வகை செய்யும்போது, அரசியலிலோ பெரும்பாலான கட்சிகள், முனைந்து இவற்றை ஊக்கு
விப்பதை நாம் வருத்தத்தோடு காண நேருகிறது.
அங்கு புகழ்ந்துரைத்தல், துதிபாடுதல் முக்கியமாகி, துதி பாடாதவர்கள் தலைமையின் நல்லெண்ணத்தை பெற முடியாத நிலையினை காணலாம். பல கட்சிகளில் துதிபாடிகள், அடிவருடிகள் மட்டுமே பட்டம், பதவி, சலுகைகள் பெறுவார்கள்.
இந்த ஆமாம்சாமிகளும் துதிபாடிகளும் தாமே தம்மை தாழ்த்திக் கொள்ளுபவர்கள். சிறு பலன்களுக்காக, தங்களது சுய கெளரவத்தை இழப்பவர்கள். இத்தகைய துதிபாடல்களுக்கு, இவர்கள் விரும்பிய பலன் கிடைக்கும்போது அதுவே இவர்களது பழக்கமாக மாறுகிறது. சில கட்சிகளில் தலைமை இதனை ஊக்குவிக்கும்போது இது கலாசாரமாக மாறும் அபாயம் ஏற்படுகிறது. தனிமனித வழிபாடு முழுமை பெறுகிறது.
இத்தகையோர் நிறைந்திருக்கும் கட்சிகளில், தவறுகளை, குற்றம் குறைகளை சுட்டிக் காட்டுவது என்பது அவர்களது தலைமையை குறை கூறுவதாக கருதப்படும். தலைவர்கள் புகழுக்கும், வழிபாட்டுக்கும் மயங்கினால், சில காலம் கழித்து அவர்கள் சுயநலமிகளுக்கு மட்டுமே தலைவராக இருக்க முடியும். இதன் காரணமாக, அவர்களது முடிவுகள், செயல்கள் பெரும்பாலும் தவறாகவே அமையும்.
இது குறித்து, வெற்றியை இழந்த அரசியல் கட்சியினர் அதிகம் சிந்திக்க வேண்டும். தோல்விக்கான காரணங்களை கண்டறியாது, அந்த சூழலில்கூட தலைமையின் மனத்தை குளிர்விக்க துதிபாடுவோர், உண்மையில் மாற்றார்களைவிட அதிக தீங்கு விளைவிப்பவர்கள்.
ஆம், ஆபத்து நிறைந்தவர்கள் ஆமாம்சாமிகளும் துதிபாடிகளும்.
இந்த இடத்தில், டாக்டர் அம்பேத்கர், அரசியல்சட்ட நிர்ணய சபையில் பேசியதை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்:
"இந்திய அரசியலில் தனிமனித வழிபாடு என்பது உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இருக்கிறது. சமயத் துறையில் பக்தி என்பது, பக்தர்களின் உய்வுக்கு காரணமாக அமையக்கூடும். ஆனால் அரசியலில் பக்தி என்பது, சரிவுக்கும் சர்வாதிகாரத்துக்கும் வழி வகுக்கும்' என்றார்.
அவரது வார்த்தைகள் இன்றைக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்குப் பொருந்துவது பெரும் வியப்பளிக்கிறது!
கட்டுரையாளர்:
பொறியாளர் (ஓய்வு).
இரா. கதிரவன்