உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காக ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் மருத்துவக் கல்வி தொடர்பாக சரியான வழிகாட்டுதலை முன்வைத்து, அதில் காணப்படும் குறைகளை அகற்ற இந்தக் குழு முற்படும் என்கிற எதிர்பார்ப்பு இப்போது பொய்த்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான வழிகாட்டுதல் குழு, இந்திய மருத்துவ கவுன்சிலால் அனுமதி மறுக்கப்பட்ட 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மீதான தடையை அகற்ற உத்தரவிட்டிருக்கிறது. தமது வழிகாட்டுதல்களையும் ஆணைகளையும் மருத்துவ கவுன்சில் மதிப்பதில்லை என்றும் அதன் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியவை என்றும் கடிந்து கொண்டிருக்கிறது.
லோதா வழிகாட்டுதல் குழுவின் ஆத்திரத்திலும் கண்டனத்திலும் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய மருத்துவ கவுன்சில், சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், அடிப்படை பயிற்றுவித்தல் வசதிகள் இல்லாமல் இருந்ததாலும், தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடையாது என்பதாலும் 86 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இப்போது, லோதா தலைமையிலான குழு, இந்திய மருத்துவ கவுன்சிலின் முடிவை நிறுத்தி வைத்து, அந்தப் பட்டியலில் உள்ள 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிபந்தனைகளுடன் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது.
வழிகாட்டுதல் குழுவின் கட்டளைப்படி இந்திய மருத்துவக் கவுன்சில் அந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி குறித்து மறு ஆய்வு செய்யவில்லை என்பது லோதா குழுவின் குற்றச்சாட்டு. அதற்கு, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கி கொள்வதற்கான அனுமதியை வழங்குவது சரியான தீர்வு அல்ல.
86 மருத்துவக் கல்லூரிகளில் 26 கல்லூரிகளை எந்த அடிப்படையில் லோதா குழு தேர்வு செய்து அனுமதி வழங்குகிறது என்று பார்த்தால், அது அதைவிட விசித்திரமாக இருக்கிறது. நேரில் சென்று சோதனை நடத்தி இந்திய மருத்துவ கவுன்சில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று அனுமதி மறுத்த கல்லூரிகளுக்கு, அந்த மருத்துவக் கல்லூரிகளின் இணையதளத்தில் தரப்பட்டிருக்கும் விவரங்களையும், புகைப்படங்களையும், குறிப்புகளையும் அடிப்படையாக வைத்து, அனுமதி வழங்க முற்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
மருத்துவ கவுன்சிலின் சோதனை குறித்து லோதா குழு முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு, விடுமுறை நாள்களில் அந்தக் கல்லூரிகளில் சோதனை நடத்தப்பட்டன என்பது. கட்டடங்கள் சரியாகக் கட்டப்பட்டுள்ளனவா, பரிசோதனைச் சாலை வசதிகள் முறையாக இருக்கின்றனவா, அந்தக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் யார் எவர், அவர்களது கல்வித் தகுதி என்ன என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள, எந்த நாளில் பரிசோதனை நடத்தினால்தான் என்ன?
மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி என்பது நீண்டதொரு நடைமுறையைக் கொண்டது. கட்டமைப்பு வசதி, யார் நிறுவுகிறார்கள், யார் நடத்தப்போகிறார்கள், உள்கட்டமைப்பு வசதிகள் என்னென்ன, பாடத்திட்டங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கின்றன, அதன் ஆசிரியர் குழுவில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று பல அடுக்குப் பிரச்னைகளை ஆய்வு செய்துதான் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது குறித்தெல்லாம் லோதா குழு, ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று நேரடியாக சோதனை நடத்தி, இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி மறுத்தலை மறுபரிசீலனை செய்து ரத்து செய்திருந்தால் அது நியாயமான முடிவாக இருந்திருக்கும்.
86 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுத்திருக்கும் இந்திய மருத்துவ கவுன்சில், முதற்கட்ட சோதனையில் குறைபாடுகள் காணப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு எதற்காக அனுமதி அளித்தது என்பதுதான் லோதா குழு எழுப்பி இருக்கும் விசித்திரமான கேள்வி. அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைபாடுகள் இருந்தால் அதைத் தட்டிக் கேட்கவும், குறைகளை மாற்றவும் வழியுண்டு. தனியார் மருத்துவக் கல்லூரிகள் அப்படியா என்கிற அடிப்படைக் கேள்வியைக்கூட ஏன் லோதா குழு யோசிக்கவில்லை?
இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளில் பல குறைகள் இருக்கின்றன. அதைக் களைவதற்காகத்தான் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குறைகளைச் சுட்டிக்காட்டி நீக்க லோதா குழுவுக்கு அதிகாரம் உண்டுதான். ஆனால், மருத்துவக் கல்லூரியின் தரம், மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு போன்றவற்றை சட்டம் படித்தவர்கள் நிர்ணயிக்க முடியாது. நீதிபதிகள் நியமனத்தை மருத்துவர்களும், கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் நிர்ணயிப்பது போன்ற விபரீதமாகத்தான் அது அமையும்.
இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளில் பல குறைபாடுகள் இருக்கின்றன. அந்தக் குறைபாடுகளை அகற்ற லோதா குழு என்ன செய்தது, என்ன பரிந்துரைக்கிறது என்றால் எதுவுமே கிடையாது. குறைபாடுகளும், ஊழல் குற்றச்சாட்டுகளும் நிறைந்த இந்திய மருத்துவ கவுன்சிலே, கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்று அனுமதி மறுத்திருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீதிபதி லோதா தலைமையிலான குழு அனுமதி வழங்குகிறது என்பதே, அந்தக் குழுவின் முடிவுகள் குறித்து நம்மை சந்தேகப்பட வைக்கிறது.
மாற்றாக ஓர் அமைப்பு உருவாக்கப்படும்வரை, இதுபோன்ற பிரச்னைகளில் இந்திய மருத்துவ கவுன்சிலை அகற்றி நிறுத்திவிட்டு, முடிவெடுப்பது புத்திசாலித்தனம் ஆகாது!
No comments:
Post a Comment