குறள் இனிது: ‘சிக்’கெனப் பிடிச்சுக்கணும்!
உங்களால் உண்ணாவிரதம், மௌன விரதம் போல கைபேசியில்லா விரதம் இருக்க முடியுமா?
ஒரு 21 வயது பெண், அவரது கைபேசி மூன்று மாதங்களுக்குப் பறிக்கப்பட்டும் கவலைப்படவில்லை என்றால் நம்பமுடிகிறதா?
ஆமாங்க நம்ம ரியோ ஒலிம்பிக்ஸ் வெள்ளிப் பதக்க நாயகி சிந்து தானுங்க அது!
அப்பா ரமணா வாலிபால் விளையாடப் போனால், உடன் செல்லும் 8 வயது சிந்து மெதுவாக பாட்மிட்டன் அரங்கிற்கு நழுவி விடுவாராம்!
அர்ஜுனா விருது வாங்கிய விளையாட்டு வீரரான ரமணா, தன் மகளை விளையாட்டு வீராங்கனையாக்க விரும்பியதால் சிந்துவிற்கு பாட்மிட்டன் பயிற்சி பெற ஏற்பாடுகள் செய்தார். 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தொடங்கிய வெற்றி தொடர்கதையானது. படிப்படியாக உலகத் தர வரிசையில் 10வது இடத்திற்கு முன்னேறினார்!
அவரது 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் ஆட்டத்தைப் பார்த்த யாரும் அவருடைய விசிறியாகாமல் இருக்க முடியாது... சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட!
ஆட்டம்னா ஆட்டம், அப்படி ஒரு ஆட்டம்! அரை இறுதியில் எதிராளியை சும்மா அங்குமிங்கும் ஓட வைத்துத் திணறடித்ததைப் பார்க்கணுமே!
இறுதி ஆட்டத்தில் அவர் எதிர் கொண்டவர் தர வரிசையில் முதலிடத்தில் இருந்த அனுபவசாலியான கரோலினா !
ஆனால் நம்ம சிந்து அஞ்சாமல் எதிர் கொண்டார். முதல் ஆட்டத்தில் வெற்றியும் பெற்றார். பின் இரு ஆட்டங்களினால் தங்கம் தவறிப் போனாலும், தானே ஒரு தங்கமென நிரூபித்து விட்டார்.
இந்தத் தன்னிகரில்லாத வெற்றிக்குக் காரணம் என்ன? 5'11" உயரமா? 13 வருட உழைப்பா? கோபிசந்தின் உன்னதப் பயிற்சியா?
இவையெல்லாம் கிடைக்கப் பெற்ற மற்றவர்கள் பலர் இருந்தும் இவரால் மட்டும் இது சாத்தியமானது ஏன்?
சிந்துவின் சமீபத்திய பேட்டிகளைப் பாருங்க புரியும்! இனி உலகின் நம்பர் 1 ஆவதற்காக உழைப்பாராம்! 2020-ல் டோக்கியோவில் தங்கம் வெல்லணுமாம்!
இந்தப் பெண்ணுக்கு வேறு நினைவே இல்லைங்க! இந்த விளையாட்டு அவரை ஆட்கொண்டு விட்டதுங்க!
அப்புறம் கைபேசி என்ன, ஐஸ்கிரீம் என்ன, காலை 4 மணித் தூக்கம் என்ன, பயிற்சிக்கு 56 கிமீ தூரம் என்ன?
மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக்கின் கதையும் இதைப் போன்றது தான்! 10 வயதில் அவர் அதில் இறங்கிய பொழுது அவருடன் போட்டியிடப் பெண் வீரர்களைத் தேடணுமாம்!
அன்று தொடங்கிய வேட்கை 12 ஆண்டுகளாய்த் தொடர்ந்தது! ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வாங்கிக் கொடுத்துள்ளது!
விளையாட்டுத் தளமோ, வியாபாரக் களமோ அரிய வெற்றி பெறத் தேவை உள்ளுதல் எனும் இடைவிடாத எண்ணம்தான்!
திரும்பத் திரும்ப ஒரு செயலை எண்ண எண்ண அதற்கான வழிகள், திறன்கள் எல்லாம் வந்தமைந்து விடுமல்லவா?
ஒருவர் தான் செய்ய எண்ணியதையே எண்ணி எண்ணி அதற்கானவற்றிலேயே மனம் தோயப் பெறுவாராயின் அவர்தான் நினைத்ததை அடைவது எளிது என்கிறார் வள்ளுவர்.
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின் (குறள்: 540)
somaiah.veerappan@gmail.com
No comments:
Post a Comment