Tuesday, February 21, 2017


ஒவ்வொரு மலருக்கும் உள்ள ஆற்றல் தெரியுமா? #PhotoStory

இறைவனின் படைப்பில் மிகவும் அழகானவை என்று போற்றப்படுபவை மலர்கள். ஒவ்வொரு மலருக்கும் உள்ள ஆற்றல் பற்றி தெரியுமா? நம்முடைய நன்மைக்காக அரவிந்த அன்னை மலர்களின் ஆற்றல்களைப் பற்றி நமக்குக் கூறி அருளி இருக்கிறார்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில்தான் நாம் எத்தனை எத்தனை பிரச்னைகளைச் சந்திக்கிறோம்? எத்தனை தடைகளை நாம் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது? 'யாரைத்தான் நம்புவதோ?' என்று அலைபாயவேண்டி இருக்கிறது? அவ்வப்போது மன அமைதியைத் தொலைத்துத் தவிக்கிறோம்?



இது போன்ற நிலை வரும்போது அன்னையின் பக்தர்கள், அன்னையின் திருவுருவப் படத்துக்கு முன்பாக மலர்களைச் சமர்ப்பித்து வழிபடுவார்கள். அதனால், தங்களுடைய பிரச்னைகள் நீங்குவதாக நம்புகிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பலன் கிடைக்கவே செய்கிறது. நமது பிரச்னைக்கேற்ப ஒரு மலரைத் தேர்ந்தெடுத்து அவற்றை அன்னைக்குச் சமர்ப்பித்து மனமுருக வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால் சிக்கல்கள் விலகும் .

ஆயிரம் மலர்கள் இருந்தாலும் ஒரு சில மலர்களையும் அதன் ஆற்றல்களையும் பற்றிக் காண்போம்.

*.செம்பருத்தி :
நாம் மேற்கொள்ளும் காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கி, காரியங்களில் வெற்றியும் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவையும் நமக்குத் தருவது செம்பருத்தி.




* தைரியம் தரும் எருக்கம் பூ :
என்ன நேருமோ ? என்று நாம் பயந்து கொண்டே இருந்தால் நம்மால் எதையும் தொடங்கவே முடியாது . நாம் இருக்கும் இடத்திலேயே தேங்கிவிடுவோம் . தைரியம்தான் மனதின் உரம் . இது மனிதனை முழுமையாக்கும் குணங்களுள் ஒன்று .அதனால்தான் எருக்கம்பூவை தைரிய மலர் என்று அன்னை கூறி இருக்கிறார்.


* எங்கும் எப்போதும் பாதுகாப்பை தரும் போஹன்வில்லா :
மனிதனுக்கு அசட்டுத் தைரியம் மற்றும் வீரம் இவை மட்டும் இருந்தால் போதாது . கூடவே விவேகமும் வேண்டும் . அப்போதுதான் பாதுகாப்போடு வெற்றியடைய முடியும் . அழிவில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் விவேகத்தை நமக்குத் தருவது போஹன்வில்லா. இந்த மலரை அன்னைக்குச் சமர்ப்பித்து விவேகத்தைப் பெறலாம்.

* தீயசக்திகளை வெளியேற்ற வேப்பம்பூ :
தாங்கள் சுவாசிக்கும் காற்றுகூட இறைவனின் ஆற்றல் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள். இவர்கள் அனைவருக்கும் உகந்த பூ வெப்பம் பூ. வீட்டில் துஷ்ட சக்திகள் இருப்பதை நீங்கள் உணர்ந்தால் வேப்பம்பூவை அன்னைக்குச் சமர்ப்பியுங்கள் . இதனால், துஷ்ட சக்திகள் விலகும்.




* பண வரவு தரும் வெள்ளைத் தாமரை :
பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை என்பது நாம் அறிந்ததே. நல்ல வருமானத்துடன் கடன் தொல்லை இல்லாத வாழ்க்கையை நாம் விரும்பினால், வெள்ளைத் தாமரை மலரை அன்னைக்குச் சமர்ப்பித்து வழிபடலாம்.

* குடும்பப் பிரச்னையை நீக்கும் கனகாம்பரம் :
குடும்ப வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கவேண்டும். ஆனால், பல வீடுகளில் கருத்து வேறுபாடு காரணமாகப் பல குடும்பங்களில் பிரச்னைகள் நிறைந்திருப்பதைக் காணமுடிகின்றது. அத்தகையவர்கள் மூன்று தட்டுகளில் கனகாம்பர மலர்களைச் சமர்ப்பித்து அன்னையை வழிபட்டால், குடும்பத்தில் சுமுகமான நிலை உருவாகும்.

* திருமண வரம் தரும் சம்பங்கி பூ :




திருமணம் தடைபட்டுக் கொண்டிருக்கிறதே என்று வருந்துகின்றீர்களா ? கவலைவேண்டாம் . அன்னையின் திருவுருவப் படத்துக்கு முன்பு ஐந்து தட்டுகளில் சம்பங்கி பூவை வைத்து , அவரிடம் முழுமனதோடு நல்ல வரன் வர வேண்டிக்கொள்ளுங்கள்.




* மனக்கவலை நீக்கும் வெள்ளை அரளி :
நம்முடைய கவலைகளுக்குக் காரணமே நாம்தான். நம்முடைய மனதில் தோன்றும் எண்ணங்கள்தான் நம்முடைய கவலைகளுக்குக் காரணமாகின்றன. மற்றவர்களைக் குறைகூறாமல், நம்முடைய மனதில் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ள உதவுவது வெள்ளை அரளி. வெள்ளை அரளி மலர்களை நாம் அன்னைக்குச் சமர்ப்பித்து வழிபட்டால், நம்முடைய மனதில் நல்ல பண்புகள் ஏற்படும்; மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

* கடன் பிரச்னையைத் தீர்க்கும் நாகலிங்கப் பூ:
இன்றைக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை பலருக்கும் ஏற்படவே செய்கிறது. நம்முடைய நியாயமான தேவைகளுக்குக் கடன் வாங்குவதில் தவறே இல்லை. நியாயமான தேவைகளுக்குக் கடன் வாங்கினாலும்கூட, சமயங்களில் நம்மால் அந்தக் கடனை திருப்பமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. இதுபோன்ற நேரங்களில், அன்னைக்கு நாகலிங்க மலர்களைச் சமர்ப்பித்து வழிபட்டால், வருமானம் அதிகரிப்பதுடன், சிறுக சிறுக கடனும் நீங்கி, நிம்மதி ஏற்படும்.

* குழந்தை வரம் பெற டிசம்பர் பூ :
ஆயிரம் செல்வம் இருந்தாலும் ஒரு குழந்தை செல்வமாவது வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள் . குழந்தை இல்லாமல் வருந்துபவர்கள் அன்னைக்கு டிசம்பர் பூவை சமர்ப்பித்துத் தொடர்ந்து வேண்டி வாருங்கள் . நிச்சயம் சந்தான பாக்கியம் கிட்டும் .

சட்டப்பேரவை வாக்கெடுப்பு: உயர் நீதிமன்றம் இன்று விசாரணை


தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது, சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டதாகவும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு சிறைக் கைதிகளைப் போல் பேரவைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், மனசாட்சிப்படி எந்த எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

திட்டமிட்டு எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனால், மீண்டும் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த வழககு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதற்கு அதுவே மேல்!

By ஆசிரியர்  |   Published on : 21st February 2017 01:44 AM  |   
கடந்த சனிக்கிழமை சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள், தமிழக அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத களங்கம் என்றுதான் கூற வேண்டும். சட்டப்பேரவைக்கு வெளியே எது வேண்டு மானாலும் நடக்கலாம். ஆனால் சட்டப்பேரவையில் அதன் செயல்பாட்டை முடக்குவதும், குழப்பம் விளைவித்து அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எந்தக் காரணத்துக்காகவும் ஏற்றுக் கொள்ளவே முடியாத கீழ்த்தரமான செயல்பாடுகள்.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்வரை, காலம் தாழ்த்தியது தவறு என்பதுதான் நமது கருத்து. அதே நேரத்தில், முறையாகக் காவல்துறையின் மூலம் கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த ஒவ்வோர் உறுப்பினரும் அவர் சொந்த விருப்பத்தில்தான் தங்கியிருக்கிறாரா என்பதைத் தனித்தனியாக அழைத்து விசாரித்து, அவர்களது வாக்குமூலத்தைப் பெற்ற பிறகுதான் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைத்திருக்கிறார் எனும்போது, அவரது செயல்பாட்டில் குற்றம் காண முடியவில்லை.
எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைத்து, அவர் தனது சட்டப்பேரவைப் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் ஆளுநர் அளித்தபோது, கடந்த 16-ஆம் தேதி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், "சட்டப்பேரவையில் மெஜாரிட்டியைக் காட்ட 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்து, மிகப்பெரிய அளவிலான குதிரைப் பேரங்கள் நடப்பதற்கான வாய்ப்பை ஆளுநர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்' என்று விமர்சித்தார்.
15 நாட்கள் அவகாசத்திற்குக் காத்திருக்காமல் அடுத்த மூன்றே நாட்களில் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாரானபோது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அதை வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு அவசரமாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன என்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினாரே, அதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
1972-இல் எம்ஜிஆர் பிரிந்து அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இப்போதைய நிலையில்தான் அன்றைய முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி இருந்தார். மக்கள் செல்வாக்கு, தனக்கு எதிராக இருக்கிறது என்று அவர் பதவி விலகவும் இல்லை, எம்ஜிஆர் ஆதரவாளர்களால் எல்லா தொகுதிகளிலும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் முற்றுகையிடப்பட்டபோது அதை சட்டை செய்யவும் இல்லை. அந்த சரித்திரத்தைத் தி.மு.க.வினர் நினைவுகூர்வது நல்லது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்டப்பேரவையில் நடந்துகொண்ட விதம், அவர்கள் எந்த அளவுக்குத் தெளிவாக இருந்தனர் என்பதை வெளிப்படுத்தியது. அவர்களில் ஐந்தாறு பேர் ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி இருந்தாலோ அல்லது அவர்களை வம்புக்கு இழுக்க முற்பட்ட தி.மு.க.வினருக்கு எதிர்வினையாற்ற முற்பட்டிருந்தாலோ, மிகப்பெரிய கலவரம் அரங்கேறி இருக்கும். அவர்கள் கையைக் கட்டிக் கொண்டு கற்சிலைகளாக அமர்ந்து விட்டதுதான், வன்முறையைத் தூண்டி ஆட்சிக் கலைப்புக்கு வழிகோலும் எண்ணத்துடன் வந்திருந்த தி.மு.க.வின் ஆத்திரத்தை மேலும் அதிகரித்தது என்று தோன்றுகிறது.
"சட்டப்பேரவையில் தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. எதிர்த்தரப்பில் இருந்தும் எங்களோடு சண்டையிட்டால்தான் அதை வன்முறை என்று சொல்ல முடியும். அவர்கள் வாக்களிக்கும் குறிக்கோளுடன் காசைப் பெற்றுக்கொண்டு நன்றிக்கடன் காட்டுவதற்காக அமைதி காத்தனர்' என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்திருக்கிறார். "காசைப் பெற்றுக்கொண்டு நன்றிக் கடன் காட்டினார்கள்' என்று பேரவை உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டுவது, உரிமை மீறலுக்கு வழிகோலும் என்பதுகூடவா அவருக்குத் தெரியவில்லை?
சசிகலா மீதான இனம்புரியாத வெறுப்பால், ஓ.பி.எஸ். அணியினரும், தி.மு.க.வினரும் செய்கின்ற ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்லாத செயல்பாடுகளை ஆதரிப்பது என்பது தவறான முன்னுதாரணங்களுக்கு வழிகோலும். இந்திய ஜனநாயக வரலாற்றில் பெரும்பான்மையை நிரூபிக்க மறைமுக வாக்கெடுப்புமுறை என்பது கிடையாது. தங்களது உறுப்பினர் பதவி கட்சித்தாவல் சட்டத்தின்படி பறிபோகக்கூடாது என்பதற்காக ஓ.பி.எஸ். அணியினர் எழுப்பும் இந்தக் கோரிக்கையை தி.மு.க. ஆதரிப்பதற்குக் காரணம், ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் நடந்து பதவிக்கு வந்துவிடமாட்டோமா என்கிற தி.மு.க.வின் ஆதங்கம்தான்.
குறைந்த அளவு பெரும்பான்மையுடன்தான் முதல்வர் பழனிசாமி அரசு வென்றிருக்கிறது. இப்போதும்கூடக் காலம் கடந்துவிடவில்லை. இரண்டு அணியினரும் நடந்ததை மறந்து இணைந்து செயல்பட முடியும். இரண்டு அணியின் பலவீனங்களும் வெளிப்பட்டிருக்கும் நிலையில், இணைவதுதான் பலமே தவிர, பிரிந்து செயல்படுவது அல்ல.
மு.க. ஸ்டாலின் தலைமையில், புதியதொரு பாதையில் தி.மு.க.வும், தமிழகமும் செயல்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இதைவிடப் பெரிய அதிர்ச்சி இருக்க முடியாது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசியலில் இல்லாத நிலைமை ஏற்பட்டால்தான் தமிழகத்திற்கும், தமிழக அரசியலுக்கும் விடிவுகாலம் என்று பரவலாகவே ஒரு கருத்து நிலவி வந்தது. அந்தக் கருத்து தவறு என்பதை, நடைபெறும் சம்பவங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு அதுவே மேல்!

நிறைகளைப் போற்றுவோம்!

By இரா. இராஜாராம்  |   Published on : 21st February 2017 01:42 AM  |   
புத்தரிடம் அவரது சீடர் ஒருவர் உலகிலேயே எளிதானது எது கடினமானது எது என்று இரு கேள்விகளைக் கேட்க அதற்குப் புத்தர் பிறரது குற்றம் குறைகளைக் காண்பதும், பேசுவதும் எளிதானது என்றும், தனது குற்றம், குறைகளை அறிவதும் அதனை நீக்க முயல்வதும் கடினமானது என்றும் கூறுகிறார்.
வீட்டில் குழந்தைகளின் இயல்பான தன்மையையும், சிறு சிறு சேட்டைகளையும் பொறுத்துக்கொள்ள முடியாத பெற்றோர்களில் சிலர் குழந்தைகளை வசைபாடிக்கொண்டே இருப்பார்கள்.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளை ஆசிரியர்களாகட்டும், பெற்றோர்களாகட்டும் அவர்களிடமுள்ள தனித்தன்மையையும், திறமைகளையும் பாராட்டுவதை விடுத்து அவர்களின் குறைகளையே அடிக்கடி சொல்லிக்கடிந்து கொள்வதை வழக்கமாக்கி விடுகின்றனர்.
மேலும் பிற குழந்தைகளோடு ஒப்பிட்டு அவர்களைக் கண்டிப்பதும், குறை கூறுவதும் குழந்தைகளின் மனத்தில் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி விடுகிறது. ஒவ்வொரு பாராட்டும் குழந்தைகளைத் தன்னம்பிக்கை உடையவர்களாகச் செய்வதோடு, உற்சாகமடையவும் செய்கின்றது.
குடும்பத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என ஒருவருக்கொருவர் மற்றவர் குறைகளையே சொல்லிக்கொண்டிராமல், ஒருவர் மற்றவரிடமுள்ள நற்பண்புகளை, திறமைகளை அவை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அவ்வப்போது அதனை மனமாரப் பாராட்டி வந்தால் குடும்ப உறவுகள் மேம்படுவதோடு அதனைப் பார்க்கும் குழந்தைகளுக்கும் அந்த நற்பழக்கம் கைவரப்பெற்று ஒட்டுமொத்தக் குடும்பமே குதூகலமடையும்.
பாராட்டுக்கள் மனித மனங்களைக் குளிர்வித்து நற்செயல்களை மேலும் அதிகரிக்கச் செய்யும். ஒருவரது தனித்திறமைகளை வளர்த்தெடுக்கும் அற்புத உந்து சக்தியாகவும் பாராட்டுக்கள் அமைந்திடும்.
நல்ல நட்பானது தன் நண்பன் தவறு செய்யும் போது அதனைச் சுட்டிக்காட்டி நெறிப்படுத்துவதும், அவனிடமுள்ள தனித்திறமைகளைப் பாராட்டுவதுமாகும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டுக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம்.
வெறும் முகஸ்துதிக்காகப் பாராட்டுதல் என்பது போலித்தனமானதாகும். பாராட்டுக்குரிய சிறு தகுதியாவது இருந்து பாராட்டி மகிழலாம். நமக்கு எதிரியாக இருந்தாலும் அவர் செய்யக்கூடிய நற்செயல்களைப் பாராட்டும் மனம் வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதை மறக்கலாகாது.
சமீப காலத்தில் மக்கள் மனத்தில் பதிவுகளை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அவை எண்ணற்ற எதிர்மறைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தராமல், நேர்மறையான செய்திகளான தனிநபர் சாதனைகள், நேர்மையாகத் தங்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்திடும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசியல் வாதிகள் பற்றிய செய்திகள் பராட்டுக்களுடனும், பல தொண்டு நிறுவனங்கள் செய்திடும் சேவைகள், நூறு சதவிகிதம் வருமான வரியை சரியாகச் செலுத்திடும் தொழிலதிபர் கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் பற்றியும், அவர்கள் ஆண்டுதோறும் அரசுக்கு முறையாக செலுத்தும் வருமானவரி விவரங்கள் போன்றவற்றையும், தற்கால இளைஞர்கள் புறக்கணித்து வரும் ஒப்பற்ற, உயர்வான, மிக அவசியமான தொழிலான வேளாண்மையை விரும்பிச் செய்திடும் இளைஞர்கள் பற்றியும், அதில் அவர்கள் நிகழ்த்தும் சாதனைகளையும் நேர்காணல் மூலம் விரிவாக எடுத்துரைப்பது, இன்னும் எத்தனையோ நேர்மறை நிகழ்வுகளை, நற்செயல்களைச், சாதனைகளைக் கண்டறிந்து அவற்றிற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் மக்கள் மனத்தில் நல் விளைவுகள் ஏற்பட்டு நேர்மறைச் சிந்தனைகளும், செயல்களும் பெருகும்.
பெருமையுடையவர்கள் பிறரது குற்றம் குறைகளை விடுத்து அவர்களிடமுள்ள நல்லவற்றைப் பேசுவார்கள். சிறுமையுடையவர்கள்தான் எப்போதும் பிறரது குற்றங்குறைகளையே பேசிக்கொண்டிருப்பர் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
தேர்வில் மதிப்பெண் குறைந்தால் பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் கடிந்து கொள்வதோடு, வீட்டில் பெற்றோர்களும் அதனைச் சுட்டிக்காட்டிக் கடுமையாகக் கண்டிப்பதும், பிற குழந்தைகளோடு ஒப்பிட்டு அவர்கள் மனம் நோகப் பேசுவதும் அவர்களுக்குப் படிப்பில் வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும்.
அதனால் தோல்வி என்பதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றிச் சில சமயம் கோழைத்தனமான முடிவுகளைத் தேடிக்கொள்ளும் நிலைக்குச் சென்று விடுகின்றனர். மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்கள் அல்ல.
ஒவ்வொரு மாணவனும் ஒரு தனித்தன்மை பெற்றவராய், ஒவ்வொரு விதத்தில் திறமையுடையவராய் இருப்பர். அவர்களுக்கு எதில் ஆர்வமும், திறமையும் இருக்கிறதோ அதில் அவர்களை ஈடுபடுத்தினால் அவர்களின் திறமை பளிச்சிடும்.
ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களும், தங்களோடு தொடர்புடையவர்களின் குறைகளையே கண்டறிந்து கொண்டிராமல் அவர்களிடமுள்ள சிறு சிறு திறமைகளையும், நற்செயல்களையும் கண்டறிந்து மனமாரப் பாராட்டி வந்தால் அவர்களிடமுள்ள நற்செயல்களும், திறமைகளும் அதிகரிப்பதோடு உற்சாகம் பெற்று உறவுகள் மேம்படும். ஒரு நல்ல இணக்கமான சூழ்நிலை உருவாகும். நல்லவை சிறிதளவே ஆயினும் பாராட்டி மகிழ்வோம், வாழ்த்தி வளம் பெறுவோம்.

மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்

மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்

தமிழக முதல்- அமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிசாமி, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் தனது அரசுக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்தார்.

பிப்ரவரி 21, 05:45 AM

பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும், மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்பன உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற வகை செய்யும் 5 கோப்புகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.

சென்னை,

எடப்பாடி பழனிசாமி

இதைத்தொடர்ந்து, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்துக்கு சென்றார். அவருக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய அறைக்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு, ஜெயலலிதா பயன்படுத்திய நாற்காலியில் அமர்ந்தார்.

5 கோப்புகளில் கையெழுத்து

பின்னர் அவர், தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா வாக்குறுதி அளித்த 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்றும் வகையில், 5 கோப்புகளில் கையெழுத்திட்டு, தனது பணிகளை தொடங்கினார்.

அவர் கையெழுத்திட்ட 5 திட்டங்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மானிய விலையில் இரு சக்கர வாகனம்

* மகளிர், பணியிடங்களுக்கும் பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கரவாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கரவாகனம் வாங்க 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் இருபதாயிரம் வழங்கப்படும்.

மகளிரின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை வைத்திருந்த ஜெயலலிதா நினைவாக இத்திட்டம் ‘அம்மா இரு சக்கர வாகனம் திட்டம்’ என அழைக்கப்படும். ஆண்டொன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18 ஆயிரம்

* ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவியை, 1.6.2011 முதல் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஜெயலலிதா ஆணையிட்டார். உலகநாடுகளின் நிலையையொத்த பேறுகால குறியீடுகளை தமிழ்நாடு அடையும் பொருட்டும், பேறுகால தாய்-சேய் இறப்பு விகிதத்தினை மேலும் குறைக்கும் பொருட்டும், 2016-ம் ஆண்டு சட்டமன்றதேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதனை நிறைவேற்றும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 6 லட்சம் தாய்மார்கள் பயன் அடைவர். ஆண்டொன்றுக்கு 360 கோடி ரூபாய் கூடுதல் செலவில் இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.

வீடு கட்டும் திட்டம்

* தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் மீனவர்களுக்கான தனி வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டு அதற்கான கோப்பில் முதல்- அமைச்சர் கையெழுத்திட்டார்.

இத்திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டின் மதிப்பு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். 85 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.600

* வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை இரு மடங்காக அதிகரிக்கப்படும் என ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தார்.

மேற்கண்ட தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூ.100-லிருந்து ரூ.200 ஆக உயர்த்தியும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூ.150-லிருந்து ரூ.300 ஆக உயர்த்தியும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.200-லிருந்து ரூ.400 ஆக உயர்த்தியும், பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.300-லிருந்து ரூ.600 ஆக உயர்த்தியும் ஆணையிட்டு அதற்குரிய கோப்பில் முதல்- அமைச்சர் கையெழுத்திட்டார்.

இத்திட்டத்தின் மூலம் தற்போது உதவித்தொகை பெற்றுவரும் 55,228 இளைஞர்கள் உயர்த்தப்பட்ட உதவித்தொகை பெற்று பயன் பெறுவர். இத்திட்டத்தை செயல்படுத்துவதனால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டொன்றுக்கு 31 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.

மேலும் 500 மதுக்கடைகள்

* மது விலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மது விலக்கு என்ற நிலை எய்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஜெயலலிதா 500 மதுபான கடைகளை மூடியும், மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்தும் 24.5.2016 அன்று ஆணையிட்டார்.

மேற்கண்ட கொள்கையினை முன்னெடுத்து செல்லும் வகையில், தமிழ்நாட்டில் மேலும் 500 மதுபான கடைகள் மூடுவதற்கான ஆணையிட்டு, அதை செயல்படுத்தும் வகையில் அக்கோப்பில் முதல்-அமைச்சர் கையெழுத்திட்டார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேற்கண்ட 5 திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

Saturday, February 18, 2017


உங்கள் குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் திறனை வெளிக் கொணர்வது எப்படி?




ஒவ்வொரு குழந்தையிடமும் நிச்சயம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கிடக்கும். அதனைக் கண்டறிந்து வளர்த்தெடுத்தால் மட்டுமே, அந்தத் திறமை மேம்பட்டு வளர்ச்சியடையும். குழந்தைகளின் திறன்களை எப்படி கண்டறிந்து, அதனை வளர்த்தெடுப்பது என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல வல்லுநர் சித்ரா அரவிந்திடம் பேசினோம்.

"இதில் பெற்றோர்களின் பங்கே அதிகம். குழந்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள். எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக் கொள்வது, முதல் மார்க் எடுப்பது, நடனம் ஆடுவது என வெளியில் தெரிவது மட்டும் குழந்தையின் திறமை அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு வகுப்பறையில் 60 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால் விளையாட்டில், படிப்பில், இசையில் திறன் மிகுந்தவர்கள் வெறும் 10 குழந்தைகளாகத்தான் இருப்பார்கள். 'அப்போ மத்த குழந்தைங்க திறன் இல்லாதவங்களா...?' என்று நீங்களாக அனுமானம் செய்து கொள்ள வேண்டாம்.

மீதம் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் செய்வதை 'அப்படி செய்யாத, சத்தம் போடத, அமைதியா வெளையாடு" என்று அடக்குவதை விட்டு ,அவர்கள் போக்கில் சென்று கவனியுங்கள். குழந்தைகளுடன் பேசும்போது அவர்களின் ஆர்வம் எதைப் பற்றியதாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சில குழந்தைகள் பெற்றோரிடம் பேசுவதை விட, அவர்களுடைய‌ நண்பர்களிடம்தான் அதிகம் பேசுவார்கள். அப்போது அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதையும் கவனியுங்கள். " என்றவர், அந்த திறன்களை எப்படி வளார்த்தெடுப்பது என்பதைப் பற்றியும் சொன்னார்.

"உங்கள் குழந்தையின் குரல் பேசும் போது நன்றாக இருந்தால் உங்கள் மொபைலில் ரெக்கார்ட் செய்யுங்கள். அப்போதும் நன்றாக இருந்தால் 'உன்னை பாட்டு கிளாஸ்ல சேர்த்து விடவா செல்லம்? உன் வாய்ஸ் நல்லா இருக்கு... பாட்டு கத்துக்கிடுறியா? என்று கேளுங்கள். அவர்கள் சம்மதத்துடன் குழந்தையை பாட்டு கிளாஸில் சேர்த்து விடுங்கள்.





சில குழந்தைகள், பிறவியிலேயே நன்கு வளையும் உடல் அமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களை ஜிம்னாஸ்டிக், நடனம் போன்றவற்றில் சேர்த்து விடலாம். சிறு வயதிலேயே கோர்வையாக பேசத் தெரிந்த குழந்தைகளை, பேச்சுப் போட்டியில் சேரச் சொல்லி ஊக்கப்படுத்தலாம். சிலர் டயம் சரியாக பார்ப்பது, வாய்ப்பாட்டை சரியாக நினைவில் கொள்வது என்று கணிதத்தில் சற்று கெட்டியாக இருப்பார்கள். அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி, சின்னச் சின்ன வாய்ப்பாட்டு கணக்கில் ஆரம்பித்து, தொடர்ந்து கணிதத்தில் ப‌யிற்சி கொடுங்கள்.

சில குழந்தைகள் லாஜிக்கலாக கோர்வையாக யோசிப்பது, வரையும் திறமை, ஒரு விஷயத்தை 3 கோணத்தில் யோசித்துப் பார்க்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் ஆர்ட்டிஸ்ட் ஆக, ஆர்க்கிடெக்ட்டாக வருவார்கள். எளிதில் எல்லோருடனும் பழகும் குழந்தைகள், தலைமைப் பண்பு மிக்கவர்களாக வருவார்கள். ஒரு பேட்டரியை எடுத்து அதை பிரித்து அலசி ஆராய்ந்து ஓட வைக்கும் திறன் கொண்டவர்களுக்கு சயின்டிஸ்ட் அல்லது ஆராய்ச்சி பணிகளுக்கு சரியானவர்களாக இருப்பார்கள்.




மேலே சொன்ன அத்தனையும் நடக்க, பெற்றோர்களின் தொடர் ஊக்கம், அவை பிரஷர் தருபவையாக இல்லாமல் இருந்தால் நிச்சயம் உங்கள் குழந்தைகளின் திறமைகள் பிரகாசமாக வெளிவரும். 'என் பையனுக்கு ஆர்கிடெக்சரில் திறமை இருக்கு...' என்று, அதில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு மட்டும் கொடுங்கள். அதைவிடுத்து அதையே நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். சிறு வயது ஆசைகள் வளர்ந்த பிறகும் தொடரலாம் அல்லது புதியதாக‌ ஓர் ஆசை தோன்றக்கூடும். அதிகமான நம்பிக்கைகள் மற்றும் ஆசைகளை பெற்றோர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

உங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் போக்கில் நீங்கள் செல்ல முடியும். அவர்களையே குறிக்கோளை உருவாக்கச் சொல்லி, அதில் பயணிக்க சொல்லுங்கள். எனவே உங்கள் ஊக்கங்களையும், உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கவனியுங்கள். நிச்சயம் உங்கள் குழந்தைகள் ஜொலிப்பார்கள்.

- கே.பாலசுப்ரமணி

துப்பட்டா முகமூடி... வேண்டவே வேண்டாம்!

சா.வடிவரசு, படம்: புகழ் திலீபன்



இப்போதெல்லாம் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களில் பெரும்பாலானவர்கள், முகத்தில் துப்பட்டாவைச் சுற்றி, முகமூடி அணிந்தவர்களாகவே செல்வதைப் பார்க்க முடிகிறது. 'தூசு, வெயில் போன்றவற்றிலிருந்து தப்பிக்கத்தான்' என்றபடி இவர்கள் வேகமெடுத்துக் கொண்டிருக்க... ''இது தவறான பழக்கம்'' என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் நோய்கள் சிறப்பு மருத்துவர் மாயா!

''முகம் முழுக்க துப்பாட்டாவைச் சுற்றி, கண்கள் மட்டும் தெரியுமாறு கட்டிக்கொள்கிறார்கள். சிலர் மிக இறுக்கமாக இரண்டு, மூன்று சுற்றுகள் வரைகூட சுற்றிக்கொள்கிறார்கள். இதனால், முகத்துக்கு பல பிரச்னைகள் வந்து சேரும் என்பதே உண்மை.



பெரும்பாலான பெண்கள் கறுப்பு நிறம் உள்ளிட்ட அடர்ந்த நிறத் துணிகளை முகமூடிக்குப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய நிறத் துணிகள், வெகுவாக சூரிய ஒளியை ஈர்த்து தோலுக்கு பாதிப்பைத் தரும். தடிமனான துணிகளைக் கட்டும்போது, காற்று உட்செல்ல வாய்ப்பில்லாமல், தோலில் இருக்கும் துளைகள் வாயிலாக நடக்கும் சுவாசம் தடைபடும்; கஞ்சி போட்ட மொடமொடப்பான துணிகளைப் பயன்படுத்தும்போது, சுவாச அலர்ஜி ஏற்படும்; சில வண்ணத் துணிகளைக் கட்டும்போது, வியர்வை காரணமாக அந்தத் துணியிலிருக்கும் சாயம், தோலில் இருக்கும் துளைகள் வாயிலாக உள்ளுக்குள் ஊடுருவி பிரச்னைகளை ஏற்படுத்தும்; இறுக்கமாக கட்டுவதால் முகப்பரு, வியர்க்குரு என பலவித தோல் பிரச்னைகளும் வரக்கூடும்; இறுக்கமாக கட்டியிருப்பதால், முக அசைவுகள் குறையும். இதனால், எதிரில், பக்கத்தில் வரும் வாகனங்களைப் பார்த்து சமாளித்து ஓட்டவும், ஓட்டும் வாகனத்தை கன்ட்ரோல் செய்யவும் முடியால் போக நேரிடலாம்'' என்றெல்லாம் சொன்ன டாக்டர்,

''அழகு பராமரிப்பைவிட, உயிர் பாதுகாப்புதான் முக்கியமானது. எனவே, டூ வீலரில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்துங்கள். தலை வியர்த்து, அழுக்கு, பிசுபிசுப்பு என்று தலைமுடி பாழாகிவிடும் என்று இதைத் தவிர்ப்பவர்கள், தரமான ஹெல்மெட் பயன்படுத்துங்கள். கூடவே, மெல்லிய காட்டன் துணியைத் தலையில் போட்டு, அதன் மீது ஹெல்மெட்டை அணிந்தால்... உஷ்ணம், வியர்வையை அந்தத் துணி உறிஞ்சிக் கொள்ளும். பாதுகாப்பு என்று நினைத்து பிரச்னைகளை வர வழைத்துக் கொள்ளாதீர்கள்... துப்பட்டா முகமூடி அணியாதீர்கள்!'' என்று அறிவுறுத்தினார் டாக்டர் மாயா.

பிரியாணிக்கு எந்த சைடிஷ் சிறப்பு...! #BiryaniSidedish




பிரியாணியை பிடிக்காதவர் இருப்பார்களா... ட்ரீட் என்றதும் எங்க பிரியாணி டேஸ்டியாக கிடைக்கும் என்றே தேடுவோம். எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பாகாத உணவு, பிரியாணி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேடி சுவைப்பதும் பிரியாணியைதான். ஆனால் இதை அன்றாடம் சாப்பிடலாமா என்றால்... கூடாது என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். பிரியாணிக்கு எந்த சைடிஷ் வைத்து சாப்பிட வேண்டும், என பல குழப்பங்கள் இருந்து வருகிறது.

பிரியாணியுடன் ரைத்தா சாப்பிடலாமா?

பிரியாணியில் நெய், எண்ணெய் எனக் கொழுப்பை அதிகரிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தக் கொழுப்பைக் குறைக்க, வெங்காயத்தை நறுக்கி சைடுடிஷ்ஷாகச் சாப்பிடலாம். இது உணவில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வெங்காயத்தில், தயிர் சேர்ப்பதில்தான் பிரச்னை தொடங்குகிறது.

பொதுவாக அசைவத்துடன் தயிர் சேர்க்கக் கூடாது எனும் கருத்து உள்ளது. ரைத்தா செய்வதற்கு பாலாடை நீக்கிய பாலில் தயாரித்த தயிரைச் சேர்க்கலாம். மேலும், கடையில் விற்கப்படும் யோகர்ட்டை பயன்படுத்தியும் ரைத்தா செய்யலாம்.

பிரியாணியுடன் சாலட்

பிரியாணியுடன் கேரட், வெள்ளரி, முட்டைகோஸ், வெங்காயம் போன்றவற்றை வேகவைக்காமல், அப்படியே சாலட்போல சேர்த்துக்கொள்வது நல்லது. இது, செரிமானத்துக்கு உதவும். கொழுப்பைக் கரைக்கும்.







புதினா துவையல்

பிரியாணிக்கு சைடுடிஷ்ஷாக புதினா துவையல் சாப்பிடலாம். மந்தமான நிலையை புதினா போக்கும்; புத்துணர்ச்சி கொடுக்கும்; அசைவம் சாப்பிட்ட வாடையைப் போக்க புதினா உதவும்.

கத்திரிக்காய் கொத்சு

இதை பிரியாணியுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. இதில் சேர்க்கப்படும் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகத் தூள் ஆகியவை செரிமானத்தை மேம்படுத்தும்.

பிரியாணியில் அவசியம் சேர்க்கவேண்டியவை....

பிரியாணியில் அசைவம் சேர்க்கப்படுவதால், செரிமானத்துக்கு உதவும் பட்டை, ஏலம், கிராம்பு, புதினா, இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்ப்பது நல்லது.





பிரியாணி சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டியவை.... செய்யக் கூடாதவை!

பிரியாணி சாப்பிட்ட பிறகு பால் சேர்க்காத இஞ்சி டீ, கிரீன் டீ, பிளாக் டீ ஆகியவை குடிக்கலாம். இவை, செரிமான சக்தியை அதிகரிக்கும். வயிறு மந்தமாகும் பிரச்னையைத் தடுக்கும்.



எலுமிச்சை அல்லது சாத்துக்குடிப் பழச்சாற்றை அருந்தலாம். இது அசைவத்தில் உள்ள இரும்புச்சத்தை கிரகிக்க உதவும்.

பீடா சாப்பிடலாம். இதுவும் செரிமானத்துக்கு உதவும்.

இளஞ்சூடான நீரை ஒரு கிளாஸ் அளவில் பருகினால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.



ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால், வயிற்றில் உள்ள கொழுப்பு கெட்டியாக மாறும்.



கார்பனேட்டட் பானங்கள் குடிப்பதால், வாயுத்தொல்லை உண்டாகும்; காஃபின் இருப்பதால், மந்தநிலை உண்டாகும்; சோர்வைத் தரும் செரிமானத்தைப் பாதிக்கும்.

வினிதா கிருஷ்ணன், டயட்டீஷியன்
சட்டப்பேரவையில் தனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது என, சபாநாயகர் தனபால் வேதனை தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது என சபாநாயகர் வேதனை!


சட்டப்பேரவையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். 

சபாநாயகரின் இருக்கை, மேஜை, மைக் உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. இன்றைய அலுவல் நிரல் அடங்கிய காகிதங்களை திமுகவினர் கிழித்தெறிந்தனர்.  இதன் காரணமாக அவை பகல் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியதும் பேசிய சபாநாயகர் தனபால், தனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டுத்தானே நான் அவையை நடத்த முடியும் என்றும் தனபால் கூறினார். 

யாருக்கும் வெட்கம் இல்லை!

ப.திருமாவேலன் - படம்: ஆ.முத்துக்குமார்

vikatan.com




சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வத்தை உத்தமராக உருவகப்படுத்துவதும், சசிகலாவை ஜனநாயகப் போராளியாக மாற்ற முயற்சிப்பதும் வெட்கம்... மகா வெட்கம்; கேவலம்... மகா கேவலம்!

ஜெயலலிதா இதுவரை நடுநாயகமாக இருந்து பங்கு பிரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பயந்துகிடந்தன இந்த இரண்டு தரப்புகளும். இப்போது ‘தலையாரி’ செத்துப்போனதும் பங்காளிகளுக்குள் சண்டை வருவதைப்போல சசிகலாவும் பன்னீர்செல்வமும் மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இதுதான் அ.தி.மு.க-வில் நடக்கிறது. ‘ஜனநாயகம் மீட்போம்’ என்று சசிகலா சொல்வதைப் பார்க்கச் சகிக்கவில்லை. ‘அறப்போராட்டம்’ என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்வதைப் பார்த்தால் குமட்டிக்கொண்டு வருகிறது.'

பிப்ரவரி 5-ம் தேதிக்கு முன்பு வரை இவர்களுக்குள் அதிகாரம் செலுத்துவதில் மோதல் இல்லை; சம்பாதிப்பதில் மோதல் இல்லை; பங்கு பிரிப்பதில் மோதல் இல்லை; அராஜகத்தில் மோதல் இல்லை; சாதி அரசியலில் மோதல் இல்லை; அநீதி நடவடிக்கைகளில் மோதல் இல்லை. இப்போது மோதல் வர என்ன காரணம்? இதுவரை கட்சியைக் குத்தகைக்கு விட்டு கல்லா கட்டிவந்த சசிகலா குடும்பம் (மன்னார்குடி குடும்பம் என்று இனி சொல்லக் கூடாது. பாவம்... அந்த ஊர் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?!) இப்போது நேரடியாகவே களத்தில் குதிக்கிறது. இதுவரை இவர்களைத் தடுக்க ஜெயலலிதா இருந்தார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மர்மமான முறையில் மறைந்துபோனார். அவரால் விரட்டப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து சசிகலாவை வளைத்துவிட்டார்கள். இனிமேல் பன்னீர் முகமூடி எதற்கு என்று தூக்கி எறிந்துவிட்டார்கள். ஒன்றல்ல மூன்று முறை சிம்மாசனத்தில் தூங்கிய பன்னீர், இப்போதுதான் விழித்துக்கொண்டதாக நடிக்கிறார்.

சசிகலாவைக் கெட்டவராக நினைக்கும் பாவப்பட்ட தமிழ்நாட்டு மக்கள், பன்னீரை நல்லவராக நினைக்கிறார்கள். கெட்டவரை எதிர்த்து மோதுபவர்கள் எல்லோரும் நல்லவராகத்தான் இருக்க முடியும் என்று நம்பும் அப்பாவிகள். அப்படி ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டுக்கு இன்னமும் வரவில்லை. கெட்டவரை எதிர்த்துக் கெட்டவரே மோதும் நிலைமைதான் தொடர்கிறது.

சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதிராக அ.தி.மு.க-வுக்கு உள்ளேயே இருந்து ஒரு குரல் கிளம்பியிருக்கிறது. அது பன்னீர்செல்வம் என்பதுதான் அவர் பக்கம் இருக்கும் ஒரே ஒரு தார்மிக நியாயம்.

129-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் (அந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது என்றாலும்!) சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்க ஆளுநர் இழுத்தடிப்பது மட்டுமே சசிகலாவின் ஒரே ஒரு தார்மிகக் கோபம்.

ஆனால், தமிழ்நாடு இவர்கள் இருவருக்கும் இல்லாத பெருமைகளை எல்லாம் சூட்டிச் சிங்காரித்துக்கொண்டிருக்கிறது.



வானத்தில் இருந்து தேவதூதர் வந்துவிட்டார் என்பதைப்போல பன்னீருக்குப் பன்னீர் தெளிக்கப்படுகிறது. முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு, அலைகடலில் அமைதியாகப் போராடிய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியது மறக்கப்பட்டுவிட்டது. ‘பன்னீர் சப்போர்ட்’ முழக்கம் முளைக்கிறது. கருணாநிதி எந்தக் கேள்வியைக் கேட்டாலும், பதில் சொல்லாமல், ‘இதைக் கேட்பதற்குக் கருணாநிதிக்கு அருகதை இல்லை’ என்ற நாகரிகப் பதிலைத்(?) தந்தவர் பன்னீர்செல்வம். இன்று கருணாநிதியின் மகனைப் பார்த்துச் சிரிக்கிறார். காருக்கு வழிவிடுகிறார். கொடியேற்றுவதைப் பார்க்க வரச் சொல்கிறார் என்றதும் நயத்தக்க மாண்பாளர் ஆகிப்போகிறார் பன்னீர். அவரை ‘அண்ணா’ என்கிறார் பொன்னையன். சமாதியில் படுத்திருக்கும் அண்ணா புரண்டு படுத்திருக்கலாம். டிசம்பர் 4-ம் தேதிகூட `அம்மா ஓய்வெடுக்கிறார்’ என்று சொன்ன பொய்யய்யன் அவர். ‘சசிகலாவைச் சுற்றி ரௌடிகளாக இருக்கிறார்கள்’ என்று மதுசூதனன் சொல்வதைக் கேட்டு, வட சென்னையில் பலருக்கும் ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது.

இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான், ‘அ.தி.மு.க-வின் சொத்தை, ஜெயலலிதாவின் சொத்தை மீட்போம்’ என்கிறார்கள். முதலில் இவர்களிடம் இருந்து தமிழ்நாட்டின் சொத்துகள் மீட்கப்பட வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய் பணம் எடுக்கப்பட்டு, புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் சேகர் ரெட்டியுடன், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் மொட்டை போட்டுக் காட்சியளித்தவர் பன்னீர்செல்வம். மதுரை பி.ஆர்.பி-க்கும் அவருக்குமான தொடர்பு உயரமானது; ஆழமானது. ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் வேண்டாதவர் ஆனதால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் பன்னீருக்கு வைகுண்டராஜன் செய்யும் உதவிகள் இன்னும் வெளிச்சத்துக்கு வராதவை. தனது நாற்காலி ஆடிக்கொண்டிருக்கும்போதே, முறைகேடு காரணமாக ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஞானதேசிகனுக்கும் அதுல் ஆனந்துக்கும் பன்னீர் பதவி வழங்கிய பதற்றத்தின் பின்னணி என்ன? ‘கருணாநிதியுடன் கைகோத்து தி.மு.க ஆட்சியிலும் மிடாஸ் சரக்கை விற்றவர் சசிகலா’ என்று இன்று குற்றம்சாட்டும் நத்தம் விசுவநாதன்தானே அன்று இவர்களுக்குள் மீடியேட்டர்?

இப்படி பன்னீருக்கு நேர்மை முகமூடி போடப்படுகிறது என்றால், சசிகலாவுக்குத் தத்துவார்த்த முகமூடி அணிவிக்கப்படுகிறது.

சூத்திர ஆட்சியைக் காப்பாற்றப் புறப்பட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி. பக்கத்து நாற்காலியில் சுப்பிரமணியன் சுவாமி ஏன் உட்கார்ந்துள்ளார் என்றுகூட அவர் அறியவில்லை. சசிகலா பதவி ஏற்கவில்லை என்றால் சுவாமி தீக்குளித்து விடுவார்போல. சந்திரலேகாவின் முகம் மறந்து போயிற்றா... உயர் நீதிமன்றக் காட்சி மறந்து போயிற்றா? எல்லாவற்றையும் ஒரு ‘புராஜெக்ட்’டாக அவர் எடுத்துச்செய்தால் ஆட்சேபனை இல்லை. மோடியின் பாக்கெட்டில் உட்கார்ந்துகொண்டு இந்தியாவையே மிரட்டுவதுதான் எரிச்சலைத் தருகிறது. ‘தி.மு.க வந்தால் புலி வந்துவிடும்’ என்றாராம் சுவாமி. ம.நடராசன் தஞ்சாவூரில் கட்டியது முள்ளிவாய்க்கால் முற்றமா... முத்தமிழ் மன்றமா? கதர்புலி நெடுமாறனும் கரும்புலி வைகோவும் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் சுவாமி? கறுப்புச் சட்டைக்காரர்களும் தமிழ்த்தேசிய வாதிகளும் சசிகலாவுக்கும் நடராசனுக்கும் பெரும் ஆதரவு காட்டுகிறார்கள். ஆளுநர் மாளிகை என்ற கள்ளவாசல் வழியாக பா.ஜ.க உள்ளே நுழையப் பார்க்கிறது என்பது உண்மைதான். அதற்காக சசிகலா நடத்துவது திராவிட ஆட்சி ஆகிவிடுமா?

சசிகலா இன்னும் கோட்டைக்குள் போக வில்லை. அதற்குள், ‘சசிகலா சொன்னால் கொலையும் செய்வேன்’ என்கிறார் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர். ‘பன்னீர் செல்வத்தின் உடம்பில் கையே இருக்காது’ என்கிறார் இன்னொரு சட்டமன்ற உறுப்பினர். தமிழ்நாட்டில் டி.ஜி.பி இருக்கிறாரா, சென்னைக்கு போலீஸ் கமிஷனர் இருக்கிறாரா, தமிழ்நாட்டுக்கு நிரந்தர முதலமைச்சரும் இல்லை; நிரந்தர ஆளுநரும் இல்லை என்றால், போலீஸ்கூடவா இல்லை?

எட்டு கோடி மக்களின் பிரதிநிதியான தமிழ்நாட்டின் முதலமைச்சர் பன்னீர் செல்வம், ஒரு வீட்டின் அறையில் அவரின் சட்டையைப் பிடித்து இழுத்து மிரட்டப்பட்டுள்ளார். (இதற்கு மேலும் நடந்ததை அவர்தான் சொல்ல வேண்டும்!) ஒரு முதலமைச் சருக்குப் பாதுகாப்பு அதிகாரிகள் ஏழு பேர் உண்டே. அவர்கள் எங்கே போனார்கள்? முதலமைச்சரைப் பாதுகாத்தார்களா... இல்லையா? அவர்கள் மீது வழக்குப் போட வேண்டாமா? சசிகலாவுக்காக வரிந்துகட்டிக்கொண்டு ஜனநாயக நெறிமுறைகள், அரசியல் சட்ட மாண்புகள் பற்றி பக்கம்பக்கமாகப் பேசும் எந்தத் தலைவராவது இதைப் பற்றி கேள்வி எழுப்பினார்களா?

அறுதிப் பெரும்பான்மை தனக்கு இருக்கிறது என்று சசிகலா பட்டியல் கொடுத்திருக்கிறார். தனக்கு ஆதரவான உறுப்பினர் பட்டியலைப் பன்னீரால் தர முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் சசிகலாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்து அவரைப் பெரும்பான்மை நிரூபிக்கச் சொல்லியிருக்க வேண்டும் ஆளுநர் வித்யாசாகர் ராவ். அதை விட்டு விட்டு சென்னைக்கே வராமல் மும்பையில் போய்ப் பதுங்கியதும், சென்னைக்கு வந்த பிறகும் முடிவே சொல்லாமல் (பிப்ரவரி 13-ம் தேதி இரவு வரை) மூச்சுப் பயிற்சியில் உட்கார்ந்திருப்பதும் மத்திய அரசின் உத்தரவால் என்றால், தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றிபெற முடியாது. திருட்டுத்தனமாகவாவது வெற்றி பெறலாம் என்று பா.ஜ.க நினைப்பதாகப் பொருள். ‘ஆளுநர் நியாயமாகத்தான் செயல்படுகிறார்’ என்று தமிழக பா.ஜ.க தலைவர்கள் சொல்கிறார்கள். செயல்படாத ஒருவர் செயல்பட்டதாக அவர்கள் கண்ணுக்கு மட்டும் எப்படித் தெரிகிறது? அவர்களுக்கு இருப்பது ஞானக்கண்ணா? பன்னீரைக் கையில் வைத்திருப்பது, இதன் மூலமாக சசிகலாவை மிரட்டுவது, சசிகலா பணிந்ததும் பன்னீரைக் கழற்றிவிடுவதுதான் பா.ஜ.க-வின் தந்திரம். ஜெயலலிதா இருக்கும்போது அவரது தலைமுடியைக்கூடத் தொட தைரியம் இல்லாதவர்கள், அவர் இறந்ததும் அ.தி.மு.க-வின் மணிமுடியைப் பறிக்கத் திட்டமிடுகிறார்கள்.

இவர்களாவது ஆட்சியில் இருந்துகொண்டு கேவல அரசியல் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி அதிகாரம் இல்லாமலேயே ஆடுகிறது. திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரா, நடராசன் கட்சித் தலைவரா என்ற சந்தேகம் வருகிற அளவுக்குப் பேசுகிறார். அவரும், மூத்த கம்யூனிஸ்ட்டோ ‘முக்குலத்து’ கம்யூனிஸ்ட்டோ தா.பாண்டியனும் இருக்கும் கட்சியை இன்னும் தரைமட்டத்துக்குக் கொண்டுபோகாமல் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிவிடுவதே சாலச்சிறந்தது.

இதில் தி.மு.க எதிலும் ஆர்வம் காட்டாத ‘நல்ல பிள்ளையாக’ ஒதுங்கிவிட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 89 உறுப்பினர்களைக்கொண்ட பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., தமிழ்நாட்டில் கடந்த ஒருவார கால ஜனநாயக நெறிமுறை மீறல்களை வெளிப்படையாகக் கண்டித்து தடுத்திருக்க வேண்டும். இன்று அ.தி.மு.க-வுக்கு நடப்பது நாளை தி.மு.க-வுக்கு நடக்கலாம். யாருக்கும் நடக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்படவிடாமல் முடக்கி வைத்து தலைமைச் செயலாளரையும் டி.ஜி.பி-யையும் போலீஸ் கமிஷனரையும் கிண்டி ராஜ்பவனுக்கு வரவழைத்து ராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார் ‘மகாராஷ்டிரா’ ஆளுநர். அவருக்குத் தமிழ்நாடு ‘சப்ஸ்ட்யூட்’.

‘ஆட்டுக்கு தாடி எதற்கு... மாநிலத்துக்கு ஆளுநர் எதற்கு?’ என்றார் பேரறிஞர் அண்ணா. சின்னத்தம்பிகள் ஆளுநரிடமே போய் மனு கொடுக்கிறார்கள். ‘ஆளுநர் என்றால் தீயணைப்பு வண்டி மாதிரி. சும்மாதான் நிற்கும். தீ பிடித்தால் உடனே அணைக்க வேண்டும்’ என்றார் மூதறிஞர் ராஜாஜி. இங்கே வண்டியே தீ மூட்டுகிறது; பரவட்டும் எனக் காத்திருக்கிறது. எல்லா பிரச்னைகளிலும் தங்களுக்கான ஷேர் என்ன என்று திட்டமிடும் மனிதர்களே தலைவர்களாகிப் போனார்கள். வெட்கம், மகா வெட்கம்! கேவலம்... மகா கேவலம்!

பெங்களூரு சிறையில் சசிகலா என்ன செய்கிறார்?


சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மிகவும் சோர்வான நிலையில் உள்ளார். யாருடனும் பெரிதாக பேசவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014-ம் ஆண்டு இதே வழக்கில் பெங்களூருவில் உள்ள கீழ் நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா உள்பட 3 பேருக்கும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தபோது, ஜெயலலிதா முதல்வராக பதவியில் இருந்ததால், பரப்பன அக்ரஹாரா சிறையில் முதல்வகுப்பு வசதி அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா சிறையில் அனுபவித்த அனைத்து சலுகைகளும் சசிகலா உள்ளிட்டோருக்கும் கிடைத்தது. ஆனால், இந்த முறை சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சிறையில் முதல் வகுப்பு உள்ளிட்ட எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

கடந்த 14-ம் தேதி அன்று சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என்றும், 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

அன்றைய தினம், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இருந்த கூவத்தூர் தனியார் விடுதியில் தங்கிய சசிகலா, தீர்ப்பு வெளியான தினத்தன்று இரவு 11 மணியளவில் போயஸ்கார்டன் திரும்பினார். அடுத்தநாள் அதாவது பிப்ரவரி 15-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து கார் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். அன்றைய தினம் மாலை 5 மணியளவில் நீதிமன்றத்தில் சரண் அடைந்து, சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சசிகலா சிறை சென்றபோது, அவருக்கும், இளவரசிக்கும் சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு அலுமினிய தட்டு, டம்ளர், கைதிகளுக்கான புடவைகள், பெட்ஷீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முன்னதாக, விசாரணை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜரான பின்னர், சிறைக்குச் செல்வதற்காக கர்நாடக போலீஸார் சசிகலாவை காவல்துறை ஜீப்பில் ஏறுமாறு கேட்டுக் கொண்டனர், ஆனால், போலீஸ் ஜீப்பில் ஏறி சிறைக்குச் செல்ல சசிகலா மறுத்து விட்டார். 'எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடந்தே வருகிறேன்' என்று தெரிவித்தாராம்.

ஆடம்பர காரில் வலம் வந்த சசிகலா, சிறை வளாகம் வரை நடந்தே சென்றார். மேலும் சிறைக்குச் சென்றதும், அவரது சார்பில் முதல்வகுப்பு வசதி மற்றும் வீட்டுச் சாப்பாடு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார். மிகுந்த கோபத்துடனும், பதற்றமான மனநிலையிலுமே அன்றைய தினம் காணப்பட்டார் என்று பெங்களூருவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதே தண்டனை பெற்றதால், அவர் பதவியிழக்க நேரிட்டது. மேலும் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டதுடன், ஜாமீன் பெறும் வரை 21 நாட்கள் பெங்களூரு சிறையில் இருந்தார். ஆனால், அவருக்குத் தேவையான வசதிகளை சிறை அதிகாரிகள் செய்து கொடுத்தனர். முதல் வகுப்பு வசதி, வீட்டுச் சாப்பாடு, மின்விசிறி, அன்றாடம் செய்தித்தாள் போன்றவை வழங்கப்பட்டன. இதனால், அந்த வசதிகளை சசிகலாவும் அப்போது அனுபவித்தார். தற்போதும் அதே மாதிரியான வசதிகள் தனக்குக் கிடைக்கும் என்று கருதிய அவருக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது.

முன்னதாக, சசிகலா, இளவரசிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முறை சிறையில் அடைக்கப்பட்ட முதல்நாள் சசிகலா பெரும்பாலான நேரம் தூங்காமல் விழித்தே இருந்தாராம். பத்துக்கு எட்டு அளவுடைய அறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இளவரசியும் உள்ளார், இளவரசியுடன் கூட அவர் பெரிதாக எதுவும் உரையாடவில்லை. வேறு யாருடனும் அவர் பேசிக் கொள்ளவில்லை. தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளைக் கூட அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவர் காட்டவில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். சசிகலாவின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, ஒரு சிறிய கட்டில் அவருக்கு வழங்கப்பட்டது. அடுத்த நாள் காலை அதாவது வியாழக்கிழமை அதிகாலையிலேயே சசிகலா எழுந்து விட்டார்.

காலையில் புளி சாதமும், காபியும் உணவாக வழங்கப்பட்டது. அந்த அறையை விட்டு சசிகலா வெளியே வரவே இல்லை. பெங்களூரு மற்றும் தமிழகத்தில் இருந்து ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறையில் அவரைச் சந்திக்க விரும்பினார்கள். ஆனால், யாரையும் சசிகலா சந்திக்க விரும்பவில்லை என்று சிறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் சசிகலா அமைதியான மனநிலையிலேயே காணப்படுகிறார். யாருடனும் பெரிய அளவில் பேசிக் கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது....

கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம்..! இதுவரை எவ்வளவு கட்டியிருக்கிறார்கள்?
கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம். அதில் தற்போது ரூ.5 லட்சம் மட்டுமே ‘செட்டில்’ செய்யப்பட்டுள்ளதாம். இதற்கிடையே பராமரிப்பு காரணங்களுக்காக ரிசார்ட்டை மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.



கடந்த பத்து நாள்களுக்கு மேலாக தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் குழப்பம் காரணமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் கிராமத்தில் உள்ள 'கோல்டன் பே' ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதை அடுத்தே, ரிசார்ட்டில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து வெளியேறி சென்னை வந்துள்ளனர்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை விடுத்ததால், சபையில் அமளி நிலவியது. கைகலப்பு ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் சபை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றால், எம்.எல்.ஏக்கள் அனைவரும் சொந்த வீடுகளுக்குத் திரும்புவார்கள். இல்லையென்றால், மீண்டும் ஏதாவது ரிசார்ட்டில் தங்க வைக்கப்படலாம் என்ற சூழல் இருந்தது. நடக்கும் களேபரங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த கூவத்தூர் ரிசார்ட் நிர்வாகம், பராமரிப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக ரிசார்ட் மூடப்படுவதாக அறிவித்தது. ரிசார்ட் வாசலில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கேட் இழுத்து மூடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் 3 தனி பஸ்களில் அந்த ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள சொகுசு அறைகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். மூன்று வேளையும் மட்டன், சிக்கன், மீன் என அசைவ விருந்து நடைபெற்றது. எம்.எல்.ஏக்களுக்குத் தேவையான ‘அனைத்து’ வசதிகளும் அங்கேயே கிடைத்தன. அல்லது வரவழைக்கப்பட்டன. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் எம்.எல்.ஏ-க்கள் ரிசார்ட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இரு எம்.எல்.ஏக்கள் தப்பி ஓடினர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ தன் சின்னம்மாவின் இறப்பிற்குக் கூட செல்லவில்லை. அந்தளவுக்கு கெடுபிடிகள்.



இந்தநிலையில் ரிசார்ட் மூடப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பத்து நாள்கள் எம்.எல்.ஏக்கள் அங்கு தங்கியிருந்ததற்கான பில் ரூ..60 லட்சம். இதுவரை ரூ.5 லட்சம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ-க்களுக்கு மூன்று வேளையும் விரும்பியதை சமைத்துப் போடவே ரிசார்ட் தரப்பில் பல லட்சங்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் பேர் வரை ரிசார்ட்டில் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அவ்வளவு பேருக்கு சமைக்கும் அளவுக்கு அங்கு கிச்சன் வசதி இல்லை.

ஆனாலும், வெளியே இருந்து சமையற்காரர்களை அழைத்து வந்து, வளாகத்தில் சாமியானா போட்டு, இடைவெளி இல்லாமல் உணவு சமைக்கப்பட்டுள்ளது. எப்படியும் ‘பில்’ வந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் கேட்டதை எல்லாம் செய்து தந்துள்ளது ரிசார்ட் நிர்வாகம். தற்போது சசிகலாவும் சிறையில் அடைக்கப்பட்டுவிட, ரிசார்ட் உரிமையாளரின் நம்பிக்கை மெல்லமெல்ல பொய்க்கத் தொடங்கியுள்ளது.

இது குறித்து ரிசார்ட் உரிமையாளர் பி.யோகேஷ்வரன் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘எம்.எல்.ஏக்கள் இங்கே தங்கியிருந்ததால், எங்களது வழக்கமான பிசினஸை இழந்தோம். ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கும் அளவுக்கு எங்களிடம் கிச்சன் வசதி கிடையாது. எம்.எல்.ஏக்கள் கேட்டது கிடைக்கும் என்று நம்பி வந்துள்ளனர். ஆனால், எங்களால் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப உணவுகளைத் தயாரிக்க முடியவில்லை. இதற்காக எங்கள் சர்வர்கள் அவர்களிடம் திட்டும் வாங்கியுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்ததும் அனைவரும் போய்விடுவார்கள். எங்களது பில் செட்டில் ஆகுமா என்ற அச்சம் இருக்கிறது’’ என்றார்.



மேலும், இந்த ரிசார்ட்டில் மது வகைகளும் ஸ்டாக் செய்து வைக்கப்படவில்லை. குறிப்பிட்ட அளவு மது பாட்டில்களே ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தது. திடீரென்று எம்.எல்.ஏக்கள் வந்துவிட்டதால், புதுச்சேரியில் இருந்து மதுவகைகள் வரவழைக்கப்பட்டதாக தெரிகிறது. ரிசார்ட்டைச் சுற்றி மூன்று பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் சசிகலா தரப்பு எம்.எல்.ஏக்களை தங்க வைக்க இந்த ரிசார்ட்டை தேர்வு செய்தது.

கடந்த 2011-ம் ஆண்டு யோகேஷ்வரனின் தந்தை ஆர்.பக்தவச்சலம் இந்த ரிசார்ட்டை தொடங்கியுள்ளார். 94 ஏக்கர் நிலத்தில் 6 ஏக்கரில் கட்டடங்கள் இருக்கின்றன. பக்தவச்சலம் ரோட்டரி முன்னாள் கவர்னராக இருந்தவர். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

போர்க்களமானது தமிழக சட்டப்பேரவை! ஆரம்பம் முதல் என்ன நடந்தது?



தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது... எதிரணியில் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரின் நாற்காலி, மைக்கை உடைத்தனர். சட்டப்பேரவை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டதால் தலைமைச் செயலகத்தில் துணை ராணுப்படையினர் குவிக்கப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டது. காலை 9.30 மணி முதல் உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தலைமைச் செயலகத்துக்கு வரத்தொடங்கினர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சட்டப்பேரவைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நேப்பியர் பாலத்துக்கு முன்பே சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர், கோட்டைச் சாலையில் செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.

ஒவ்வொரு வாகனமாக தலைமைச் செயலகத்துக்கு வந்துகொண்டிருந்தது. காலை 10 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் காரில் வந்தனர். அப்போது, அனைத்து வாகனங்களையும் காவல்துறையினர் சோதனை செய்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த மு.க.ஸ்டாலின், கோட்டைக்கு முன்பு உள்ள பிரதான நுழைவு வாயிலுக்கு முன்பே காரை நிறுத்திவிட்டு எம்.எல்.ஏ.க்களுடன் சட்டப்பேரவைக்கு நடந்தே சென்றார். இதன் பிறகு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். மு.க.ஸ்டாலினுடன் வந்த எம்.எல்.ஏ.க்கள், பன்னீர்செல்வத்துடன் வந்த எம்.எல்.ஏ.க்களுடன் சிரித்துக்கொண்டே கைகுலுக்கிக்கொண்டனர். பின்னர் அவர்கள் பேரவைக்குள் சென்றனர்.



காலை 11 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. அப்போது, செம்மலை பேசியபோது அமளி ஏற்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர், "பொறுமையாக இருங்கள். நான் சபையை அமைதியாக நடத்த விரும்புகிறேன்" என்றார். இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அமைதி காத்தனர். பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் தொடங்கிவைத்தார். அப்போது, எதிரணி உறுப்பினர்கள், 'வாக்கெடுப்பு நடத்தக்கூடாது' என்று கோரி அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கிடையே சபாநாயகர், எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களை நிற்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது, ஒவ்வொரு பிளாக்காக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து, ஆதரவு... ஆதரவு என்று கூறினர். மூன்றாவது பிளாக்கில் 33 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் எழுந்து நிற்க முயன்றபோது, அவையில் கடும் அமளி ஏற்பட்டது. "வாக்கெடுப்பு நடத்தக்கூடாது. நாங்கள் இன்னும் பேசவேயில்லை. எப்படி வாக்கெடுப்பு நடத்த அனுமதிப்பது" என்று கூறி எதிரணியினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, தி.மு.க உறுப்பினர் பூங்கோதை, மேஜையின் மீது ஏறி கோஷமிட்டார்.

அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "உறுப்பினர்கள் அனைவரும் தொகுதி மக்களைச் சந்திக்க வேண்டும். 19 நாள்கள் ஏன் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்திருந்தார்கள்" என்று பேசினார். இதற்கு சபாநாயகர், "எந்த எம்.எல்.ஏவும் அடைத்து வைக்கப்படவில்லை. அதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது. நீங்கள் ஆதரவா, எதிர்ப்பா என்பதை மட்டும் இங்கே தெரிவியுங்கள்" என்றார். "இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம், வாக்கெடுப்பை ஒத்திவையுங்கள். இன்னொரு நாள் வாக்கெடுப்பு நடத்துங்கள்" என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.



அடுத்து பேசிய காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் ராமசாமி , "வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயகர், "இது என்னுடைய முடிவு. இன்று காலையில் எடுத்த முடிவு கிடையாது. இரண்டு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அப்போது யாரும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. வாக்கெடுப்பில் கலந்துகொள்கிறோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றுதான் கூறினீர்கள். இப்போது, வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று சொல்கிறீர்கள். இது என்னோட முடிவு" என்றார்.

ஆனாலும், "ரகசிய வாக்கெடுப்புதான் நடத்த வேண்டும்" என்று எதிரணியினர் கூறினர். இந்தக் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததால் அவையில் அமளி நிலவியது. இதனிடையே, எடடிப்பாடிக்கு ஐந்து உறுப்பினர்கள்தான் ஆதரவு தேவை. ஆனால், எதிரணியினர் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரை முற்றுகையிட்டு நாற்காலி மற்றும் மைக்கை உடைத்தனர். அப்போது, நேரம் 12 மணியாக இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை அவர் அவையில் இருக்க மாட்டார். இந்தச் சூழ்நிலையில், அவையை ஒரு மணி வரை ஒத்திவைப்பதாகக் கூறிவிட்டு, சபாநாயகர் அவையில் இருந்து வெளியேறினார். ஒன்று, இரண்டு, மூன்று பிளாக்
வாக்கெடுப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் நான்கு, ஐந்து பிளாக் வாக்கெடுப்பு மட்டும்தான் முடியவேண்டும். அதற்குள் அவை ஒத்திவைக்கப்பட்டது. நான்கு, ஐந்து பிளாக்குகள் பன்னீர் ஆதவுர மற்றும் திமுக உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், தலைமைச் செயலகத்துக்கு துணை ராணுப்படை, அதிவிரைவுப்படையினர் எட்டு வாகனங்களில் வந்து குவிந்துள்ளனர். தொடர்ந்து தலைமைச் செயலக வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.

தி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் செல்லுமா....? - என்ன சொல்கிறது சட்டம்!


தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியிடம், தன் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (18-2-17) காலை 11 மணிக்குத் தொடங்கியது. ஆரம்பித்த முதலே திமுக உறுப்பினர்கள் எடப்பாடிக்கு எதிராக முழக்கமிட்டதால் கூச்சலும் குழப்பமுமாக சென்ற அவையைக் கட்டுப்படுத்த முடியாமல் சபாநாயகர் தனபால் திணறினார்.

இதனைத்தொடர்ந்து தி.மு.க.-வினர் அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையை 1 மணிவரை ஒத்திவைத்தார். பின்னர் கூடிய வாக்கெடுப்பிலும் அவர்கள் அமளியில் ஈடுபட்டதால்... மீண்டும் 3 மணிவரை ஒத்திவைத்தார் சபாநாயகர். மிகப் பதற்றமான நிலை இருந்ததால் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 20 பேர் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.க.-வினர் சட்டப்பேரவையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதைத் தொடர்ந்து, அவைக் காவலர்களால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், மீண்டும் கூடிய அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்ததால்... அவர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த நிலையில், ''தி.மு.க உறுப்பினர்கள் இல்லாமல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அவை செல்லுபடியாகுமா'' என்று மூத்த வழக்கறிஞர் சிராஜிதீனிடம் கேட்டோம். "தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு 110 உறுப்பினர்கள் மட்டும் ஆதரவு தெரிவித்தால்... அது, கேள்விக்குறிதான். சட்டசபை பொதுவாக அமைதியாக நடத்தப்பட வேண்டும். ஆனால், அவர்களுக்கு மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்பதால் அவையை நடக்கவிடாமல் செய்வது தவறு. அப்போது அவர்களை வெளியேற்றிவிட்டு அவை நடத்துவதற்கான உரிமை தனபாலுக்கு உள்ளது. அதேநேரத்தில் தனபால் ஒரு சார்பாக மட்டுமே நடக்கிறார் என்ற புகாரை தி.மு.க உறுப்பினர்கள் கொண்டுவந்து சபாநாயகரை மாற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால், அவையை நடத்தவிடாமல் முடக்கும் வேலையைச் செய்யும்போது நடத்தப்படும் வாக்கெடுப்பு செல்லும். இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் அவை ஏற்றுக்கொள்ளலாம்" என்றார்.

சிறையில் சசிகலா 'மகிழ்ச்சி'




தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபித்து விட்டத்தகவல் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் ரஜினி ஸ்டைலில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது. முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து அ.தி.மு.க. சட்டசபைத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் ஏற்பட்டது. சசிகலா, பன்னீர்செல்வம் என்ற இரண்டு அதிகார மையங்கள் உருவாகின. இந்த சூழ்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபித்து முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டார். சட்டசபையில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் வெற்றியைக் கேட்ட சசிகலா 'மகிழ்ச்சி' என்று ரஜினி ஸ்டைலில் தெரிவித்துள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அழிக்க நினைத்தவர்கள் இன்று..! பன்னீர்செல்வத்தை விளாசும் முதல்வர் பழனிசாமி!




தி.மு.க.வுடன் கூடிக்குலாவி இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வத்தை கடுமையாக சாடியுள்ளார்.

சட்டமன்றத்தை முடக்கி ரகளை செய்து வாக்கெடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு திமுக உறுப்பினர்கள் வந்தார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. அராஜகத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் மீது சபாநாயகர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் என்று நிரூபித்திக்கிறார்கள். இந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தி.மு.க.வுடன் கூடிக்குலாவி இருக்கும் காட்சி சட்டமன்றத்திலேயே அனைத்து தொலைக்காட்சியிலும் வந்துள்ளது. ஜெயலலிதாவின் தீர்ப்பு பற்றி திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கடுமையாக விமர்சனம் செய்தபோது, இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒருவர் கூட எதிர்த்துப் பேசவில்லை. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவோம். எங்கள் பொதுச் செயலாளர் சசிகலா எடுத்த சபதம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக குடிநீர் பிரச்னை முழுவதுமாக தீர்க்கப்பட வேண்டும். 140 ஆண்டுகால வறட்சி தமிழகத்தில் நிலவி வருகிறது. பருவமழை போதிய அளவு பெய்யாத காரணத்தினால் நீர்நிலைகள் எல்லாம் வறண்டு கிடக்கிற காரணத்தினால் குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று கூறினார்

அமளிதுமளி சட்டமன்றம்... 1988-லும் 2017-லும் என்ன நடந்தது?



தமிழகத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று கூடியிருந்த சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். சட்டசபையில் இன்று நடந்த களேபரம்போல் அன்று நடந்தது என்ன? அங்கு, அன்றும் இன்றும் நடந்த சம்பவங்கள் இதோ...

சட்டசபை அன்று...



*அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் காலத்தில் ஜெயலலிதா மற்றும் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் இருந்த கோஷ்டிப்பூசல், 24-12-1987-க்குப் பிறகு... எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் உச்சகட்டமடைந்தது.

*தற்காலிக முதல்வராக பதவியேற்ற நெடுஞ்செழியன், 28-12-1987 அன்று முதலமைச்சர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

*31-12-1987 அன்று, அ.தி.மு.க-வில் உள்ள பெரும்பான்மை நிர்வாகிகள் வற்புறுத்தலினால்.... முதலமைச்சர் பொறுப்புக்கு, தான் போட்டியிடப்போவதாக எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையார் அறிவித்தார்.

*ஜானகி அம்மையார் சார்பில் கவர்னர் குரானாவிடம் தங்களுக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார் ஆர்.எம்.வீரப்பன்.

*அதிருப்தியில் இருந்த நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் நிர்வாகிகள் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை தேர்வு செய்ததாக அறிவித்தனர். இதை, ஜானகி அணி ஏற்கவில்லை.

*ஜெயலலிதா அணியில் 29 எம்.எல்.ஏ-க்கள் இடம்பெற்றிருந்தனர்.

*அ.தி.மு.க-வின் 97 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக்கடிதம் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டது.

*தொடர்ந்து ஆட்சியமைக்க ஜானகிக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர் குரானா.

*இடைக்கால முதல்வர் பதவியை இழந்தார் நெடுஞ்செழியன்.

*6-1-1988 அன்று ஜானகி மந்திரிசபை பதவியேற்பு. 25-ம் தேதி கவர்னர் உரையும் அதைத் தொடர்ந்து 28-ம் தேதி ஜானகி அணி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என கவர்னர் அறிவிப்பு செய்தார்.

*முன்னதாக தனது அணியின் 29 எம்.எல்.ஏ-க்கள் ஜானகி அணிக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை ரகசிய இடத்தில் தங்கவைத்தனர் ஜெயலலிதா அணியினர். கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தனக்குச் சொந்தமான மில்லில் எம்.எல்.ஏ-க்களை அடைத்துவைத்திருப்பதாக புகார் எழுந்தது.

*இதற்கிடையே டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது அணியை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார் ஜெயலலிதா. ஆனால் ஒன்றுபட்ட அ.தி.மு.க-வுக்கே மட்டும் தாங்கள் ஆதரவு அளிக்கமுடியும் என ராஜீவ் மறுப்பு தெரிவித்தார்.

*28-ம் தேதி இரு கோஷ்டிகளும் பலப்பரீட்சைக்குத் தயாராகி சட்டசபைக்கு வந்தனர். பரபரப்பான எதிர்பார்ப்புகளுக்கிடையில் சபாநாயகர் கூட்டத்தைத் தொடங்கினார். அப்போது இரு தரப்பிலும் பேச்சு வலுத்து அடிதடியானது. சட்டசபையில் அதுவரையில்லாத அளவுக்கு கலவரம் மூண்டது. இருதரப்பிலும் மோசமாக மோதிக்கொண்டனர். ஒலிபெருக்கிகள் ஆயுதங்களாகின. எதிர்பாராதவிதமாக சோடாபாட்டில்கள் வீசப்பட்டன. ஒரு போர்க்களம் போன்று சட்டசபை காணப்பட்டது.

*அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் போர்வையில் வந்த சில அடியாட்கள் பெரும் வன்முறையை அங்கு நிகழ்த்தினர். இருதரப்பிலும் எம்.எல்.ஏ-க்கள் பலருக்கும் மண்டை உடைந்தது. இருக்கைகளில் ஆங்காங்கே ரத்தம் வழிந்துகிடந்தது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கட்சித்தாவிய 33 எம்.எல்.ஏ-க்களை பதவிநீக்கம் செய்வதாகவும் ஜானகி அம்மையார் கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறுவதாகவும் தலையில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தபடி அறிவித்தார் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன்.

*ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சட்டமன்றத்தில் நடந்த கலவரத்தின் எதிரொலியாக ஜானகி அம்மையார் மந்திரிசபையை 30-1-1988 அன்று மத்திய அரசு கலைத்தது. தமிழகத்தில் கவர்னர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

*தொடர்ந்து ஏறத்தாழ ஒரு வருடம் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி தொடர்ந்தது.



சட்டசபை இன்று....

*அ.தி.மு.க-வில் தற்போது ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றோர் அணியும் மோதி வருகின்றன. இந்த நிலையில், சசிகலா தரப்பு கட்டாயப்படுத்தி வாங்கிய பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தால் ஆளுநரிடம் ஆட்சியமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

*சசிகலாவும், பன்னீர்செல்வமும் தனித்தனியாக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதன் பிறகு சசிகலா அணியில் இருந்த சில எம்.எல்.ஏ-க்களும், எம்.பி-க்களும் பன்னீர்செல்வம் அணிக்குத் தாவினர். இதனால், தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை... கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அடைத்துவைத்தார்.

*அந்தக் கட்சி நிர்வாகிகளால் தற்காலிகப் பொதுச் செயலாளாராக நியமிக்கப்பட்டிருந்த சசிகலா, ''நான் முதல்வராவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது'' என்று சபதமிட்டார். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

*இதனையடுத்து, சசிகலா, சிறைக்குச் செல்வதற்கு முன் கூவத்தூரிலிருந்த எம்.எல்.ஏ-க்களிடம் கலந்தாலோசித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டதுடன், அவரை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

*தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் கவர்னர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து... ஆட்சியமைக்க உரிமை கோரினார், எடப்பாடி பழனிசாமி. அதனால், அவருக்கு ஆளுநர் ஆதரவளித்ததுடன் கடந்த 16-ம் தேதி பதவிப் பிரமாணமும் செய்துவைத்தார். அவருடன், அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதனையடுத்து, ''15 நாட்களுக்குள் தங்களுடைய பெரும்பான்மையைக் காட்ட வேண்டும்'' என்று எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் உத்தரவிட்டார்.

*இந்த நிலையில், பெரும்பான்மையைக் காட்டுவதற்காக சட்டசபைக்கு இன்று (18-2-17) எம்.எல்.ஏ-க்கள் (அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ்) சென்றனர். இறந்துபோனதால் ஜெயலலிதா, உடல்நலமில்லாததால் கருணாநிதி, யாருக்கும் வாக்களிக்க விரும்பாததால் அருண்குமார் போன்றவர்களைத் தவிர, மற்ற எம்.எல்.ஏ-க்கள் இதில் கலந்துகொண்டனர்.

*காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தி.மு.க., காங்கிரஸ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார்.

*இதனால், சபாநாயகர் தனபாலை தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சூழ்ந்துகொண்டு அமளியில் ஈடுபட்டனர். மைக், இருக்கை முதலியன உடைக்கப்பட்டன. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மிகவும் அமைதியாகவே இருந்தனர்.

*சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டதால், சபாநாயகர் வாக்கெடுப்பை 1 மணிக்கு ஒத்திவைத்தார். அந்த நேரத்தில் சபை ஊழியர் ஒருவர் மயக்கமடைந்தால், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

*பின்னர் 1 மணிக்குக் கூடிய வாக்கெடுப்பில், சபாநாயகர் தனபால்... அமளியில் ஈடுபட்ட தி.மு.க-வினரை வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், அவர்கள் கலைந்துசெல்லாமல் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர்... வாக்கெடுப்பை 3 மணிக்கு ஒத்திவைத்தார்.

*பின்னர் 3 மணிக்குக் கூடிய வாக்கெடுப்பில், தி.மு.க-வினர் சட்டசபையிலிருந்து வெளியேறாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவைக் காவலர்களுக்கும், தி.மு.க-வினருக்கும் மோதல் ஏற்பட்டது. தி.மு.க-வினரை வெளியேற்றியபோது... எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், ''தன் சட்டையைக் காவலர்கள் கிழித்துவிட்டதாக''த் தெரிவித்தார்.

*தி.மு.க வெளியேறிய பின் நடந்த வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக தன் பெரும்பான்மையை நிரூபித்தார் எடப்பாடி பழனிசாமி. பன்னீர்செல்வத்துக்கு 11 வாக்குகள் கிடைத்தது.

பழனிசாமிக்கு வாக்களித்த எம்.எல்.ஏக்களே..! பன்னீர்செல்வம் ஆவேசம்



முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், “சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை ஜனநாயக மரபுக்கு விரோதமாக வெளியேற்றியுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக வாக்களிக்கும்போது மிகப்பெரிய மாற்றம் வரும். தர்மம் வெல்ல இன்னும் காலம் இருக்கிறது. நாங்கள் சபாநாயகரைச் சந்தித்து இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தோம்.

ஒன்று, 15 நாள்களாக அடைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களை தொகுதிக்கு அனுப்பிவையுங்கள். ஒரு வாரம் கழித்து சட்டப்பேரவை கூட்டுங்கள் என்றோம். வாக்காளர்களைச் சந்தித்துவிட்டு மீண்டும் வந்த பிறகு சட்டப்பேரவையைக் கூட்டுங்கள். அதன் பிறகு அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும் என்றோம்.

இரண்டாவது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றோம். எவ்வளவோ வலியுறுத்தினோம். சபாநாயகர் ஒத்துக்கொள்ளவில்லை.

ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு எதிராக வாக்களித்துள்ள எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்கு சென்று மக்களைச் சந்திக்கும்போது கேள்வி கேட்கப்படும். எந்தக் குடும்பத்தை ஜெயலலிதா ஒதுக்கிவைத்தாரோ, இந்தக் குடும்பத்தின் ஆட்சி தற்போது வெற்றி பெற்றுள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமையும்” என்றார்.

Friday, February 17, 2017

'இனிஷியல்' ஏற்படுத்திய குழப்பத்தால் 'சஸ்பெண்ட்' வி.ஏ.ஓ.,வுக்கு மறுவாழ்வு

மதுரை: 'இனிஷியல் குழப்பத்தால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, வி.ஏ.ஓ.,வுக்கு பணப் பலன்கள் வழங்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தஞ்சாவூர், திருவிசைநல்லுார் சி.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு: வி.ஏ.ஓ., பணியில், 1984ல் சேர்ந்தேன். பண்டார வடையில் ஜி.ராஜேந்திரன், திருவிசைநல்லுாரில் நானும் வி.ஏ.ஓ.,க்களாக பணி புரிந்தோம். ஒருவரின் சொத்து தொடர்பான, பட்டா ஆவணத்தை திருத்தம் செய்த தாக, ஜி.ராஜேந்திரன் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், 2014ல் மோசடி வழக்கு பதிவு செய்தனர். நான், 2016 ஆக., 31ல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், ஜி.ராஜேந்திரனுக்கு பதிலாக, தவறுதலாக என்னை, 'சஸ்பெண்ட்' செய்து, கும்பகோணம் உதவி ஆட்சியர் உத்தரவிட்டார்.




அந்த உத்தரவை ரத்து செய்து, ஓய்வு பெற அனுமதித்து, பணப் பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுதாக்கல் செய்திருந்தார். நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். கும்பகோணம் உதவி ஆட்சியர் ஆஜராகி, ''மனுதாரர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு, 2016 அக்., 22ல் திரும்பப் பெறப்பட்டு, ஓய்வு பெற அனுமதித்து உள்ளோம்,'' என்றார். நீதிபதி: மனுதாரர், 32 ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். சிறந்த பணிக்கான விருதுகளை, மூன்று முறை பெற்று உள்ளார். பெயரின் துவக்கத்திலுள்ள, 'இனிஷியல்' ('ஜி'க்கு பதிலாக 'சி') குழப்பத்தால் சஸ்பெண்ட் உத்தரவு, மனுதாரரை மட்டுமின்றி அவரை சார்ந்தவர்களையும் பாதித்துள்ளது.




'இனிஷியல்' பிரச்னை யால் மனுதாரர் ஓய்வு பெறுவது தடைபட்டுள்ளது. மனுதாரருக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற்று, ஓய்வு பெற அனுமதித்துள்ளதாக உதவி ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால், இவ்வழக்கில் மேலும் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை.மனுதாரருக்கு இதுவரை, ஓய்வு பலன்கள் அனுமதிக்காமல் இருந்தால், அதை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என, இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.
குமாரசாமி தீர்ப்பின் ஓட்டைகளை புட்டுப்புட்டு வைத்த ஆச்சார்யா

தமிழக முதல்வராக, 1991 - 96ல், ஜெயலலிதா பதவி வகித்தார். அப்போது, அவரும், தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், 66.65 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்தது. ஜெயலலிதா, சசிகலா பெயர்களில், 1991ல் இருந்த சொத்துக்களின் மதிப்பு, 2.01 கோடி ரூபாய். 1991 ஜூலைக்கு பின், சொத்து குவிப்பு துவங்கியது.ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி பெயர்களில், 32 நிறுவனங்கள் துவங்கப்பட்டன.

 1996ல் நடந்த தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது.அதை தொடர்ந்து, நான்கு பேர் மீதும், ஊழல் தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளில், வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில், சென்னை தனி நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.வழக்கை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விசாரித்தார். வழக்கின் முடிவில், நான்கு பேரும் சேர்ந்து சேர்த்த சொத்துக்களில், 53.60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு, திருப்திகரமான கணக்கு காட்ட முடியவில்லை என, முடிவு செய்யப்பட்டது

.நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுக்கள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை; ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய் அபராதம்; சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு, தலா, 10 கோடி ரூபாய் அபராதத்தை, சிறப்பு நீதிமன்றம் விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விசாரித்தார். அவரது கணக்குப்படி, மொத்த சொத்துக்களின் மதிப்பு, 37.59 கோடி ரூபாய்; வருமானமாக கிடைத்தது, 34.76 கோடி ரூபாய்; சொத்து மதிப்பில் இருந்து, வருமானத்தை கழித்தால், 2.83 கோடி ரூபாய் தான் வருகிறது. மொத்த வருமானத்தை கணக்கிடும் போது, இந்த 2.83 கோடி ரூபாய் மதிப்பு என்பது, 8.12 சதவீதம் தான். வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களின் மதிப்பு, 10 சதவீதத்துக்கு உட்பட்டு இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யலாம் என்கிற, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி, அனைவரையும் விடுதலை செய்தார்.

 நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் தரப்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை, நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமிதவ் ராய் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கணக்கு பிழையை சுட்டிக்காட்டினார். அதுகுறித்த அட்டவணையையும், தாக்கல் செய்தார். 

அவரின் வாதம் விபரம்: 

● வருமானமாக கருதி, கடன் தொகையை கூட்டும் போது, 13.50 கோடி ரூபாயில், கணக்கு பிழை ஏற்பட்டுள்ளது; அந்த கணக்கு பிழையை சரி செய்தாலே, சொத்தின் மதிப்பு, 16.32 கோடியாகி விடும்; அதாவது, 76.7 சதவீதம். உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது போல், 8.12 சதவீதம் அல்ல● கட்டுமான செலவாக, 8.60 கோடி ரூபாய் செலவானது என, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்; ஆனால், உயர் நீதிமன்றம், 5.10 கோடி ரூபாய் என கணக்கிட்டு, 3.50 கோடி ரூபாயை குறைத்துள்ளது● ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மூலம், 1.15 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக, குற்றம் சாட்டப்பட்டவர்களே தெரிவித்துள்ளனர். ஆனால், உயர் நீதிமன்றமோ, நான்கு கோடி ரூபாய் வருமானம் என, அவர்கள் ஒப்புக் கொண்ட தொகைக்கும் அதிகமாக கணக்கு போட்டு உள்ளது●

 ஜெயலலிதா பெற்ற பரிசுப் பொருட்களை, சட்டப்பூர்வ வருமானமாக ஏற்க முடியாது என, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், பரிசுப் பொருட்களை வருமானமாக, உயர் நீதிமன்றம் எடுத்து கொண்டு உள்ளது. மேற்கூறிய விஷயங்களை சரி செய்தால், வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 

35.73 கோடி; வருமானத்தை கணக்கிட்டால், 16.92 கோடி ரூபாய். சதவீத கணக்குப்படி பார்த்தால், 211 சதவீதம். எனவே, இந்த நடவடிக்கை மட்டுமே, நான்கு பேருக்கும் தண்டனை விதிப்பதற்கு போதுமானது.இவையே, கர்நாடக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில், ஆச்சார்யா முன்வைத்த வாதங்கள்.
சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்பு

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, வருமான வரி கட்டுவதற்கான ஆவணங்களை காட்டினால், அவருக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

பெங்களூரு சிறையில்..

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றிருக்கும் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாதாரண அறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர், வருமான வரி கட்டுவதற்கான ஆவணங்களை காட்டினால் முதல் வகுப்பு அறைக்கு மாற வாய்ப்பு உள்ளது.

வசதிகள்:

முதல் வகுப்பு அறையில் மின்விசிறி, படுக்கை, தனிக்கழிவறை வசதி உண்டு. தினமும் 2 செய்தித்தாள்கள் வழங்கப்படும். வாரத்துக்கு இரு முறை அசைவ உணவு உண்டு. காலை உணவாக சப்பாத்தியும், அரை லிட்டர் சாம்பார் மற்றும் கால் லிட்டர் தயிர் கிடைக்கும். மதிய உணவாக சாதம், சப்பாத்தி, ராகி கிடைக்கும். இதில் பிடித்தமான ஒன்றை அவர் தேர்வு செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்படும்.
சட்டசபையில் நாளை ஓட்டெடுப்பு எப்படி?
சென்னை : தமிழக சட்டசபையில், 'எண்ணி கழித்தல்' என்ற முறையில், நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.

நம்பிக்கை ஓட்டெடுப்பு முறை :

நம்பிக்கை ஓட்டெடுப்பு எவ்வாறு நடைபெறும் என, சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது: சட்டசபை கூடியதும், முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி, தன் அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிவார். அதன் மீது, சட்டசபை கட்சி தலைவர்கள் பேச வாய்ப்பு கேட்டால், வாய்ப்பு அளிக்கப்படும். பின், ஓட்டெடுப்பு துவங்கும்.
சபையில், ஆறு பிளாக்குகள் உள்ளன. ஒவ்வொரு பிளாக் வாரியாக, ஓட்டெடுப்பு நடக்கும். அந்த பிளாக்கில் உள்ள, எம்.எல்.ஏ.,க்களில், தீர்மானத்தை ஆதரிப்போரை எழுந்து நிற்கும்படி, சபாநாயகர் உத்தரவிடுவார். அவ்வாறு எழுந்து நிற்கும், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை கணக்கிடப்படும். பின் எதிர்ப்பு தெரிவிக்கும்; நடுநிலை வகிக்கும் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை கணக்கிடப்படும். இவ்வாறு, ஆறு பிளாக்கிலும், ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
தற்போது, 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகர் தவிர, மீதமுள்ள, 232 எம்.எல்.ஏ.,க்களில், 117 எம்.எல்.ஏ.,க்கள் தீர்மானத்தை ஆதரித்தால், அரசு பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்படும். அந்த எண்ணிக்கைக்கு குறைந்தால், ஆட்சி கவிழும். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -

சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்? - சிறைத்துறை நிர்வாகம் விளக்கம்

Return to frontpage

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்படும் என சிறைத் துறை நிர்வாகத்திடம் விசாரித்த போது, “கடந்த முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்த வி.வி.ஐ.பி. என்பதால் வெளியில் இருந்து உணவு, மருந்துகள், உடை,ஏ.சி.வசதி, உதவியாளர்கள் உள்ளிட்ட பல வசதிகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் மட்டுமே. முதல்வர் இல்லை என்பதால் அவருக்கு அத்தகைய வசதிகள் வழங்கப்படாது.

சசிகலா தரப்பில் தங்களுக்கு நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருப்பதால் சிறையில் தனியாக ஏசி வசதியுடன் அறை, டிவி, செய்தித்தாள்கள், மேற்கத்திய ஸ்டைல் டாய்லெட், வெந்நீர், மினரல் வாட்டர், மருத்துவ வசதி, வெளியில் இருந்து உணவு, உடை, மருந்துகள் உள்ளிட்டவை கொண்டுவர அனுமதி கேட்டனர். இதில் பல வசதிகளுக்கு நீதிபதி அனுமதி மறுத்துவிட்டார்.
வருமான வரி செலுத்துபவர் என்பதால் ஏ- கிளாஸ் எனப்படும் முதல் வகை சிறை வசதி வழங்கப்படுகிறது. அதன்படி மின்விசிறியுடன் கூடிய அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் டிவி, மேற்கத்திய ஸ்டைல் டாய்லெட், வெந்நீர், மினரல் வாட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்.
மருந்து, உணவு மற்றும் உடைகளும் சிறைத்துறையே வழங்கும். சசிகலா அறையிலே இளவரசியும் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 3 நீல நிற சேலை, 1 தட்டு, 1 சொம்பு, 1 நாற்காலி, 1 கட்டில் மெத்தை, தலையணை, படுக்கை விரிப்பு, போர்வை, பூஜை செய்ய சாமி படம் உள்ளிட்டவை வழங்கப்படும்.

சிறைத் துறையின் நேர விதிமுறைப்படி, காலை 6.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படும். காலை 11.30 மணிக்கு மதிய உணவும், மாலை 4 மணிக்கு டீ அல்லது காபியும், மாலை 6.30 மணிக்கு இரவு சாப்பாடும் வழங்கப்படும். தாமதமாக வருவோருக்கு உணவு வழங்கப்படாது. தேவையெனில் உணவை வாங்கி வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் உண்ணலாம்.

பெங்களூரு சிறையை பொருத்தவரை பெண்களுக்கு மூன்று வகையான‌ வேலைகள் வழங்கப்படுகின்றன. எனவே சசிகலா,இளவரசிக்கு ஊதுவத்தி உருட்டுவது, மெழுகுவர்த்தி செய்வது, தோட்ட மற்றும் சமையல் பணி செய்வது போன்ற பணிகள் வழங்கப்படும். இருவரும் வயதானவர்கள் என்பதால் மெழுகுவர்த்தி செய்யும் பணி ஒதுக்கப்படலாம். இதற்காக நாளொன்றுக்கு கூலியாக ரூ. 50 வழங்கப்படும். இது பணமாக அல்லாமல் கூப்பனாக வழங்கப்படும். அதனை வைத்து சசிகலா தனக்கு தேவையான பிரஷ், பேஸ்ட், சோப், பேக்கரி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். சிறை தண்டனை காலம் முடிவடைந்த பிறகு செய்த வேலைக்கு தக்க கூலி பணமாக‌ கொடுக்கப்படும்''என்றனர்.

4 ஆண்டு தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சுமார் 6 மாதம் வரையே இதுவரை தண்டனை பெற்றுள்ளனர். எனவே மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு மற்றும் சீராய்வு மனுதாக்கல் செய்தாலும் சிறையில் இருந்து வெளியில் வருவது கடினமான ஒன்று என தெரிகிறது. எனவே ஏதாவது ஒரு முக்கிய பணிக்காக மட்டும் சில நாட்கள் பரோலில் வெளியில் வர முடியும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா: காலையில் புளிசாதம், மதியம் களி, இரவில் சப்பாத்தி

இரா.வினோத்
Return to frontpage

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் கடந்த புதன்கிழமை அடைக்கப்பட்டார். ரூ. 10 லட்சத் துக்கு அதிகமாக வருமான வரி செலுத்தும் தனக்கு ஏசி, தொலைக் காட்சி, வீட்டு சாப்பாடு உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய சிறப்பு அறை ஒதுக்க வேண்டும் என கோரினார். ஆனால் நீதிபதி அதனை ஏற்க மறுத்து, சிறைத்துறை நிர்வாகம் அளிக்கும் வசதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் சசிகலாவின் முதல் நாள் சிறைவாசம் எவ்வாறு இருந்தது என பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “கடந்த 2014-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சசிகலா அடைக்கப்பட்டு இருந்ததால் பல வசதிகள் கிடைத்தன. இந்த முறை எதுவும் செய்யப்படவில்லை.

வருமான வரி செலுத்துவதற் கான ஆவணங்களை தாக்கல் செய்ததால் சில வசதிகளுடன் கூடிய மகளிர் சிறையில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறையில் மற்ற பெண் கைதிகளுக்கு வழங்கப் படும் சீருடையான நீல நிற கறை கொண்ட‌ வெள்ளைப் புடவை சசிகலாவுக்கு வழங்கப்பட்டது. அவர் ஏற்கெனவே அணிந்து வந்த அணிகலன்கள், உடைகள் ஆகியவை பெறப்பட்டு சிறை காப்பகத்தில் வைக்கப்பட்டது.

வீட்டு சாப்பாடு, வெளி மருந்து ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப் பட்டதால் சிறை மருத்துவமனையை சேர்ந்தவர்கள் சசிகலாவுக்கு நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்கினர். இதையடுத்து நேற்று காலை 6.30 மணிக்கு காலை உணவாக புளிச்சோறு வழங்கப் பட்டது. காலை 11.30 மணிக்கு மதிய உணவாக கேழ்வரகு களியுடன் கூடிய சோறு, குழம்பு, மோர் ஆகியவை வழங்கப்பட்டது. இதே போல மாலை 4 மணிக்கு காபி வழங்கப்பட்ட நிலையில், 6.30 மணிக்கு இரவு உணவாக சப்பாத்தி மற்றும் காய்கறி கூட்டு வழங்கப்பட்டது.

இந்த உணவை எல்லோரையும் போல வரிசையில் நின்று சசிகலா பெற்றுக்கொண்டார். மாலையில் வெள்ளை சேலையில் சிறை வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நடைப்பயிற்சி மேற் கொண்டார். தற்போது பெங்களூரு வில் இரவில் கடுங்குளிர் நிலவுவ தால் சசிகலாவுக்கு கூடுதலாக 2 தரை விரிப்புகளும், 2 போர்வைகளும் வழங்கப்பட்டுள்ளன.

சிறைக்கு வந்த முதல் நாள் என்பதால் சசிகலா எந்த வேலையும் செய்யவில்லை. அவருக்கென்று பிரத்தியேகமாக சலுகைகளும், உதவிகளும் வழங்கப்படவில்லை. சசிகலாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூடுதலாக 2 பெண் காவல் கண்காணிப்பாளர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கு தியானம், யோகா செய்யும் வகை யில் தனி அறை வழங்கப் படவில்லை'' என்றனர்.

கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்க வைப்பு? - சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள்


முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் செங்கோட்டை யன் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா வில் கலந்து கொள்ளாமல் கூவத்தூர் விடுதியிலேயே தங்கியதாக அதிமுக வட்டாரங் களில் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக் கம் அடுத்த கூவத்தூரில் கடற் கரையோரம் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பின ரால் கடந்த 8 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலை யில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதை அடுத்து, முதலமைச்சராக எடப்பாடி பழனி சாமி பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், எடப்பாடி பழனி சாமி முதல்வராகவும், அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்வு செய்யப் பட்டதற்கு, கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த எம்எல்ஏக்கள் மத்தி யில் அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், 18 எம்எல்ஏக்கள் மட்டும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படாமல் விடுதியில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அனைத்து எம்எல்ஏக்களும் சென்னை சென்ற பின்னரும் கூட, கூவத்தூர் விடுதியின் உள்ளே செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. எம்எல்ஏக் கள் அனைவரும் சென்னை சென்று விட்டதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் கூறி னர். எனினும், பெண் எம்எல்ஏக் களின் கணவர்கள் அவர்களுக்கு தேவையான உடமைகளை விடுதிக் குள் எடுத்து சென்றனர்.

அமைச்சராக பதவியேற்றுள்ள செங்கோட்டையன் கட்சிக்கு நீண்ட காலமாக பெரும் விசுவாசமாகவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்றவராக விளங்கினாலும், துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியுடன் பதவியேற்றதாக அவரது ஆதரவா ளர் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சிக்கல் ஏற்படும் நிலை

பதவியேற்ற பிறகு கூவத்தூர் வந்த செங்கோட்டையன், செய்தி யாளர்களைச் சந்தித்தபோது, எந்த விதமான மகிழ்ச்சியையும் வெளிப் படுத்தாமல் மவுனமாக விடுதியின் உள்ளே சென்றார். முதல்வர் மற்றும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்ப தில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளதாக அதிமுக வட்டாரங் களில் கூறப்படுகிறது. இதனி டையே, முதல்வர் மற்றும் செங் கோட்டையன் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றியை பாதிக்கும் பதற்றத்தை தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
'பதறிய காரியம் சிதறிப்போகும்' என்பார்கள். எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம், பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது எட்டாக்கனி.




‘உயர் அதிகாரி சொல்லிவிட்டாரே... வேலையை செய்து முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே... ‘இப்படியெல்லாம் நினைத்து பயத்துடன் ஒரு வேலையைச் செய்வார்கள் சிலர். அப்படி அந்த வேலையைச் செய்தால் கிடைக்கவேண்டிய ‘அவுட்புட்’ கண்டிப்பாகக் கிடைக்காது. மாறாக, கூடுதல் டென்ஷனும், ஓர் அச்ச உணர்வும்தான் தொற்றிக்கொள்ளும்.

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கிற இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழல், நம்மை எந்நேரமும் பயத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்திவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த இடத்தில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் சொன்ன ஒரு குட்டிக்கதை...

கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். மாணவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வகுப்பறைக்குள் நுழைந்தாலே போதும்... மாணவர்களிம் பயம் தொற்றிக்கொள்ளும். `இன்று என்ன கேள்வி கேட்பாரோ... யாரைக் கேட்கப் போகிறாறோ...’ என்று பதைபதைப்போடு காத்திருப்பார்கள். இதை அந்த ஆசிரியரும் உணர்ந்துதான் இருந்தார். இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.

அன்றையக்கு வகுப்பறைக்குள் நுழைந்தவர், நேராகக் கரும்பலகையின் அருகே சென்றார். ஒரு சாக்பீஸால், ‘9-18-36’ என எண்களை எழுதினார். பிறகு மாணவர்களைப் பார்த்தார்.

“இதற்கு விடை என்ன?” என்று கேட்டார். அதோடு, "இதை நன்றாகப் புரிந்துகொண்டு பிறகு பதிலைச் சொல்லுங்கள். சந்தேகம் ஏதாவது இருந்தால் என்னிடம் விளக்கம் கேட்டுவிட்டுக்கூட பதில் சொல்லலாம்’’ என்றார்.

அவசரக் குடுக்கையாக ஒரு மாணவன் எழுந்தான். "இந்த எண்களை எல்லாம் கூட்டினால் 63 வருகிறது சார்...’’ என்றான்.

“தவறு.’’

“அப்படியென்றால், விடை 45 சார். 36 + 18 - 9 = 45” என்றான் மற்றொரு மாணவன்.

“இரண்டுமே தவறு. வேறு யாராவது பதில் சொல்கிறீர்களா?’’

மாணவர்கள் மத்தியில் சலசலப்பில்லை.

“இது என்னுடைய தொலைப்பேசி எண்ணின் முதல் பாதி, என்னுடைய தொலைபேசி எண்ணை நீங்கள் நினைவில் வைத்திருக்கிற்களா. என்று சோதிப்பதற்காகவே நான் அப்படிக் கேட்டேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“நான் கணக்கு வாத்தியார் என்றாலே, கணக்குதான் சொல்லித்தர வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள். அதனால்தான் உங்கள் பதில் கணிதத்தைச் சுற்றியே இருந்தது. எதற்காகக் கேட்கிறேன். என்பதைப் புரிந்துகொள்வதற்குக்கூட நீங்கள் தயாராக இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் பதற்றம். ஆக, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உடனே முடிவெடுக்காதீர்கள். அது என்ன, எப்படி, ஏன் என்பதையெல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, சந்தேகம் இருந்தால் தெளிவாகக் கேட்டுத் தெரிந்த பிறகு முடிவெடுங்கள்’’ என்றார்.
இந்தச் சிறிய நிகழ்விலிருந்து இரண்டு விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.







ஒன்று, அவசரப்படுவதால் நமக்குக் கிடைக்கவேண்டிய பெரிய அங்கீகாரம்கூட சில நேரங்களில் நம் கையைவிட்டு நழுவிப் போகலாம்.

மற்றொன்று, ஒருவரைப் பற்றி, முழுமையான புரிதல் இன்றி, முந்திக்கொண்டு அவர் குறித்து முடிவெடுக்காதீர்கள். அது நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நாம் அவர்களை புரிந்துகொள்ளாதபோது, அவர்களை மட்டுமல்ல... அவர்களின் நல்உறவையும் அவர்களின் மூலம் கிடைக்கும் நற்பயன்களையும் சேர்த்தே நாம் இழக்க நேரிடும்.

இதைத்தான் ஆன்மிகப் பெரியோர்கள் ‘வாழ்க்கையில் சில விஷயங்களைப் பெறுவதற்கு, இறைவனின் அருள் கிடைக்கும் வரும் வரை நாம் பொறுமையோடு இருந்தாக வேண்டும்’ என்கிறார்கள்.

இந்த அறிவுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல... எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். எனவேதான் எந்தச் செயலில் ஈடுபடும்போதும் மனதைத் திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்; பிரச்னையை தெளிவாகப் புரிந்துகொண்டு வேலையைப் பதற்றம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றி இலக்கை அடையவேண்டிய நேரத்துக்கு முன்னதாகவே அடைய முடியும். பதற்றத்தை தவிர்ப்போம்; எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்போம்..!

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...