Saturday, February 18, 2017


கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம்..! இதுவரை எவ்வளவு கட்டியிருக்கிறார்கள்?
கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம். அதில் தற்போது ரூ.5 லட்சம் மட்டுமே ‘செட்டில்’ செய்யப்பட்டுள்ளதாம். இதற்கிடையே பராமரிப்பு காரணங்களுக்காக ரிசார்ட்டை மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.



கடந்த பத்து நாள்களுக்கு மேலாக தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் குழப்பம் காரணமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் கிராமத்தில் உள்ள 'கோல்டன் பே' ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதை அடுத்தே, ரிசார்ட்டில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து வெளியேறி சென்னை வந்துள்ளனர்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை விடுத்ததால், சபையில் அமளி நிலவியது. கைகலப்பு ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் சபை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றால், எம்.எல்.ஏக்கள் அனைவரும் சொந்த வீடுகளுக்குத் திரும்புவார்கள். இல்லையென்றால், மீண்டும் ஏதாவது ரிசார்ட்டில் தங்க வைக்கப்படலாம் என்ற சூழல் இருந்தது. நடக்கும் களேபரங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த கூவத்தூர் ரிசார்ட் நிர்வாகம், பராமரிப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக ரிசார்ட் மூடப்படுவதாக அறிவித்தது. ரிசார்ட் வாசலில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கேட் இழுத்து மூடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் 3 தனி பஸ்களில் அந்த ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள சொகுசு அறைகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். மூன்று வேளையும் மட்டன், சிக்கன், மீன் என அசைவ விருந்து நடைபெற்றது. எம்.எல்.ஏக்களுக்குத் தேவையான ‘அனைத்து’ வசதிகளும் அங்கேயே கிடைத்தன. அல்லது வரவழைக்கப்பட்டன. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் எம்.எல்.ஏ-க்கள் ரிசார்ட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இரு எம்.எல்.ஏக்கள் தப்பி ஓடினர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ தன் சின்னம்மாவின் இறப்பிற்குக் கூட செல்லவில்லை. அந்தளவுக்கு கெடுபிடிகள்.



இந்தநிலையில் ரிசார்ட் மூடப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பத்து நாள்கள் எம்.எல்.ஏக்கள் அங்கு தங்கியிருந்ததற்கான பில் ரூ..60 லட்சம். இதுவரை ரூ.5 லட்சம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ-க்களுக்கு மூன்று வேளையும் விரும்பியதை சமைத்துப் போடவே ரிசார்ட் தரப்பில் பல லட்சங்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் பேர் வரை ரிசார்ட்டில் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அவ்வளவு பேருக்கு சமைக்கும் அளவுக்கு அங்கு கிச்சன் வசதி இல்லை.

ஆனாலும், வெளியே இருந்து சமையற்காரர்களை அழைத்து வந்து, வளாகத்தில் சாமியானா போட்டு, இடைவெளி இல்லாமல் உணவு சமைக்கப்பட்டுள்ளது. எப்படியும் ‘பில்’ வந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் கேட்டதை எல்லாம் செய்து தந்துள்ளது ரிசார்ட் நிர்வாகம். தற்போது சசிகலாவும் சிறையில் அடைக்கப்பட்டுவிட, ரிசார்ட் உரிமையாளரின் நம்பிக்கை மெல்லமெல்ல பொய்க்கத் தொடங்கியுள்ளது.

இது குறித்து ரிசார்ட் உரிமையாளர் பி.யோகேஷ்வரன் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘எம்.எல்.ஏக்கள் இங்கே தங்கியிருந்ததால், எங்களது வழக்கமான பிசினஸை இழந்தோம். ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கும் அளவுக்கு எங்களிடம் கிச்சன் வசதி கிடையாது. எம்.எல்.ஏக்கள் கேட்டது கிடைக்கும் என்று நம்பி வந்துள்ளனர். ஆனால், எங்களால் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப உணவுகளைத் தயாரிக்க முடியவில்லை. இதற்காக எங்கள் சர்வர்கள் அவர்களிடம் திட்டும் வாங்கியுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்ததும் அனைவரும் போய்விடுவார்கள். எங்களது பில் செட்டில் ஆகுமா என்ற அச்சம் இருக்கிறது’’ என்றார்.



மேலும், இந்த ரிசார்ட்டில் மது வகைகளும் ஸ்டாக் செய்து வைக்கப்படவில்லை. குறிப்பிட்ட அளவு மது பாட்டில்களே ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தது. திடீரென்று எம்.எல்.ஏக்கள் வந்துவிட்டதால், புதுச்சேரியில் இருந்து மதுவகைகள் வரவழைக்கப்பட்டதாக தெரிகிறது. ரிசார்ட்டைச் சுற்றி மூன்று பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் சசிகலா தரப்பு எம்.எல்.ஏக்களை தங்க வைக்க இந்த ரிசார்ட்டை தேர்வு செய்தது.

கடந்த 2011-ம் ஆண்டு யோகேஷ்வரனின் தந்தை ஆர்.பக்தவச்சலம் இந்த ரிசார்ட்டை தொடங்கியுள்ளார். 94 ஏக்கர் நிலத்தில் 6 ஏக்கரில் கட்டடங்கள் இருக்கின்றன. பக்தவச்சலம் ரோட்டரி முன்னாள் கவர்னராக இருந்தவர். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...