போர்க்களமானது தமிழக சட்டப்பேரவை! ஆரம்பம் முதல் என்ன நடந்தது?
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது... எதிரணியில் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரின் நாற்காலி, மைக்கை உடைத்தனர். சட்டப்பேரவை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டதால் தலைமைச் செயலகத்தில் துணை ராணுப்படையினர் குவிக்கப்பட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டது. காலை 9.30 மணி முதல் உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தலைமைச் செயலகத்துக்கு வரத்தொடங்கினர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சட்டப்பேரவைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நேப்பியர் பாலத்துக்கு முன்பே சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர், கோட்டைச் சாலையில் செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.
ஒவ்வொரு வாகனமாக தலைமைச் செயலகத்துக்கு வந்துகொண்டிருந்தது. காலை 10 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் காரில் வந்தனர். அப்போது, அனைத்து வாகனங்களையும் காவல்துறையினர் சோதனை செய்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த மு.க.ஸ்டாலின், கோட்டைக்கு முன்பு உள்ள பிரதான நுழைவு வாயிலுக்கு முன்பே காரை நிறுத்திவிட்டு எம்.எல்.ஏ.க்களுடன் சட்டப்பேரவைக்கு நடந்தே சென்றார். இதன் பிறகு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். மு.க.ஸ்டாலினுடன் வந்த எம்.எல்.ஏ.க்கள், பன்னீர்செல்வத்துடன் வந்த எம்.எல்.ஏ.க்களுடன் சிரித்துக்கொண்டே கைகுலுக்கிக்கொண்டனர். பின்னர் அவர்கள் பேரவைக்குள் சென்றனர்.
காலை 11 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. அப்போது, செம்மலை பேசியபோது அமளி ஏற்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர், "பொறுமையாக இருங்கள். நான் சபையை அமைதியாக நடத்த விரும்புகிறேன்" என்றார். இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அமைதி காத்தனர். பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் தொடங்கிவைத்தார். அப்போது, எதிரணி உறுப்பினர்கள், 'வாக்கெடுப்பு நடத்தக்கூடாது' என்று கோரி அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கிடையே சபாநாயகர், எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களை நிற்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது, ஒவ்வொரு பிளாக்காக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து, ஆதரவு... ஆதரவு என்று கூறினர். மூன்றாவது பிளாக்கில் 33 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் எழுந்து நிற்க முயன்றபோது, அவையில் கடும் அமளி ஏற்பட்டது. "வாக்கெடுப்பு நடத்தக்கூடாது. நாங்கள் இன்னும் பேசவேயில்லை. எப்படி வாக்கெடுப்பு நடத்த அனுமதிப்பது" என்று கூறி எதிரணியினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, தி.மு.க உறுப்பினர் பூங்கோதை, மேஜையின் மீது ஏறி கோஷமிட்டார்.
அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "உறுப்பினர்கள் அனைவரும் தொகுதி மக்களைச் சந்திக்க வேண்டும். 19 நாள்கள் ஏன் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்திருந்தார்கள்" என்று பேசினார். இதற்கு சபாநாயகர், "எந்த எம்.எல்.ஏவும் அடைத்து வைக்கப்படவில்லை. அதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது. நீங்கள் ஆதரவா, எதிர்ப்பா என்பதை மட்டும் இங்கே தெரிவியுங்கள்" என்றார். "இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம், வாக்கெடுப்பை ஒத்திவையுங்கள். இன்னொரு நாள் வாக்கெடுப்பு நடத்துங்கள்" என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
அடுத்து பேசிய காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் ராமசாமி , "வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயகர், "இது என்னுடைய முடிவு. இன்று காலையில் எடுத்த முடிவு கிடையாது. இரண்டு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அப்போது யாரும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. வாக்கெடுப்பில் கலந்துகொள்கிறோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றுதான் கூறினீர்கள். இப்போது, வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று சொல்கிறீர்கள். இது என்னோட முடிவு" என்றார்.
ஆனாலும், "ரகசிய வாக்கெடுப்புதான் நடத்த வேண்டும்" என்று எதிரணியினர் கூறினர். இந்தக் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததால் அவையில் அமளி நிலவியது. இதனிடையே, எடடிப்பாடிக்கு ஐந்து உறுப்பினர்கள்தான் ஆதரவு தேவை. ஆனால், எதிரணியினர் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரை முற்றுகையிட்டு நாற்காலி மற்றும் மைக்கை உடைத்தனர். அப்போது, நேரம் 12 மணியாக இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை அவர் அவையில் இருக்க மாட்டார். இந்தச் சூழ்நிலையில், அவையை ஒரு மணி வரை ஒத்திவைப்பதாகக் கூறிவிட்டு, சபாநாயகர் அவையில் இருந்து வெளியேறினார். ஒன்று, இரண்டு, மூன்று பிளாக்
வாக்கெடுப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் நான்கு, ஐந்து பிளாக் வாக்கெடுப்பு மட்டும்தான் முடியவேண்டும். அதற்குள் அவை ஒத்திவைக்கப்பட்டது. நான்கு, ஐந்து பிளாக்குகள் பன்னீர் ஆதவுர மற்றும் திமுக உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், தலைமைச் செயலகத்துக்கு துணை ராணுப்படை, அதிவிரைவுப்படையினர் எட்டு வாகனங்களில் வந்து குவிந்துள்ளனர். தொடர்ந்து தலைமைச் செயலக வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.
No comments:
Post a Comment